விலங்குகளுக்கும் புற்று நோய் வருவதுண்டு... காரணம் என்ன தெரியுமா? | Animals affected by cancer... Humans are the main reason

வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (29/05/2018)

கடைசி தொடர்பு:14:24 (29/05/2018)

விலங்குகளுக்கும் புற்று நோய் வருவதுண்டு... காரணம் என்ன தெரியுமா?

இத்தகைய மனிதச் செயல்கள் விலங்குகளிலும் புற்றுநோயை வரவழைக்கின்றனவா? புற்றுத்தொற்றுகள் என்றழைக்கபடும் அளவிற்கு, மற்ற உயிரினங்களுக்குப் புற்றுநோயைத் தரும் அளவிற்கு மனித இனம் ஆபத்தானதா?

விலங்குகளுக்கும் புற்று நோய் வருவதுண்டு... காரணம் என்ன தெரியுமா?

புகைப்பிடித்தல், ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுப்பது, மாசுபாடு, உணவில் கலக்கப்படும் ரசாயனங்கள் போன்ற பல காரணங்களால் நமக்குப் புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறோம். ஆனால், இத்தகைய மனிதச் செயல்கள் விலங்குகளிலும் புற்றுநோயை வரவழைக்கின்றனவா? புற்றுத்தொற்றுகள் என்றழைக்கப்படும் அளவுக்கு, மற்ற உயிரினங்களுக்குப் புற்றுநோயைத் தரும் அளவுக்கு மனித இனம் ஆபத்தானதா?

அரிசோனா மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சி மாணவர்கள் 'இயற்கைச் சூழலியல் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி' என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தனர். ``மனிதர்கள் மற்ற உயிரினங்களுக்குப் புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவுக்குச் சூழலியல் சீர்கேடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்" என்கிறார்கள் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களான மேத்தியூ ஜிராடியூ (Mathieu Giraudeau) மற்றும் டூல் செப் (Tuul Sepp).

விலங்குகள்

அதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதைப் புரிய வைக்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வில் பங்குபெற்ற மேத்தியூவும் டூல்லும் மற்ற சில சர்வதேச ஆய்வாளர்களும் மற்ற உயிரினங்களுக்கு மனிதர்களால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைப் பற்றிய முந்தைய அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளையும் பட்டியலிட்டனர். ரசாயன மாசுபாடுகளால் பாதிக்கப்படும் கடல் மற்றும் பல்வேறு நீர்நிலைகள், அணு உலைகளில் இருந்து உலகளவில் வெளியேற்றப்படும் அணுக்கதிர்கள், நிலம் மற்றும் நீர் சார்ந்த சுற்றுச்சூழல்களில் குவிக்கப்படும் நுண்ணிய பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தையும் அதில் குறிப்பிட்டார்கள்.

"என் அளவில் மிகவும் வருந்தவைக்கும் விஷயம் என்னவென்றால், மற்ற உயிரினங்களின் வாழிடங்களை அழிக்கக்கூடாது, காற்று, நீர் போன்ற இயற்கை வளங்களை மாசுபடுத்தக்கூடாது, விலங்குகள் சாப்பிட மனித உணவுகளை அளிக்கக்கூடாது என்பதெல்லாம் நமக்குத் தெரியும் என்பதுதான்." என்கிறார் அந்த ஆய்வின் முக்கிய ஆசிரியரான திரு. டூல் செப் ( Tuul Sepp). 

வளிமண்டலத்தில் இருக்கும் சில வைரஸ் கிருமிகள் சூழலின் தன்மை மாறும்போது மனிதர்களுக்குப் புற்றுநோயை விளைவிக்கின்றன. அதாவது மனிதர்களின் உடலில் இருக்கும் அணுக்களை அவை உயிர் வாழத் தகுந்தவையாக மாற்றிக்கொள்கின்றன. அதையேதான் நாமும் செய்துகொண்டிருக்கிறோம். இந்தப் புவியை அதன் தட்பவெப்பநிலையை, சுற்றுச்சூழலை நமது ஆசைக்கும், வசதிக்கும் தகுந்தவாறு மாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த மாற்றங்கள் புவியின் மீது மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும்போது அதுவும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறது. அந்தப் புற்றுநோயால் அதில் வாழும் மற்ற உயிர்கள் மனிதன் என்னும் புற்றுநோய்க் கிருமியால் அழிக்கப்படுகின்றன. அவை நம்மால் பல வழிகளில் அழிவைச் சந்திக்கின்றன. அதில் ஒன்றாகப் புற்றுநோயும் தற்போது சேர்ந்துவிட்டது.

