"2 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருள் ஒன்றுகூட வாங்கவில்லை!” - ஆஸ்திரேலியப் பெண்ணின் கெத்து | This Australian girl dint buy even a single plastic thing in the past 2 years

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (30/05/2018)

கடைசி தொடர்பு:11:07 (30/05/2018)

"2 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருள் ஒன்றுகூட வாங்கவில்லை!” - ஆஸ்திரேலியப் பெண்ணின் கெத்து

வீட்டுக்கு வாங்கும் பொருள்களில் பிளாஸ்டிக் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். விவசாய சந்தைகளை நேரில் பார்வையிட்டு பொருள்களை துணிப்பைகளில் வாங்கிக்கொள்கிறேன்.

"நான் அதைச் செய்திருக்கிறேன்... இரண்டு ஆண்டுகள் பிளாஸ்டிக் இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன்... இரண்டு ஆண்டுகளில் புதிய பிளாஸ்டிக்குகள் வாங்க வேண்டாம் என்கிற முயற்சியில் தீவிரமாக இருந்தேன்" -

இது எரின் ரோட்ஸ் என்ற பெண்ணின் வார்த்தைகள். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகிறார். எரின் ரோட்ஸ் எப்படி பிளாஸ்டிக்குகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்பதை இப்படி சொல்கிறார்.

பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை

photo - www.onegreenplanet.org

"நான் என்ன மாதிரியான முயற்சியில் ஈடுபடப் போகிறேன் என்பதை எனது வலைப்பக்கத்தில் தெரிவித்துக் கொண்டேயிருந்தேன். முன்னர் பிளாஸ்டிக்குகளுக்கு எதிராக எடுத்த முடிவுகளை அப்போது செயல்படுத்திப் பார்த்தேன். சிலர் முடியாது என்று சொன்னார்கள். எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் எனது முடிவில் உறுதியாக இருந்தேன். ஒவ்வொரு பொருளை உபயோகிக்கும்போதும் பிளாஸ்டிக்குகளை எளிதாக தவிர்க்கத் துவங்கிவிட்டேன். 

சோப் வாங்கும்போது பேக்கிங் செய்யப்படாத இயற்கை சோப்புகளை வாங்கினேன். ஷாம்பூ வாங்கும்போது பிளாஸ்டிக் பாட்டில்களிலோ அல்லது பிளாஸ்டிக் கவர்களிலோ வாங்காமல், சோப்பு போன்ற வடிவத்தில் இருக்கும் ஷாம்பூ பார்களை வாங்கினேன். அது ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருந்தது. பின்னர் ஷாம்பூ பார்களை தண்ணீருடன் கலந்து பயன்படுத்தும்போது எளிதாகியது. சொந்தமாக நானே பைகார்ப் எனும் பல்பொடி தயாரித்து மூங்கில் ப்ரெஷ்களால் துலக்கிக் கொள்கிறேன். இதனால் பற்களின் ஈறுகள் இப்போதும் வலிமையாகத்தான் இருக்கின்றன. பல் வலிமையாக இருப்பதை மருத்துவரும் உறுதி செய்திருக்கிறார். 

கண்ணாடி பாட்டில்கள்

photo - www.onegreenplanet.org

முகத்துக்குப் பாதாம் எண்ணெய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் பயன்படுத்தும்போது எனது சருமம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பின்னர் படிப்படியாக ஏற்றுக்கொண்டது. தேங்காய் எண்ணெய்யைவிட இது நன்றாக இருந்தது. அதைப் பாட்டிலில் வாங்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்தேன். உடல் துர்நாற்றத்தைப் போக்க இயற்கை வாசனைப் பொருள்களை உபயோகப்படுத்துகிறேன். பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்த ஸ்ப்ரேக்களை வாங்குவதில்லை. வீடுகளைச் சுத்தப்படுத்த மறுசுழற்சி செய்யக் கூடிய துணிப் பட்டைகளை பயன்படுத்துகிறேன். ஒருமுறை வாங்கிவிட்டால் நீண்ட நாள்களுக்கு இருக்கும். என் முகமும், தோலும் சுருங்கும்போது எலுமிச்சையை தேய்த்துக்கொள்கிறேன். இதனால் தோல் பிரகாசமாக இருக்கிறது. மேற்கண்ட பொருள்கள் என் உடலுக்குத் தேவையானவை. அவற்றைப் பயன்படுத்தும்போது பிளாஸ்டிக்குகளை தவிர்த்து விடுகிறேன். 

நான் வீட்டுத் தேவைக்கு வாங்கும் பொருள்களிலும் பிளாஸ்டிக் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் விவசாயிகளின் சந்தைகளை நேரில் பார்வையிட்டு தேவையான பொருள்களை துணிப் பைகளில் வாங்கிக் கொள்கிறேன். வீட்டில் தானியங்களையோ அல்லது வேறு ஒரு பொருள்களையோ சேமிக்கக் கண்ணாடிகளால் ஆன பாட்டில்களைப் பயன்படுத்துகிறோம். அதிகமான பொருள்களை சேமிக்க இரும்புப் பெட்டிகளை வைத்திருக்கிறோம். என் உணவு அலமாரியில் எப்போதுமே பொருள்கள் குறைவாகத்தான் இருக்கும். வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஜாடிகளையும், துணிப்பைகளையுமே பயன்பாட்டுக்காக எடுத்துக் கொள்கிறோம்.

பிளாஸ்டிக்

photo - www.onegreenplanet.org

பதப்படுத்தப்பட்ட உணவுகளை பெரும்பாலும் பாக்கெட்டுகளில்தான் கொடுக்கிறார்கள். அதனால் அவற்றை வீட்டிலேயே செய்து கொள்கிறேன். இப்போது என் சமையலறை முழுவதும் இரும்பு மற்றும் கண்ணாடி, துணிப் பொருள்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறேன். பிளாஸ்டிக்குகளின் தாக்கத்தில் இருந்து இரண்டு வருடங்களை முழுமையாகக் கடந்திருக்கிறேன். பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகக் குறைத்ததால் இப்போது எனது உடலும் நன்றாக இருக்கிறது. என் நண்பர்களுக்கும் தொடர்ந்து பிளாஸ்டிக்குகளின் தீங்கு பற்றி சொல்லி வருகிறேன்" என்கிறார், எரின் ரோட்ஸ். 

ரோட்ஸும் இனியும் இதையேதான் தொடர்வார். நம்மில் எத்தனை பேர் இந்தச் பரிசோதனைக்குத் தயாராகயிருக்கிறோம்?


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close