தண்ணீருக்குப் பயந்த குட்டி யானை இன்று நீச்சலடிக்கிறது...15 மாதங்களில் நடந்தது என்ன? | Moyo a Baby Elephant overcomes the fear of water

வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (30/05/2018)

கடைசி தொடர்பு:10:48 (30/05/2018)

தண்ணீருக்குப் பயந்த குட்டி யானை இன்று நீச்சலடிக்கிறது...15 மாதங்களில் நடந்தது என்ன?

ஜிம்பாப்வே நாட்டின் ஒரு காட்டுப் பகுதி. பட்டையான பெரிய காதுகளைக் கொண்ட ஆப்பிரிக்க யானைகள் வாழும் காடு அது. வெப்பம் அதிகம். அது யானைகள் வலசைப் போகும் காலம்.

தண்ணீருக்குப் பயந்த குட்டி யானை இன்று நீச்சலடிக்கிறது...15 மாதங்களில் நடந்தது என்ன?

"கொஞ்சம், கொஞ்சமாக...அந்தக் கொஞ்சம் ஒருநாள் அதிகமாகும். அந்தக் கொஞ்சம் ஒரு நாள் மிக அதிகமாகும்." 

- ஆப்பிரிக்க பழமொழி. 

 ஜிம்பாப்வே நாட்டின் ஒரு காட்டுப் பகுதி. பட்டையான, பெரிய காதுகளைக் கொண்ட ஆப்பிரிக்க யானைகள் வாழும் காடு அது. வெப்பம் அதிகம். அது யானைகள் வலசைப் போகும் காலம். 

பல யானைக் கூட்டங்கள் அந்தப் பரந்த நிலப்பரப்பைக் கடந்துகொண்டிருந்தன. அந்தக் காட்சிகளும் அந்த வாழ்க்கையும் கற்பனைக்கே அத்தனை அழகாக இருந்தது. இரவும், பகலும் நடக்கும். சக கூட்டங்களை ஏதோ ஓர் இடத்தில் பார்க்கும்போது, நண்பர்களோடு அலவளாவும். தங்களுக்குத் தேவையான உணவைத் தேடும். இப்படியாக கொஞ்சம், கொஞ்சமாக தூரம் கடக்கும். அது ரொம்பவே அழகாக இருக்கும். அழகு மட்டுமல்ல. ஆபத்தும் நிறைந்திருக்கும். 

ஜிம்பாப்வே காட்டில் யானைக் கூட்டம்

கிளம்பும் கூட்டம் அதே எண்ணிக்கையில் மீண்டும் திரும்புமா என்பது சந்தேகம்தான். ஆனால், அனைவரும் நலமாக திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான் அந்த ஜீவராசிகள் கிளம்புகின்றன. அப்படித்தான் அந்தக் கூட்டமும் கிளம்பியது. 

அந்தக் கூட்டத்தில் அவளின் பெரிய வயிறு, மிகப் பெரிதாக வீங்கியிருந்தது. எந்த நேரமும் குழந்தையைப் பிரசவிக்கலாம் என்ற நிலை. அவளுக்காக அந்தக் கூட்டம் மெதுவாக...சில சமயம் மிக மெதுவாக நகர்ந்தது. அவளால் கிளைகளை உடைக்க முடியாத சூழலில் சக தோழர்கள் கிளை உடைத்து உணவளித்தனர். அவளுக்கு ஒரு பக்கம் பெரு மகிழ்ச்சி. ஒரு பக்கம் கொஞ்சம் பயமும் இருந்தது. 
வெயில் உக்கிரமாக இருந்தது. இந்த நேரத்தில் வலி வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. வலியில் பிளிறினாள். மொத்தக் கூட்டமும் நின்றது. சில நிமிடங்களில் அழகான அந்தக் குட்டியை அவள் பெற்றெடுத்தாள். கூட்டம் அதைக் கொண்டாடியது. பெற்றெடுத்த வலியோடு, தன் குழந்தையைக் கண்டு அவள் சிரித்தாள். அது ஓர் அழகான பெண் குழந்தை. 

ஓரிரு நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் கிளம்பியது அந்தக் கூட்டம். அங்கு ஒரு காட்டாறு ஓடிக்கொண்டிருந்தது. அதைக் கடக்க வேண்டும். எல்லோருமே அதற்கு பழக்கப்பட்டவர்கள்தான். ஆனால், கூட்டத்துக்குப் புதிதாக வந்துள்ள அந்தக் குட்டி எப்படி இதைக் கடப்பாள் என்ற சந்தேகம் இருந்தது பலருக்கும். ஆனால், அவள் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. ``இளங்கன்று பயமறியாது" என்று சொல்வார்களே...அதுபோல். 

