ஒருவரை தோற்றத்தைவைத்து எடை போடலாமா? - உண்மை சொல்லும் கதை #MotivationStory | Is it wrong to judge people on their physical appearance? The story explains

வெளியிடப்பட்ட நேரம்: 08:12 (28/05/2018)

கடைசி தொடர்பு:08:16 (28/05/2018)

ஒருவரை தோற்றத்தைவைத்து எடை போடலாமா? - உண்மை சொல்லும் கதை #MotivationStory

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவான வரலாறு தெரியுமா உங்களுக்கு?

ஒருவரை தோற்றத்தைவைத்து எடை போடலாமா? - உண்மை சொல்லும் கதை #MotivationStory

கதை

`ஒரு மனிதனை அவனுடைய பதில்களைக்கொண்டு எடைபோடாதீர்கள்; கேள்விகளைக்கொண்டு எடை போடுங்கள்!’ என்கிறார் ஃபிரெஞ்ச் எழுத்தாளரும் தத்துவவியலாளருமான வோல்டேர் (Voltaire). இது ஒரு நுட்பமான அணுகுமுறை. ஒருவரிடம் கேள்விகள் கேட்கும்போது, நமக்குத் தெரிந்ததைக் கேட்கிறோம்; அவற்றுக்குப் பதில் பெறுகிறோம். ஆனால், ஒருவர் நம்மிடம் கேள்வி கேட்கும்போதுதான், அவருக்கு என்னென்ன தெரியும், அவர் எதையெல்லாம் கற்றுவைத்திருக்கிறார் என்பதையெல்லாம் நாம் புரிந்துகொள்கிறோம். கேள்வி, பதில் இருக்கட்டும். இன்றைக்கும் தோற்றத்தை, அணிந்திருக்கும் ஆடையை, உடைமைகளை வைத்துத்தான் ஒருவரை எடைபோட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் நம்மில் பலபேர் சராசரிகள்தான். ஓர் ஆளின் தோற்றத்தைவைத்து எடை போடும் பழக்கம் எவ்வளவு தவறு என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை!

அந்தத் தம்பதி ஒரு ரயிலில் வந்து அந்த ஊரில் இறங்கியிருந்தார்கள். அது காலை நேரம். ஒரு ஹோட்டலில் அறை எடுத்து, தங்களைக் கொஞ்சம் ரெஃப்ரெஷ் செய்துகொண்டு உடனே கிளம்பிவிட்டார்கள். அவர்கள் போய்ச் சேர்ந்த இடம், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முதல்வர் இருக்கும் அலுவலகம்.

முன்கூட்டியே பல்கலைக்கழக முதல்வரைச் சந்திக்க அவர்கள் அப்பாயின்ட்மென்ட் எதையும் வாங்கியிருக்கவில்லை. ஆனாலும், எப்படியாவது அவரைச் சந்தித்துவிட வேண்டும் என்கிற வேட்கை மட்டும் அவர்களுக்கு இருந்தது. முதல்வரின் செக்ரட்டரியிடம் போனார்கள். முதல்வரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னார்கள். செக்ரட்டரி அந்தக் கணவன், மனைவி இருவரையும் பார்த்தார். மிகச் சாதாரணமான உடையில் அவர்கள் இருந்தார்கள். அமெரிக்காவின் மிக முக்கியமான ஒரு பல்கலைக்கழகத்தின் முதல்வரைச் சந்திக்கப் போகும்போது உடை விஷயத்தில் காட்டவேண்டிய அக்கறையைக்கூட அவர்கள் செய்திருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அப்பாயின்ட்மென்ட் எதுவும் அவர்களிடம் இல்லை.

கணவன் - மனைவி

``நாங்கள் முதல்வரைச் சந்திக்க வேண்டும்’’ என்றார் அந்த ஆண்.

``அவர் ரொம்ப பிஸியாக இருக்கிறார்’’ என்றார் அந்தப் பெண் செக்ரட்டரி.

``சரி. அவர் வரும்வரை நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்றார் கணவருடன் வந்திருந்த அந்தப் பெண்மணி.

சில மணி நேரங்களில் செக்ரட்டரி அவர்கள் வந்திருந்ததை மறந்தே போனார். காத்திருந்து பார்த்துவிட்டு, பல்கலைக்கழக முதல்வரை சந்திக்க முடியாமல், அவர்களாகவே திரும்பிப் போய்விடுவார்கள் என்பது அவரின் எண்ணம். மாறாக, அந்தத் தம்பதி இருக்கும் இடத்தைவிட்டு அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் காத்திருப்பு செக்ரட்டரிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இனி அவர்களை வெளியே போகவும் சொல்ல முடியாது. எனவே, பல்கலைக்கழக முதல்வரின் அறைக்குள் போனார். விஷயத்தைச் சொன்னார்.

