தந்தம் விற்பனைக்கு... இதயம் உணவுக்கு... இந்த காங்கோ கடத்தல்காரர் இப்போது என்ன செய்கிறார்? | Tusk poacher is now a botanist and an environmentalist

வெளியிடப்பட்ட நேரம்: 09:04 (31/05/2018)

கடைசி தொடர்பு:09:10 (31/05/2018)

தந்தம் விற்பனைக்கு... இதயம் உணவுக்கு... இந்த காங்கோ கடத்தல்காரர் இப்போது என்ன செய்கிறார்?

இவாங்கோவின் காலத்தில் அவர்கள் மேற்கொண்ட அனைத்து வேட்டைகளும் வெற்றியில்தான் முடிந்துள்ளன. அவர் தந்த வேட்டைக்குச் சென்றதே தன் மருத்துவப் படிப்புக்குத் தேவையான பணத்தைச் சேர்ப்பதற்குத்தான்.

தந்தம் விற்பனைக்கு... இதயம் உணவுக்கு... இந்த காங்கோ கடத்தல்காரர் இப்போது என்ன செய்கிறார்?

பொமோங்கோ (Bomongo). காங்கோ குடியரசின் ஒரு பகுதி. வெப்பமண்டலக் காடுகள் நிறைந்த அந்த மாநிலத்தின் வடக்குப் பகுதிதான் அவர்களின் பூர்வீகம். அங்கும் அதற்கு அருகிலிருக்கும் இங்கிரி (Ngiri River) ஆற்றின் சிறு தீவுக் கிராமங்களிலும், குங்கு மாவட்டத்தின் (Kungu territory) சில பகுதிகளிலும் தற்போது வாழ்ந்து வருகிறார்கள். லிபின்ஸா என்ற பூர்வகுடியான அவர்களின் பிரதான வேலை வேட்டையாடுதல் மற்றும் வனப் பொருள்களைச் சேகரித்தல். அவர்களுக்குள் ஒரு வழக்கம் உண்டு. ஒரு ஆண் தனது குடும்பத்தைத் தன்னால் பாதுகாக்க முடியும், அதற்கான வலிமை தனக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்காக அவர்கள் காட்டில் சிறுத்தை, யானை போன்ற ஏதேனும் ஒரு பெரிய விலங்கை வேட்டையாடி அதன் இதயத்தைக் கொண்டுவர வேண்டும். அதன்பிறகே அவனது திருமணம் பற்றிச் சிந்திப்பார்கள். தான் வேட்டையாடிய சிறுத்தையின் தோலை உடையாகத் தரித்தோ, யானையின் வால் முடியை மாலையாக அணிவித்துக்கொண்டோ அவர்கள் வீற்றிருக்க அன்றைய தினம் முழுவதும் லிபின்ஸா மக்களுக்குக் கொண்டாட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். அதைத் தனது 17 வயதிலேயே செய்தவர் தான் கார்னெய்ல் இவாங்கோ (Corneille Ewango).

காங்கோ குடியரசு தந்தம் கடத்தல்

இவாங்கோ அவரது 14 வயதில் இருந்தே தனது மாமாவோடு தந்த வேட்டைக்காக பொமோங்கோ காடுகளில் சுற்றித் திரிந்தவர். மாமாவின் குழுவோடு இணைந்து பல யானைகளை வேட்டையில் வீழ்த்திய அனுபவங்களையும் சிறுவயதிலேயே பெற்றவர். ஆதியில் அவர்கள் மீன் பிடிப்பதையும், குரங்கு, மறிமான், நீர்யானை, காட்டெருமை போன்றவற்றை வேட்டையாடுவது ஆகியவற்றையும் மட்டுமே வாழ்வாதாரத்துகாகச் செய்துகொண்டிருந்தார்கள். 1980களில் தந்தங்களுக்கு இருந்த பெரிய சந்தை அவர்களின் பார்வையை யானைகளின் பக்கம் திருப்பியது. அதுவரை தனது பராக்கிரமத்தை நிரூபிக்க மட்டுமே வேட்டையாடப்பட்ட யானைகள், லாபநோக்கில் வேட்டையாடப்படத் தொடங்கின. லாபநோக்கம். பல அழிவுகளின் கறைபடிந்த சொல். அதன் பசி தீரவே தீராது. அதன் கோரப்பசிக்குக் காங்கோவின் யானைகளும் பலியாகத் தொடங்கின. அதன் ஆயுதங்களில் ஒன்றாகத் தற்போது அறியாமையில் இருக்கும் லிபின்ஸா மக்களும் மாட்டிக்கொண்டார்கள்.