காட்டாற்றின் வேகம் வழக்கத்தைவிடவும் அதிகமாக இருந்தது. பெரியர்களின் ஒரு கூட்டம் முன்னால் கடந்தது. இடையே இந்தப் புதியவளை அனுப்பினார்கள். முதன்முறையாக தண்ணீரில் கால் வைக்கிறாள் அவள். அது அவளுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. அதில் ஆபத்து இருப்பது குறித்து அவளுக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், ஆபத்து என்றால் என்னவென்பதே அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. 

அந்த ஆற்றை அவள் கடக்க, கடக்க...நீர் வேகமெடுத்தது. அவளால், அதைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஓடும் ஆற்றில் கலந்தாள். அவள் தாயும், அந்தக் கூட்டமும் பெரும் குரலெடுத்து பிளிறின. ஆனால், அந்தப் பிளிறலால் ஆற்றின் வேகத்தை குறைத்திட முடியவில்லை. அவள் காணாமல் போனாள். கூட்டம் ஒரு வழியாக ஆற்றைக் கடந்தது. கூட்டம் தொடர்ந்து முன்னேறுவதா இல்லை, என்ன செய்வதென தெரியாமல் நின்றது, அந்தத் தாய் விடாமல் அழுதுகொண்டேயிருந்தாள். 

இந்தப் பக்கத்தின் கதை இவ்வளவுதான் நமக்கு தெரியும். இனி அந்தப் பக்க கதையைப் பார்க்கலாம். 

அந்தக் குட்டிக்கு மூச்சுத்  திணறியது. தண்ணீர் குளிர்ந்தது. அது அதற்கு நன்றாக இருந்தது. அது கொடுத்த மகிழ்ச்சியில்தான் தைரியமாக தண்ணீரில் இறங்கியது. ஆனால், இப்போது ஆற்றில் அடித்துச் செல்லப்படும் இந்த நொடி, அதற்குப் பெரும் பயம் எடுத்தது. என்ன செய்வதென தெரியவில்லை. நீண்ட நேரம் அப்படியே பயணித்தது. ஒரு கட்டத்தில் ஆற்றின் வேகம் குறைந்தது. ஒரு வழியாக கரையை அடைந்தது அந்தக் குட்டி. அது அதிர்ச்சியில் இருந்தது. அதன் உடலில் இருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. அந்தச் சத்தம் அதன் காலில் விழுந்தது. ஆனால், அதற்கு என்ன செய்வதென தெரியவில்லை. அங்கு இரண்டு ஜீப் வந்து நின்றன. அதிலிருந்து வனக்காவலர்கள் இறங்கினர். இந்தக் குட்டியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். பிறந்து சில நாள்களைக் கூட தாண்டியிராத அத்தனை சிறிய குட்டி. 

மோயோ - ராக்ஸி

உடனடியாக சாட்டிலைட் போனில் தகவல் தெரிவித்தார்கள். அதைக் கொண்டு செல்ல வண்டி வந்தது. அதை "வைல்ட் இஸ் லைஃப்" (wild is life) சரணாலய பூங்காவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதன் நிறுவனர் ராக்ஸி டான்குவெர்ட்ஸ் (Roxy Danckwerts) வெளியில் வந்து அந்த யானைக் குட்டியைப் பார்க்கிறார். அள்ளியணைத்துக் கொஞ்சுகிறார். அதன் முழுக் கதையைக் கேட்கிறார். அதற்கு "மோயோ" (Moyo) என்று பெயரிடுகிறார். (மோயோ என்பது ஆண் பெயர். ராக்ஸி முதலில் அது ஆண் குட்டி என்று நினைத்து மோயோ என்று பெயரிட்டார். பின்னர், அதுவே இருக்கட்டும் என்று மாற்றவில்லை) 

மோயோ ராக்ஸியின் செல்லப் பிள்ளையாக வளர்கிறாள். எந்நேரமும் ராக்ஸியின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பாள்.

மோயோ

சமையலறைக்குப் போய் ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து சாப்பிடுவாள். ஸ்டீல் ஸ்பூன்களின் சத்தம் அவளுக்குப் பிடிக்கும். அதை எடுத்துப் போட்டு விளையாடுவாள். 

