Published:Updated:

அதிகாரத்தைப் புறந்தள்ளிய புலவன்!

அதிகாரத்தைப் புறந்தள்ளிய புலவன்!
பிரீமியம் ஸ்டோரி
அதிகாரத்தைப் புறந்தள்ளிய புலவன்!

ப.திருமாவேலன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

அதிகாரத்தைப் புறந்தள்ளிய புலவன்!

ப.திருமாவேலன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
அதிகாரத்தைப் புறந்தள்ளிய புலவன்!
பிரீமியம் ஸ்டோரி
அதிகாரத்தைப் புறந்தள்ளிய புலவன்!

`இன்குலாப்' - உலக அளவில் புரட்சிகரச் சொல் என்றால், இன்குலாப்... தமிழக அளவில் புரட்சிகர முகம்!

அவர் பெயர் சாகுல் ஹமீது. தனது மகனுக்குத்தான் ‘இன்குலாப்’ என்று பெயர் வைத்தார். தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து புத்தகம் ஆக்கும் முயற்சியில் சாகுல் ஹமீது இறங்கியபோது, `‘உங்கள் மகன் பெயரான `இன்குலாப்' எனப் போட்டு இந்தத் தொகுப்பை வெளியிடுங்கள்’' என்று நண்பர் சொன்னார்.

கடந்த நாற்பது ஆண்டுகாலத் தமிழகத்தில் கனல் கவிதைகளைத் தந்த மனிதர், டிசம்பர் 1-ம் நாள் இயற்கையைத் தழுவினார்!

அதிகாரத்தைப் புறந்தள்ளிய புலவன்!

காரல்மார்க்ஸ் அவரது இதயம் என்றால், பெரியாரும் அம்பேத்கரும்தான் கண்கள். இந்த மூவர் சிந்தனையில் அவரது சொல்லும் செயலும் இருந்தன. தனது தத்துவத்துக்கு முரண்பாடாக எது நடந்தாலும் முன்னேறிவந்து கர்ஜிக்கும் சிங்கம்.

‘எழுத மாட்டேன்
ஒரு வரிகூட
நீ
ஒப்பும்படி!
மேட்டிமைத் திமிரும்
உன்
சபை வாசலில்கூட
நீளவே நீளாது
என் மயிரின்


நிழலும்’ - என்று பிரகடனம் செய்து அதிகாரம் ஒப்பாத சொற்களை எழுதியபடியே வாழ்ந்தார். மயில் இறகுச் சொற்களால் அல்ல, மண்டை உடைக்கும் கற்களாக இருந்தன அவரது வார்த்தைகள்!

சிம்சன் தொழிலாளர்கள் மண்டைகள் உடைக்கப்பட்டு, வி.பி.சிந்தன் தாக்கப்பட்டபோது

‘இந்த ரத்தத்தின் ஈரம் உலரு முன்
எங்கள்

தோழர்கள் உங்களைச் சூறையாட வருவார்கள்’ என்று எஃகு இதயம்கொண்டவனால்தான் எழுத முடியும். வெறும் கைத்தட்டலுக்காக எழுத முடியாது!

கீழ்வெண்மணி நெருப்பில் 44 மனித மனங்கள் வெந்தபோது...

‘சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே - ஒங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெய் ஊத்துதே
எதையெதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க - நாங்க
எரியும்போது எவன் மசுரைப் புடுங்கப்போனீங்க?'


என்று ஆதிக்கச் சாதி நெருப்புக்கு கவி நெருப்பு வைக்க இன்குலாபால் மட்டுமே முடிந்தது.

வலதுசாரி தமிழ்த் தேசியத்தின் குறியீடாக இருக்கும் இராசராசசோழனுக்கு, தி.மு.க ஆட்சியில் சிலை வைத்தபோது...

`காலனி ஆதிக்கத் தொழு நோயின் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்?'


என்று நிலப்பிரபுத்துவ எச்சத்தை எரித்தது இன்குலாப் பேனா. இப்படி, தமிழக வரலாற்றின் பல்வேறு நிகழ்வுகளுக்கு ‘பாயிரம்’ பாடிய பாவலன். அவரது கவியில் இருந்தும் அவரது வாழ்வில் இருந்தும் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. ‘‘நான் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவன். எனது ஆசிரியர் சங்கரவள்ளிநாயகம் (பிற்காலத்தில் ராசபாளையம், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றங்களைத் தொடங்கிய பேராசிரியர்) பேச்சைக் கேட்டுத்தான் நான் உருவானேன்” என்றார். அந்த வழித்தடத்தில் பல மாணவர்களைப் புரட்சிகரமானவர்களை உருவாக்கிய பேராசிரியர் இன்குலாப்!