இவாங்கோகாங்கோ ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் சலோங்கா தேசியப் பூங்காவின் (Salonga National park) யானைகள்தான் அவர்களின் பார்வையில் அடிக்கடி மாட்டுவது. முதலில் பூங்காவின் வேலிகளுக்கு அடியில் சுரங்கக் குழிகளை வெட்டி உள்ளே சென்று, வனத்தின் மையப்பகுதிக்கு நடந்துசெல்வார்கள். 7 முதல் 10 பேர் கொண்ட குழுவாகச் செல்லும் அவர்களில் பெண்களும் அடக்கம். குழுவினருக்கான உணவுகளைச் சமைப்பதற்கும், வேட்டையாடும் யானையின் மாமிசங்களைச் சமைப்பதற்கும் அவர்கள் தேவைப்பட்டார்கள். தங்கள் வாழிடங்களுக்கு அருகிலேயே யானைகளைக் கொல்ல முடிந்தால் அதன் மாமிசங்களை வெட்டிக் கிராமங்களுக்குக் கொண்டுசென்றுவிடுவார்கள். அதுவே வெகுதூரத்தில் என்றால் முக்கியமாக யானையின் இதயத்தை எடுத்துக்கொள்வார்கள். சிலர் அவர்களுக்குப் பிடித்த பாகங்களான தும்பிக்கை, குடல், பாதங்கள் போன்றவற்றை வெட்டியெடுத்துக் கொள்வார்கள். அது அவர்களுக்கான உணவு மட்டுமே; விற்பனைக்கு அல்ல. தந்தங்களை மட்டுமே சந்தைகளுக்குக் கொண்டுசெல்வார்கள். மீதமிருக்கும் யானையின் உடலைக் காட்டிலேயே மற்ற விலங்குகளுக்காக விட்டுவிடுவார்கள்.

"வேட்டைக்குச் செல்லும் குழுவிடம் குறைந்தது 4 துப்பாக்கிகள் இருக்கும். காங்கோ ராணுவத்தில் லிபின்ஸா வீரர்களும் இருக்கிறார்கள். அன்றெல்லாம், அங்கோலா நாட்டின் தலைவர் சாவிம்பியின் (Savimbi) ராணுவத்துக்காகக் கொண்டுசெல்லப்பட்ட ஆயுதங்கள் எங்கள் பகுதி வழியாகத்தான் செல்லும். அதிலிருந்து சில ஏ.கே.47களை மிகச்சுலபமாக எங்களால் எடுத்துக்கொள்ள முடிந்தது. அவற்றுக்கான தோட்டாக்களை ராணுவத்தில் இருக்கும் எங்கள் இன சகோதரர்களின் மூலமாக நாங்கள் பெற்றுக்கொள்வோம். அதுவே எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. சலோங்கா பூங்காவின் பாதுகாவலர்களைவிட எங்களிடம் பலமான ஆயுதங்கள் இருந்ததால் அவர்களிடமும் பெரிய எதிர்ப்புகள் இல்லை."

வேட்டையாடப்பட்ட யானை

இவாங்கோவின் காலத்தில் அவர்கள் மேற்கொண்ட அனைத்து வேட்டைகளும் வெற்றியில் தான் முடிந்துள்ளன. அவர் தந்த வேட்டைக்குச் சென்றதே தன் மருத்துவப் படிப்புக்குத் தேவையான பணத்தைச் சேர்ப்பதற்குத்தான். அதன்மூலம் பெறும் மருத்துவக் கல்வி, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுவரும் தனது இன மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. ஆனால், அவரது மருத்துவக் கல்விக்கான விண்ணப்பம் மூன்றுமுறை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிசாங்கனி பல்கலைக் கழகத்தில் தாவரவியல் பயிலத் தொடங்கினார். அங்கு படித்துக்கொண்டிருக்கும் சமயங்களில் சில வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்புகளில் பணிபுரிய வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன. அது அவருக்கு வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் புரியவைத்தது. 1995-ல் தாவரவியல் முதுகலைப்பட்டம் பெற்றவர், பல்லுயிர்ச் சூழலுக்குப் பெயர்போன இட்டுரி (Ituri forests) காடுகளுக்கு அருகில் இருந்த தாவரவியல் குறித்த பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார்.

பிக்மி தோழர்களுடன் இவாங்கோ

அவர் பணிபுரிந்த ஆராய்ச்சி மையத்துக்கு அருகில் இருந்த காட்டுக்குள் தாவர வகைகளின் மாதிரிகளைச் சேகரிப்பதற்காகச் செல்லும்போது அங்கிருக்கும் ஒவ்வோர் உயிரும் காட்டின் வளமைக்கும் புவியின் சமநிலைக்கும் செய்யும் சேவைகளை அவருடன் வரும் அனுபவம் வாய்ந்தவர்கள் சொல்லிக்கேட்ட இவாங்கோவுக்குப் பல விஷயங்கள் புரியத்தொடங்கின. அதுவரையிலும் அவர் செய்துவந்த வேட்டைத்தொழில் காட்டின் சமநிலையில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார். இட்டுரி காடுகளுக்குள் வாழ்ந்துவந்த பிக்மி (Pygmy) என்ற குள்ளர் இனப் பழங்குடிகள் மூலம் தனது இன மக்கள் அவர்களுக்காகச் சிறிதளவில் செய்துவந்த வேட்டை எப்படி பணத்துக்கானதாகப் பெரியளவுக்கு மாற்றப்பட்டது என்பதையும் தமது மக்கள் எவ்வாறு சில பேராசைக்காரர்களால் திசைதிருப்பப்பட்டார்கள் என்பதையும் தெரிந்துகொண்டார். அந்த உள்ளூர் மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் காட்டின் தன்மையை விளக்குவதில் அவருக்கு ஆசிரியர்களானார்கள். மனதளவில் அவர் பெரும் மாற்றத்தைச் சந்திக்கத் தொடங்கினார்.

