``கடலை இல்லை... வெள்ளரிக்கா இல்லை... கானா இல்லை...!’’- 'ஃப்ரீ' மெட்ரோ ரயில் அனுபவங்கள் | Chennai Metro rail experience

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (30/05/2018)

கடைசி தொடர்பு:11:03 (30/05/2018)

``கடலை இல்லை... வெள்ளரிக்கா இல்லை... கானா இல்லை...!’’- 'ஃப்ரீ' மெட்ரோ ரயில் அனுபவங்கள்

``கடலை இல்லை... வெள்ளரிக்கா இல்லை... கானா இல்லை...!’’- 'ஃப்ரீ' மெட்ரோ ரயில் அனுபவங்கள்

மலை, கடல், யானை மற்றும் ரயில் யாருக்குத்தான் பிடிக்காது?... இந்த நான்கில் ரயில் மட்டும் எப்போதும் எல்லோருக்கும் ஸ்பெஷல். சாதா ரயிலே ஸ்பெஷல் என்றால் பூமிக்கு அடியே செல்லும் சென்னை மெட்ரோ ரயில் எத்தனை ஸ்பெஷலாக இருக்கும்! எதிர்பார்த்த வரவேற்பும் கூட்டமும் இல்லாததால் சென்னை மெட்ரோ ரயில்  நிர்வாகம் பயணிகளுக்கு இலவசமாக செல்லலாம் என 5 நாள் சலுகை அளித்தாலும் அளித்தது, வண்டி கட்டி வந்து ஏறாத குறையாக கிளம்பி வந்து விட்டது ஜன வெள்ளம். நானும் சென்னை சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரை இரண்டு முறை ஓசியில் பயணம் செய்தேன். அந்த அனுபவங்களை அப்படியே இங்கு பந்தி வைக்கிறேன். 

மெட்ரோ

கலர்கலர் பலூன்கள் கட்டி முழுக்க முழுக்க அண்டர்கிரவுண்டில் இருக்கும் சென்ட்ரல் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் ஃபாரின் போலவே மின் விளக்குகளால் தகதகத்தது. (எத்தனை ஹாலிவுட் படத்துல பார்த்திருப்போம்) என்னுடன் எஸ்கலேட்டரில் வந்த ஒருவர் என்னைப் போலவே 'எங்கே ரயிலு... எங்கே ரயிலு?' என கண்களை அகல விரித்துத் தேடினார்.  கண்ணாடிக் கதவுகள் போட்டு தடுத்து வைக்கப்படிருந்த ஃப்ளாட்ஃபார்மில் தேடினோம். திடீரென கதவுகள் திறக்கப்பட, ரயில் பெட்டிகளின் கதவுகளும் அருகில் திறக்கப்பட உள்ளே ஏறினோம். என்னுடன் வந்தவர் நான்கைந்து பேரை இடித்தபடி ஓடிப்போய் சீட்டைப் பிடித்தார். `வண்டி ஃப்ரீயாத்தானே இருக்குது லூஸுப்பயலே?' என கேட்க வேண்டும் போலிருந்தது. மாறி மாறி இடது பக்கம் வலது பக்கம் என உட்கார்ந்தவர் ஒரு முடிவுக்கு வந்தவராய் இடதுபக்கம் உட்கார்ந்தார். வண்டி கிளம்பி எழும்பூர், நேரு பூங்கா தாண்டி மூன்றாவது ஸ்டேஷனான பச்சையப்பன் கல்லூரிக்கு வருவதற்குள் தூங்கி விட்டார். 

``இப்ப ட்ரெய்ன் போற ஸ்பீடு என்ன தெரியுமா?'' என ஒருவர் கேட்க, ''மணிக்கு 300 கி.மீ வேகத்துல போகுது. கரெக்ட்டா?" என்று ஒருவர் பதில் சொன்னார். ``அதான் இல்லை. அவ்ளோ ஸ்பீடுல போனா ரயில் ரோதை கழண்டுக்கும்யா. எப்படியும் 100-க்குள்ள போகும். உலகம் பூரா மெட்ரோ ரயிலோட மேக்ஸிமம் ஸ்பீடு அவ்ளோதான். இல்லைனா ஐ.எஸ்.ஐ முத்திரை ரத்தாகிடும்'' என்று அள்ளிவிட்டார்  சின்ஸியர் சிகாமணியாக. ஆள் பார்ப்பதற்கு அந்தக் காலத்து ஹீரோ ஏவி.எம்.ராஜன் போலவே இருந்தார். அதனாலேயே சில பேர் அவரை நம்பியதற்கு அடையாளமாக தலையாட்டினர். 

