''வெசப் பாம்புங்க சும்மா 'உஸ்ஸூ'னு சீறிக்கினு வரும் பாருங்க...!'' பாம்பு பிடிப்பவர் வீட்டில் என்ன நடக்கும்? | Have you ever thought of how the life of snake catcher would be? Check this out!

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (28/05/2018)

கடைசி தொடர்பு:16:40 (28/05/2018)

''வெசப் பாம்புங்க சும்மா 'உஸ்ஸூ'னு சீறிக்கினு வரும் பாருங்க...!'' பாம்பு பிடிப்பவர் வீட்டில் என்ன நடக்கும்?

ம்பானி வீடு முதல் நம் அண்டை வீடு வரை, கணவரின் பொருளாதார உயர்வுகளுக்குக் கைகொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை ஏராளம். அவர்களில் ஒருவராகத்தான் நம் கண்களுக்குத் தெரிகிறார் சரோஜா. கணவர் சங்கர், விஷப் பாம்புகளைப் பிடிக்கச் செல்லும்போது, உதவிக்காகச் செல்பவர் இவர். தாம்பரம் தாண்டி, வேங்கடமங்கலம் என்கிற கிராமத்தில் வசித்துவருகிறார்.

சரோஜா

``இந்த சுத்து வட்டாரத்துல யாரு வீட்டுலேயாவது பாம்பு புகுந்துட்டா, அதைப் புடிச்சு காட்டுப் பக்கமா விடறதுதான் இவருக்கு வேலை. இவரு மொத சம்சாரம் தவறிப்போச்சு. எனக்கும் மொத வாழ்க்கை சரியில்லாம பூடுச்சு. ரெண்டு பேருக்குமே ரெண்டாம் வாழ்க்கைதான்" எனத் தங்கள் வாழ்க்கைப் பற்றி பேச ஆரம்பித்த சரோஜா, ``யம்மா... உலைக் கொதிக்குது. அரிசியைப் போட்டுட்டு வந்துடறேன். இவருக்கிட்ட பேசிட்டிருங்க" என்றபடி கணவர் பக்கம் திரும்பி, ``தே.. பேசிட்டிரு வந்துடறேன்" எனச் செல்கிறார்.

``தாத்தன் காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையா பாம்புப் புடிக்கிறதுதாம்மா எங்க வேலை. லைசென்சு வெச்சிருக்கேன். இங்கே மரம், மட்டைன்னு பச்சைப்பசேல்னு இருக்கில்லையா? அதான் விஷமில்லாத பாம்புகளிலிருந்து விஷப் பாம்புங்க வரை நடமாட்டம் அதிகம். சில நேரத்துல அக்கம்பக்கத்துல வீடுங்களுக்குள்ள போயிடும். அப்போ நம்பளைத்தான் கூப்பிடுவாங்க. அதுங்க ஒளிஞ்சிருக்க இடத்தைக் கண்டுபுடிச்சு காட்டுக்குள்ளே விட்டா பணம் தருவாங்க" என்கிறார் சங்கர். 

திரும்பிவந்த சரோஜா, ``கல்யாணம் முடிச்சதிலிருந்து இவரு பாம்புப் புடிக்கப் போறப்ப நானும் கூடவே போயிருவேன். இல்லைன்னா இவரு வீடு திரும்பற வரைக்கும் நெஞ்சு பதைபதைப்பாவே இருக்கும்ல. ஆரம்பத்துல இவரோடு போறப்போ ரொம்ப பயமா இருந்துச்சு. அதிலும் வெஷப் பாம்புகளைப் புடிக்கும்போது அது சும்மா 'உஸ்ஸூ'னு சீறிக்கினு வரும் பாருங்க, எனக்குக் குலை நடுங்கிடும். ஆனா, இவரு பயப்படாம வாகா புடிச்சுடுவாரு. நானு கவட்டைக் குச்சியால் அதோட கழுத்துல, இல்லன்னா நடுமுதுகுல அழுத்திப் புடிச்சுப்பேன். இல்லன்னா சீறிட்டு, புடிக்க வர்றவரை கொத்திடும். அப்புறம் இவரு புடிச்ச பாம்பை கோணிப்பையில் போட்டுருவேன்" என்கிற சரோஜா, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக கணவருக்கு இப்படி உதவி செய்துவருகிறார்.

பாம்புப் பிடிக்கும்போது ஏதோ வேரை வாயில் கடித்துக் கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறதே என்றால், ``அப்படியெல்லாம் ஒண்ணுமில்லம்மா. இவரு அப்படியெல்லாம் ஒண்ணத்தையும் கடிச்சிக்கினுப் போறதில்லை. எல்லாம் தைரியம் இருந்தா போதும்" என்கிற சரோஜா, தன் கணவர் பிடித்த பாம்புகளை ஒரு நாளும் தன் வீட்டில் வைக்க அனுமதித்ததே இல்லையாம். ``பாம்பைப் புடிச்ச கையோட காட்ல வுட்டுட்டுதான் வூட்டுக்கு வருவோம். வூட்ல குழந்தைங்க போக வர இருக்குமில்ல'' என்கிறார். வருமானம் பற்றிக் கேட்டதுக்கு, ``இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானம் எப்படிம்மா பத்தும், தினமுமா கிடைக்கும்...? மத்த நேரத்துல கிடைக்கிற கூலி வேலைக்கெல்லாம் போயிடுவோம்" என்கிறார் சரோஜா யதார்த்தமாக.

பாம்பு

தனக்கென குழந்தை இல்லையென்றாலும், முதல் மனைவியின் மூன்று மகள்களை தன் குழந்தைகள் என்றே குறிப்பிடுகிறார். ``ரெண்டு பொம்பளைப் புள்ளைகளும் புருஷன், குடும்பம்னு நல்லா இருக்குதுங்க. ஒரு புள்ளதான் புருஷனை இழந்து எங்களோடு கிடக்குது. அது குழந்தைகளுக்கு ஏதாவது நல்லது பண்ணணும்" எனப் பெருமூச்சுவிடுகிற சரோஜாவிடம், ``உங்கள் வயது என்னம்மா?'' எனக் கேட்டால், "அது இருக்கும் அறுவது, அறுவத்தைஞ்சு" என்கிறார் குத்துமதிப்பாக.

பிடிக்கிற விஷப் பாம்புகளைக் கொன்றுவிடுவீர்களா எனக் கேட்டால், ``அய்யய்யோ உசுரும்மா, அதைப்போய் கொல்வாங்களா? மத்த பாம்புகளை மாதிரி அதுகளையும் காட்லதான் விடுவோம். அதுகளும் பொழைக்கணுமில்ல" என்கிறார் தாய்மையுடன்.

சரோஜா போன்ற எளிய மக்களுக்குத்தான் தெரியும் உயிரின் உன்னதம்! 


டிரெண்டிங் @ விகடன்