1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகுதான் பெரியார் மீதான விமர்சனத்தை, பல மார்க்சிய - லெனினிய அமைப்புகளே குறைத்தன. அதுவரை அவர்கள் அளவுகோல்களுக்குள் பெரியார் வர மாட்டார். 2009-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ஈழப்போராட்டமே பல மார்க்சிய லெனினிய அமைப்புகளுக்கு விடுதலைப் போராட்டம். அதற்கு முன்னால் அது இனப் பாசிசப் போராட்டம். ஆனால், 1983-ம் ஆண்டு காலகட்டத்திலேயே ஈழப்போராட்டத்தையும் பெரியார் பங்களிப்புகளையும் மிகச்சரியாக உள்வாங்கிய மார்க்சிஸ்ட் - லெனிஸ்ட் இன்குலாப்தான். அதிகாரவர்க்கம் எதை எல்லாம் எதிர்க்கிறதோ, அவை எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உன்னதச் சிந்தனையை, தமிழ் மண்ணில் விதைத்தவர்களில் இன்குலாப் முக்கியமானவர். மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் ஓரளவாவது தமிழகத்தில் ஒன்றிணைந்து செயல்பட அடித்தளம் அமைத்தவர்களில் இன்குலாப் முக்கியமானவர்.

தீராத ஆஸ்மா - மூக்கடைப்பு இருந்தது. ஆனாலும் எல்லா மேடைகளுக்கும் வந்தார். வராமல்போனாலும் அவர் சொற்கள் இருந்தன. ‘`பெரும் கலகத்தில் நான் முகம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதன் சொற்களில் எனதும் ஒன்று’' என்றவர். ‘`அகமும் புறமும் கலகம் செய்பவன் நான்'’ என்று சொன்னவர் மட்டும் அல்ல, செயல்படுத்தியவர். 2006-ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு ‘கலைமாமணி’ விருது தந்தது. 2008-ம் ஆண்டு ஈழ இனப்படுகொலையைத் தடுக்கத் தவறிய முதலமைச்சர் கருணாநிதிக்கே அந்த விருதைத் திருப்பி அனுப்பிய தமிழ்ப் புலவன் இன்குலாப்.

‘மனிதன், தமிழன், படைப்பாளி என்ற வகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயலாற்றவேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது. இந்த வகையில் ‘கலைமாமணி’ விருது எனக்கு கௌரவமாக இல்லாமல், முள்ளாகக் குத்திக்கொண்டிருக்கிறது. இதை தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்கவைத்துக்கொள்வதாக அமையும்’ என்று எழுதி, சாமரம் வீசும் புலவர் மரபை உடைத்தவர் இன்குலாப். `‘காலம், கவிஞனைப் புனைகிறது; கவிஞன், காலத்தைப் புனைகிறான்’' என்று இன்குலாப் சொன்னதற்கு, இன்குலாப்பே உதாரணம்.

‘எழுத்தைப் பார்; எழுதியவனைப் பார்க்காதே’ என்பார்கள். எழுத்தைப்போல எழுதியவன் நல்லவனாக, இனிமையானவனாக இருப்பது இல்லை என்பது அதன் பொருள். ஆனால், இன்குலாப் வாழ்க்கைக்கும் வார்த்தைகளுக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்துகாட்டியவர். எவருடனும் எளிதில் பழகிக் கலந்துவிடுவார். எவர் கருத்தையும் உன்னிப்பாகக் கவனிப்பார். தன்னைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பார். புறம் பேசுவதையும் தவிர்ப்பார். லில்லி தேவசிகாமணி விருது, இன்குலாபுக்கும் ஜெயமோகனுக்கும் சேர்த்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ‘`இன்குலாப் எழுதிய ஒரு வரிகூட என்னைக் கவர்ந்தது இல்லை’' என்று ஜெயமோகன் சொன்னார். இதை இன்குலாபிடம் சொன்னபோது, ‘`அவரைக் கவர்ந்தால் அது இன்குலாப் வரியாக எப்படி இருக்க முடியும்?'’ என்று சிரித்தார். அவ்வளவுதான் அவரிடம் இருந்து வந்த விமர்சனம்.

‘`சிறுகதை உலகில் எனக்குப் பிறகு 25 ஆண்டுகளாக யாருமே இல்லை. பின்னோக்கிப் பார்க்கிறேன் யாருமே வரவில்லை’' என்று ஜெயகாந்தன் சொன்னபோது, ‘`எல்லோரும் அவருக்கு முன்னே போய்விட்டார்கள்’' என்று ஒற்றை வரியில் காலி செய்தவர் இன்குலாப். பாலஸ்தீனம், கியூபா பேசிய கம்யூனிஸ்ட்கள் ஈழம் பற்றிப் பேசத் தயங்கியபோது, ‘`அவர்களுக்கு எப்போதும் தூரப்பார்வைதான். கிட்டப்பார்வை கிடையாது’' என்றார். இப்படி அவருடனான உரையாடல்கள் ஒற்றை வரிகளில். ஆனால், ஆழமானதாக அமையும். உரக்கச் சொல்ல வேண்டியபோது உரக்கவும், மென்மையாகச் சொல்ல வேண்டும்போது மென்மையாவும் ஒலிக்கும் இன்குலாப் குரல்.

அவர் கவிதை நம் எல்லோர் கவிதையாகவும் ஆகவேண்டும். அது...

‘நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்!'