திருமங்கலம் ஸ்டேஷனைத்தாண்டிய உடனே ரயிலைவிட்டு இருள் விலகியது. `வீ கேர்' ஹாஸ்ப்பிட்டலை ஒட்டி மெல்ல தரைதளத்துக்கு வந்து ரோஹிணி தியேட்டருக்கு பின்னே உயரத்தில் பாலத்தின் மீது ஓடிக் கொண்டிருந்தது. மொத்தக்கூட்டமும் ஜன்னல் வழியே  பார்த்து`ஓ'வென வேடிக்கை பார்த்தது. வளைவில் ரயில் வளையும்போது அனைவர் முகத்திலும் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்த திருப்தி வழிந்தது 

கோயம்பேடு ஸ்டேஷனில் வண்டி நிற்கும்போது மிடில் ஏஜ் ஆசாமிகள் 6 பேர் ஏறினார்கள். பார்ப்பதற்கு இளவரசுவின் அண்ணன் போலவே இருந்தார்கள். ஏறியவுடனே 'ஏ.சி பத்தலைல?', 'அவ்வளவு ஒண்ணும் சிறப்பா இல்லையே..!', 'துபாய்லலாம் இப்படிலாம் கூட்டமிருக்காது.' `மோனோ ரயில்தான் பெஸ்ட்',  'மக்களுக்கு யூஸ் பண்ணத் தெரியலை.', 'அண்டர் கிரவுண்டுக்குள்ள வெச்சதுக்குப் பதில் பறக்கும் ரயிலாட்டம் மேலே வெச்சிருந்தா டூரிஸமாச்சும் டெவெலப் ஆகிருக்கும்', என நெகட்டிவ் வைப்ரேஷன்களால் பக்கத்தில் நிற்பவர்களின் காதில் ரத்தம் வரும் வரைக்கும் பிளேடு போட்டுக் கொண்டிருந்தார்கள். 

மெட்ரோ

அவ்வளவு நேரம் அமைதியாக வந்த ஒருவர் எம்.ஜி.ஆர் போல அக்கறையோடு, ``இங்கே லேடீஸ்க்குனு எதுவும் கம்பார்ட்மென்ட் இல்லையா..? என்ன அநியாயம் இது?'' என்று கேட்க, ``மெட்ரோல தனி கம்பார்ட்மென்ட்லாம் இல்லை. இங்கே எல்லோரும் சமத்துவம் தான் பாஸ்'' என்றார் ஒருவர். ``யாரு சொன்னா? முதல் பெட்டியும் கடைசிப் பெட்டியும் லேடீஸ்க்குத்தான். தடுப்பு மட்டும் தான் போடலை. லவ்வர்ஸ்னா விதிவிலக்கு. அவங்க அதுல ஏறிக்கலாம்.'' என்று இன்னொருவர் சொல்லி  கமா வைக்க, ``ஜோடியா வர்றவய்ங்கள்ல லவ்வர்ஸ்னு எப்படிய்யா கண்டுபிடிப்பாய்ங்கே... சும்மா அள்ளிவிடக்கூடாது!'' என்றார் மற்றொருவர். 