"அவளுக்கு என் குரல், என் வாசம் என அத்தனையும் தெரியும். நான் எங்கு இருந்தாலும், என்னைத் தேடி வந்துவிடுவாள்." என்று சொல்கிறார் ராக்ஸி. 

வீட்டுக்கு வந்த சில நாள்களில் ராக்ஸிக்கு ஒரு விஷயம் தெரிந்தது. மோயோவுக்கு தண்ணீர் என்றால் பெரும் பயம் இருந்தது. தன் வாழ்வில் நடந்த அந்த சம்பவம் அவள் ஆழ் மனதில் பதிந்துவிட்டிருந்தது. ராக்ஸி அதிலிருந்து மோயோவை மீட்டெடுக்க விரும்பினார். 15 மாதங்கள் தொடர் முயற்சிகளை எடுத்தார் ராக்ஸி. நிறைய தெரபிகளின் மூலம் கொஞ்சம், கொஞ்மாக முயன்றார். இறுதியாக 15 மாதங்கள் கழித்து, முதன்முறையாக பெரிய நீர்நிலைக்கு மோயோவை அழைத்துச் சென்றார் ராக்ஸி. 

மோயோ - ராக்ஸி

மோயோ நீரைப் பார்த்ததுமே கொஞ்சம் பின்வாங்கினாள். ராக்ஸியை இறுக்கிப் பற்றிக் கொண்டாள். ராக்ஸீ அவளை விட்டுத் தள்ளி நீரில் இறங்கினார். மோயோவை கூப்பிட்டார். ராக்ஸி தன்னுடைய செல்ல நாயையும் நீரில் இறக்கினார். நீண்ட நேரம் மோயோ பயத்தில் இறங்காமலேயே இருந்தாள். பின்னர் மெதுவாக நீரில் கால்களை வைத்தாள். ராக்ஸி நீரில் இருப்பது ஒருவித தைரியத்தை மோயோவுக்கு அளித்தது. 

ராக்ஸி மீதான் அன்பும், நம்பிக்கையும் மோயோவை நீரில் இறங்கி முன்னேற வைத்தது. ராக்ஸியின் அருகில் சென்றது. ராக்ஸி அவளின் தும்பிக்கையைப் பிடித்து இழுத்து விளையாடினார். மோயோ கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் மீதான பயத்தை மறந்து விளையாட ஆரம்பித்தாள். இப்பொழுதெல்லாம் தனியாகவே தண்ணீரில் இறங்குகிறாள் மோயோ. 

மோயோ - ராக்ஸி

மோயோ இப்பொழுது நன்றாக வளரத் தொடங்கிவிட்டாள். இப்போது அவளால் ராக்ஸி போகும் எல்லா இடங்களுக்கும் போக முடிவதில்லை. வீட்டுக்குள் அவ்வளவு எளிதாக சுற்ற முடிவதில்லை. அவளுக்குப் பிடித்த அந்த சோபாவில் அவளால் படுக்க முடிவதில்லை. ஆனாலும், ராக்ஸியை விட்டு மட்டும் போவதில்லை. ஆனால், மோயோ பிரியத்தான் வேண்டும். பல மிருகங்களைத்  தன் பூங்காவில் வளர்த்து வந்தாலும், ராக்ஸிக்கு மோயோ மீது தனிப் பெரும் காதல் உண்டு. ஆனால், இருவரும் இப்போது பிரியும் தருவாயில் இருக்கிறார்கள். 

"இங்கு எத்தனையோ உயிர்கள் இருந்தாலும், எனக்கு ஏனோ மோயோ மீது ஒரு பெரிய நட்பு, நம்பிக்கை, அன்பு உண்டு. அவளை விட்டுப் பிரிவது எனக்குப் பெரிய சோகமாகத் தான் இருக்கும். ஆனால், இந்தப் பாதையை நான் தேர்ந்தெடுக்கத் தான் வேண்டும். அவள் வாழ்க்கைக்கு எது சிறந்ததோ அதை நான் வழங்கிட விரும்புகிறேன். அவள் என்னோடு இருப்பது அல்ல அவள் வாழ்க்கை. அவள் சுதந்திரமாக இந்தக் காடுகளில் சுற்றித் திரிய வேண்டும். அவள் வாழ்க்கையை அவள் வாழ வேண்டும். அவள் மீது கொண்ட அன்பினால், அவள் இயல்பை அழித்து என்னோடே அவளை வைத்துக் கொள்வது பெரிய வன்முறை... ஆமாம்... வேறு வழியில்லை நான் மோயோவை பிரியப் போகிறேன்." 

-ராக்ஸி
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close