பூமியில் அதிகமாகிவரும் காற்று மாசுபாடுகள் மனிதர்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை அறிந்துகொள்ள சில மாதங்களாக லாஸ் ஏஞ்சல்ஸில் எலிகளை வைத்து ஆய்வு நடத்தினர். அதில் எலிகள் பெருமளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவது தெரிந்தது. இந்த ஆராய்ச்சி காற்று மாசினால் மனிதர்களுக்கான பாதிப்புகளை அளவிட உதவியாக இருந்ததென்று அவர்கள் தெரிவித்தனர். அந்த ஆராய்ச்சியின் விளைவுகளில் கிடைத்த மற்றுமொரு செய்தியை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். அதுதான், மற்ற விலங்குகளையும் புற்றுநோய் பாதிக்கலாம் என்பது.

எலிகள்

விலங்குகளின் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு ரசாயன உரங்கள், செயற்கை வெளிச்சங்களில் அதிக நேரம் வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவது, மனித உணவுகளை உட்கொள்வது போன்றவை முக்கியக் காரணங்கள். அந்த உடல்நிலை பாதிப்புகளில் புற்றுநோயும் ஒன்றாக இருக்குமா என்பது இதுவரை நாம் சிந்திக்காத ஒன்றாகவே இருந்துள்ளது.

அதில் முக்கியப் பங்கு வகிப்பன செயற்கை ஒளிகளும், மனித உணவுகளும்தான். உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் போன்றவை புற்றுநோய்க்கான அடிப்படைக் காரணிகளாக எப்படி மனிதர்களுக்குக் கூறப்படுகின்றனவோ அதே காரணிகள்தான் விலங்குகளிலும் காணப்படுகின்றன. பெரும்பாலான விலங்கினங்கள் மனித உணவுகளை உண்ணும் அளவுக்கு நமது வாழ்விடங்களுக்கு அருகில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம்தான் அவற்றின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனித உடலில் எப்படி இரவுநேரங்களில் போதுமான இருள் இல்லாமல் உடலின் ஹார்மோன் சுரப்பிகள் பாதிப்படைந்து அது புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றனவோ அதேபோன்றுதான் நகரங்களுக்கு அருகில் வாழ்ந்துகொண்டிருக்கும் விலங்குகளுக்கும். உதாரணமாகப் பறவைகள், அவற்றின் உடலமைப்பு வேறுவிதமாக இருந்தாலும் ஹார்மோன் செயற்பாடுகள் மனிதர்களோடு ஒப்பிடக்கூடிய வகையில்தான் இருக்கின்றன. பறவைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டபோது அதற்கான விளைவுகளில் முக்கியக் காரணியாக விளங்கியது ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்பட்ட தொய்வுதான். அதற்குக் காரணம் அவை அதிகமான செயற்கை ஒளியில் இருந்ததுதான்.

இதுபோன்று மற்ற விலங்குகளிலும் ஆய்வு நடத்தி வரும் இவர்கள் விலங்குகளுக்கான புற்றுநோய்க் காரணிகளில் முக்கியப் பங்கு வகிப்பது அவற்றின் வாழிடத்தின் மீதான மனிதர்களின் தலையீடுகள்தான் என்பதை உறுதி செய்துள்ளனர். இத்தகைய ஆய்வுகளை வனவிலங்குகளோடும், மனிதர்களுக்கு அருகாமையில் வாழும் விலங்குகளோடும் ஒப்பிட்டு ஆய்வு நடத்த பையோமார்க் (Biomark) என்ற முறையைக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

வனவிலங்குகள்

``அவற்றுக்கு நாம் இழைக்கும் கொடுமைகள் நமக்குத் தெரியும். தெரிந்திருந்தாலும் அதையேதான் செய்துகொண்டிருக்கிறோம். என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், அதைச் செய்வதுதான் இல்லை. இருப்பினும் இன்றைய குழந்தைகளுக்குத் தரப்படும் சூழலியல் சார்ந்த விழிப்பு உணர்வுக் கல்விகள் நம்பிக்கையூட்டுகின்றன. ஒருவேளை வருங்காலத் தலைமுறைகள் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். ஆனால் எனது பயம் என்னவென்றால், அதுவரை நாம் விட்டுவைக்கவேண்டுமே!"


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close