குல்லா போட்டிருந்த ஒரு பாய் சொன்னதுதான் அல்டிமேட். ``ஏர்ப்போர்ட்ல வண்டி நின்னதும் இறங்கி பஸ் பிடிச்சுத்தான் போகணுமாம். ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு ட்ரிப் மட்டும் தான் ஃப்ரீ. ரிட்டர்ன்லாம்  காசு.'' என்று சொல்ல, எல்லோரின் முகமும் பேஸ்த்தடித்தது. ``அதெப்படி ஃப்ரீ யா போறவங்க எத்தனைவாட்டி போறாங்கன்னு கண்டுபிடிச்சி இறக்கி விடுவாங்க?''என்று நானே கேட்டேன். தலைவர் கொஞ்சம்கூட அசறாமல், ``நீங்க உள்ளே வந்தப்போ கதவுக்கிட்ட சென்ஸார் இருந்துச்சுல. கதவுகூட திறந்திச்சே. ஒவ்வொரு ரேகையும் தனியா இருக்குற மாதிரி ஒவ்வொரு பாடியையும் சென்ஸ் பண்ணி சர்வர்ல ஸ்டோர் பண்ணி வெச்சிக்கும். ரெண்டு வாட்டி டிராவல் பண்ணினா ஆட்டோமேட்டிக்கா கதவு மூடிக்கும். ஒருவேளை சென்ஸார் காட்டிக் கொடுக்காட்டினாலும் வெளில டிக்கெட் செக்கர்க்கு லேட்டா சர்வர்லயிருந்து மெஸேஜ் போயிடும். அவர் காசை வசூல் பண்ணிடுவார். செகண்ட் டைம் போறப்போ காசோட போறதுதான் சேஃப்டி!'' என்று இஷ்டத்துக்கு அள்ளி விட்டுக்கொண்டிருந்தார். ரூபாய் நோட்டில் சிப் இருக்கு என்று சொன்ன எஸ்.வி.சேகரை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார் இந்த பாய். அவர்கூட வந்த `பாய்' ஃப்ரெண்ட்ஸே அவரைக் கலாய்த்தனர்.  

``அய்யே... ரொம்பப் புழுகாத.. இன்னிக்கு காலைல 11 மணிலருந்து இத்தோட பத்துவாட்டி சென்ட்ரலுக்கும் ஏர்ப்போர்ட்டுக்கும் போயிட்டு வந்துட்டு இருக்கேன். புதன் கிழமை வரைக்கும் ஃப்ரீதான். சும்மா போவீயா..!'' என்று ஒரு இளவட்டம் அதட்ட சைலண்ட் ஆனார் அந்த பாய்.

அண்டர்கிரவுண்டுக்குள் போகும்போது விளக்குகள் அதுவாகவே ஒளிர ஆரம்பிக்கவும் வியந்து பார்த்தார் ஒரு பெண். ``ஏங்க அஸ்வின் அப்பா.... லைட்டுகூட ஆட்டோமேட்டிக்கா ஆஃப்பாகி ஆன் ஆகுது பாருங்க. மோடியா எடப்பாடியாங்க மெட்ரோவைக் கொண்டு வந்தது? அய்யோ க்யூட். டிரைவரே கிடையாதுனு காயத்ரி சொன்னா.'' என்றார்.

'ஆமாம்-இல்லை' என்பதுக்கு நடுவில் மய்யமாக தலையாட்டி வைத்தார் அஸ்வினின் அப்பா. 

வண்டி ஆலந்தூர் ஸ்டேஷனுக்கு முன் பாலத்தின் மேல் உயரமாகப் போக கீழே ஒரு ரயில் டி.எம்.எஸ் நோக்கி போய்க்கொண்டிருந்தது. எல்லோரும் ஜன்னல்வழியே எட்டிப்பார்த்துக் கொண்டிருக்க , ஒருவர் மட்டும், ``இப்ப நாம கடல் மட்டத்துலருந்து 50 அடி உயரத்துல போய்க்கிட்டு இருக்கோம்.'' என்று டிஸ்கவரி சேனல் பியர்ல் கிரில்ஸ் எஃபெக்ட் கொடுத்தார். 

மெட்ரோ

``என்ன வண்டிப்பா இது. டப்பா மாதிரி. பெரிய ஃப்ரீசர் சவப்பெட்டி மாதிரியே இருக்கு.  ஒரு கடலை இல்லை. வெள்ளரிக்கா இல்லை. யாரும் ரைம்ஸ் புக் விக்கல... கானா பாட்டுப் பாடல. இதுலாம் சாபக்கேடு. உலக மயமாக்கலோட அழிவுகள்ல ஒண்ணு தான் மெட்ரோ ரயில்!'' என்றார் ஒருவர். பார்க்க சமுத்திரக்கனி போல இருந்தார். அவரை எல்லோரும் இலுமினாட்டியைப் போல பார்த்தார்கள். பாம் கீம் வைக்க வந்தவரோ என்று எண்ணி இடத்தைக் காலி செய்தேன்.