``நீங்கள் சில நிமிடங்கள் அவர்களுடன் பேசினால் போதும்... அவர்கள் போய்விடுவார்கள்’’ என்றார். முதல்வர், பெருமூச்சுவிட்டபடி தலையை அசைத்தார். உண்மையில், வெளியே காத்திருக்கும் அந்தத் தம்பதியிடம் பேசுவதற்கு அவருக்கு நேரமிருக்கவில்லை. அதோடு, அவர்கள் அணிந்து வந்திருந்த உடை அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. அவர் ஏற்கெனவே, ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்திருந்தார்.

தம்பதி உள்ளே வந்தார்கள். எரிச்சலோடும் கொஞ்சம் அகம்பாவத்தோடும் பார்த்தார் முதல்வர். வந்தவர்கள் முதல்வருக்கு வணக்கம் சொன்னார்கள். அந்தப் பெண்மணிதான் முதலில் பேசினார்... ``எங்களுடைய மகன் இந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்தான் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. இங்கே படிக்க வந்த நாள்களில் மகிழ்ச்சியாகவும் இருந்தான். ஒரே வருடம்தான். டைஃபாய்டு காய்ச்சல் வந்து இறந்துபோனான். நானும் என் கணவரும் அவனுக்காக இங்கே ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த முடிவெடுத்திருக்கிறோம். அதாவது, இந்தப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே...’’

இதைக் கேட்டு முதல்வருக்கு எரிச்சல் இன்னும் அதிகமானது... ``மேடம்! இங்கே படிக்கும் ஒவ்வொருவருக்கும் சிலை வைப்பது என்பது முடியாத காரியம். அப்படிச் செய்தால், இது பல்கலைக்கழகமாக இருக்காது; கல்லறையாகத்தான் இருக்கும்...’’

தோற்ற மதிப்பீடு

அந்தப் பெண்மணி உடனே சொன்னார்... ``இல்லை... இல்லை. நாங்கள் இங்கே எங்கள் மகனின் சிலையை வைப்பதற்காக வரவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு, அவன் நினைவாக ஒரு கட்டடத்தைக் கட்டித்தரலாம் என்று வந்திருக்கிறோம்...’’

முதல்வர் இப்போது அவர்களை ஏளனமாகப் பார்த்தார். மிகச் சாதாரணமான உடையிலிருக்கும் இவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குக் கட்டடம் கட்டித் தரப் போகிறார்களாம். ``கட்டடமா? ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டடத்தைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகுமென்று உங்களுக்குத் தெரியுமா? இந்த பல்கலைக்கழகத்தைக் கட்டி முடிக்க நாங்கள் எவ்வளவு செலவழித்திருக்கிறோம் தெரியுமா? ஏழரை மில்லியன் டாலர்...’’ என்றார் முதல்வர்.

அந்தப் பெண்மணி ஒருகணம் அமைதியாகயிருந்தார். முதல்வர் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களின் வாயைக் கட்டிவிட்டோம் என்கிற திருப்தி அவருக்கு!

இப்போது அந்தப் பெண்மணி, தன் கணவர் பக்கம் திரும்பினார். ``ஒரு யுனிவர்சிட்டி ஆரம்பிக்க இவ்வளவுதான் செலவாகுமா? ஏங்க... நாமே ஒரு பல்கலைக்கழகத்தை ஆரம்பித்துவிட்டால் என்ன?’’ என்று கேட்டார். கணவர், சற்றுக்கூட யோசிக்காமல், சரி என்பதுபோல் தலையசைத்தார். பல்கலைக்கழக முதல்வர் அவர்களை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

கணவனும் மனைவியும் எழுந்தார்கள். முதல்வரிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் வெளியே போனார்கள். பிற்பாடுதான் அவர்கள் யாரென்று ஹார்வர்டு பல்கலைக்கழக முதல்வருக்குத் தெரியவந்தது. வந்திருந்தவர்கள் லீலேண்டு ஸ்டான்ஃபோர்டு (Leland Stanford) மற்றும் அவரின் மனைவி ஜேன் ஸ்டான்ஃபோர்டு (Jane Stanford) என்பதும், பெரும் பணக்காரர்கள்... சமூகத்தில் கௌரவமான இடத்தில் இருப்பவர்கள் என்பதும்!

கல்லூரி

அந்தத் தம்பதி தங்களின் மகனின் நினைவாக ஆரம்பித்ததுதான் கலிஃபோர்னியா, பாலோ ஆல்டோ-வில் (Palo Alto) இருக்கும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University)!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close