லாரண்ட் கபிலா

Photo Courtesy: Reuters


அது ருவாண்டாவில் டுட்ஸி (Tutsi) இனக்குழுவுக்கும் சில சிறுபான்மைத் தொல்குடிகளுக்கும் எதிரான இனப்படுகொலைகள் நடந்துகொண்டிருந்த சமயம். ருவாண்டாவின் சாலைகள் பிணங்களால் நிரம்பி இருந்தது. அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி லுபா (Luba) இனத்தின் புரட்சிகரக்குழுத் தலைவரான லாரண்ட் கபிலா அப்போதைய ஸைரே (Zaire- காங்கோவின் அன்றைய பெயர்) அதிபரான மொபோடுவைக் கொன்றுவிட்டு ஆட்சியைப் பிடிக்கத் தனது அண்டை நாடான ருவாண்டின் உதவியை நாடினார். அதன் விளைவாக 1996-ம் ஆண்டு காங்கோவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது.

போர் முகாம்

Photo Courtesy: Medicins San Frontiers

இவாங்கோவுடன் பணிபுரிபவர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பை முன்னிட்டு இடத்தைக் காலிசெய்துவிட்டனர். ஆபத்தான சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த உள்ளூர் மக்களான பிக்மி இனத்தோடு சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக காட்டுக்குள் பாதுகாப்பான இடத்தைத் தேடிச் செல்ல முடிவுசெய்தார். அந்தச் சமயத்தில் போராளிகள் தங்கள் போர் நேரங்கள் தவிர மற்ற சமயங்களில் உணவுக்காகவும், சந்தோஷத்துக்காகவும் கண்ணில் பட்ட விலங்குகளைக் கொன்று குவித்துக்கொண்டிருந்தனர். அந்த வேட்டைகளில் இருந்து இப்புலு (Ipulu) மிருகக்காட்சிசாலையில் வாழ்ந்துகொண்டிருந்த 14 ஒகாபி (Okapi) என்ற ஒருவகை வரிக்குதிரைகளைக் காப்பாற்ற அவர் முடிவுசெய்தார். அவருக்கு உதவியாக இருந்த பிக்மி மக்களோடு சேர்ந்து அவற்றையும் காட்டுக்குள் கொண்டுசென்று போர் முடியும்வரை பாதுகாத்தார்.

ஒகாபி

2001-ம் ஆண்டு ஜோசப் கபிலா தனது தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய பிறகே உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதுவரை பிக்மி இன மக்களோடு காட்டுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருந்த இவாங்கோ அங்கும் தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தார். அதன்மூலம் அவர், இட்டுரி காட்டில் புதியதாக 600 மர வகைகளையும், 270 லியானா என்ற படர்ந்து வளரும் கொடி வகைகளையும் கண்டுபிடித்தார். போர் முடிந்து சராசரி வாழ்வுக்குத் திரும்பும்வரை ஒகாபி இன வரிக்குதிரைகளை அவர் வேட்டைகளில் இருந்து பாதுகாத்துக் கொண்டிருந்தார்.

அவரது இன்றியமையாத இந்தப் பணியை கௌரவிக்கும் வகையில் அவரது நண்பர்கள் அமெரிக்காவின் மிஸோரி பல்கலைக் கழகத்தில் வெப்பமண்டலத் தாவரவியல் (Tropical botany) படிப்பதற்கு உதவினார்கள். 2006-ல் தனது பட்டப்படிப்பை முடித்தவர், 2010-ம் ஆண்டு நெதர்லாந்தில் முனைவர் பட்டமும் பெற்றார். தற்போது ஒகாபி சரணாலயத்தின் இயக்குநராக இருக்கும் இவாங்கோ, இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட காங்கோ குடியரசின் சூழலியல் மேலாண்மைத் திட்ட வரைவுக் குழுவில் ஒருவராகவும் இருக்கிறார். இவற்றோடு தனது இன மக்களுக்குச் சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வுக் கல்வியையும் வழங்கிக் கொண்டிருக்கிறார். இயற்கையைச் சீண்டும் மனிதர்களின் செயல்கள் என்ன என்பதையே சூழலியல் குறித்த அறிவியல் பார்வை இருந்தால் தான் புரிந்துகொள்ள முடியும் என்பதை அவர் புரிந்துகொள்ள ஒரு போரையே கடந்து வரவேண்டியிருந்தது. தற்போது அவர் வேறொரு போரில் ஈடுபட்டிருக்கிறார்.

சுற்றுச்சூழல்

அதுதான் சூழலியல் போர்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close