விமான நிலையத்தில் ரயில் நின்றதும் சிலர் இறங்கினார்கள். ஏற்கெனவே வெளியே நின்றிருந்த கூட்டம் திமுதிமுவென உள்ளே வர ஸ்டைலாய் எழுந்து நின்றவர்கள் கடகடவென ஓடிப்போய் மியூஸிக்கல் சேர் விளையாடினார்கள். ஒரு லேடி உட்கார வந்த இன்னொரு லேடியை தள்ளிவிட்டு உட்கார்ந்தார். ``ஏன்மா தள்ளிவிட்டு உட்கார்றே..? வயசானவங்களுக்கு சீட்டு போட்டேன். எந்திரிங்க.'' என்று நின்ற லேடி எகிற , பதிலுக்குப் பேசிய இன்னொரு லேடி, ``இங்கேனாப்ல என்ன நானும் என் அம்மாவுக்குத்தான் சீட்டு போட்டேன்.'' என பாட்டியை கோதாவில் இழுத்துவிட்டது. சண்டை ஆரம்பிக்கும் முன், நான் எம்.ஜி.ஆராய் மாறி சீட் கொடுத்து எழுந்து நின்றுகொண்டேன்.  

``கடலுக்கு நடுவே சிங்கப்பூர்ல போன மாதிரி இருக்கும்னு வந்தா... ஒரே இருட்டுக் குகைக்குள்ளலனா கூட்டிட்டு போறா. நல்லவேளை ஃப்ரீயானால போச்சு. இல்லைனா காசு வேஸ்ட்!'' என்று ஏற்கெனவே பிதுங்கிய உதட்டை ஓவராய் பிதுக்கினார் சாம்பு மாமா ஒருவர். இனி இந்த ஜென்மத்தில் மெட்ரோ ரயில் ஏறப்போவதில்லை என்ற வைராக்கியத்தோடு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். 

வடபழனியில் கூட்டம் அதிகமாக ஏறியது. ஒரு போதை ஆசாமி, தூக்கிக் கட்டிய வேட்டியோடு ஏறினார். `கதவை விட்டு தள்ளி நிற்கவும்' என்ற போர்டுக்குப் பக்கத்தில் கதவுக்கு முட்டு கொடுத்து நின்றார். வடபழனி முருகன் கோவிலைப் பார்த்ததும், ''சைதாப்பேட்டை முருகன் கோவில்'' என்று சத்தமாக அவர் சொன்னபோதுதான் தெரிந்தது அவர் நிறைபோதையில் இருக்கிறார் என்று. ஒவ்வொரு ஸ்டேஷனாக ரீச் ஆகும்போது ஸ்பீக்கரில் ஒரு பெண் குரல் ஒலித்துக் கொண்டிருந்தாலும், தியேட்டரில் ஆர்வக்கோளாறாய் நம் தொடையைத் தட்டி கதை சொல்லும் ஆசாமி போல, ``அடுத்து அண்ணா நகர் டவர் பார்க்'', ``இப்ப செனாய் நகர்...'', ''இப்ப பச்சையப்பாஸ்'' என ஹை-பிட்ச்சில்  அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். 

எனக்கு அவரை கீழ்ப்பாக்கத்தில் இறக்கி விட்டுவிடலாமா என்றுகூடத் தோன்றியது. `வாட் எ மெடிக்கல் மிராக்கிள்’ அவர் கீழ்ப்பாக்கத்தில் தான் இறங்கினார்!  

கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் பயணம் செய்ததாக மாலையில் ஒரு வெப்சைட் புள்ளி விபரம் சொல்லியிருந்தது. அதில் இதுமாதிரி கேஸ்கள் எத்தனையோ?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்