மஹிந்திரா S201 கேபின் எப்படி... விட்டாரா பிரெஸ்ஸா, க்ரெட்டாவுக்குப் போட்டி?! | How is the Cabin of Mahindra S201... Vitara Brezza and Creta Beware!

வெளியிடப்பட்ட நேரம்: 14:22 (31/05/2018)

கடைசி தொடர்பு:14:23 (31/05/2018)

மஹிந்திரா S201 கேபின் எப்படி... விட்டாரா பிரெஸ்ஸா, க்ரெட்டாவுக்குப் போட்டி?!

மஹிந்திராவின் காம்பேக்ட் எஸ்யூவி KUV 3OO எனவும், மிட் சைஸ் எஸ்யூவி XUV 3OO எனவும் பெயர் சூட்டப்படலாம்!

இந்தியாவில் யுட்டிலிட்டி வாகனங்களைத் தயாரிப்பதில் பெயர்பெற்ற மஹிந்திரா நிறுவனம், இந்த ஆண்டில் புதிய எஸ்யூவிகளையும், எலெக்ட்ரிக் கார்களையும் வரிசையாகக் களமிறக்க இருப்பது தெரிந்ததே. தற்போது  ஸாங்யாங் டிவோலியை அடிப்படையாகக் கொண்டு, S201 என்ற புனைப் பெயரில், இரண்டு கார்களை மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. 

 

மஹிந்திரா S201

 

ஒன்று 4 மீட்டருக்குட்பட்ட காம்பேக்ட் எஸ்யூவியாகவும், மற்றொன்று 4 மீட்டருக்கும் அதிகமான மிட் சைஸ் எஸ்யூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த இரு கார்களின் ஸ்பை படங்கள், இணைய உலகில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. 2018-ம் ஆண்டின் பிற்பாதியில், இந்நிறுவனம் முதலில் காம்பேக்ட் எஸ்யூவியை விற்பனைக்குக் கொண்டுவரும் முடிவில் உள்ளது.

இந்த எஸ்யூவிகளின் போட்டியாளர்கள் யார்?

 

Mahindra S201 Cabin


இதில் 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட 5 சீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா - டாடா நெக்ஸான் - ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்குப் போட்டியாக வெளிவர உள்ளது. இதுவே 4 மீட்டர் நீளத்துக்கும் அதிகமான மிட் சைஸ் எஸ்யூவி என்றால், அது ஹூண்டாய் க்ரெட்டா - மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ் - ரெனோ டஸ்ட்டர் - நிஸான் டெரானோ- ஹோண்டா BR-V ஆகியவற்றுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்படலாம். இதில் 4 மீட்டருக்கும் அதிகமான மாடல், ஹோண்டா BR-V போலவே 7 சீட்டர் காராக இருக்கும் என்பது வரவேற்கத்தக்கது.

புதிய எஸ்யூவிகளின் டிசைனில் என்ன வித்தியாசம்? 

 

Mahindra S201 Instrumentation


இந்த இரு கார்களின் வடிவமைப்பில்தான் TUV 3OO ப்ளஸ் காரில் பின்பற்றிய டிசைன் பார்முலாவையே மஹிந்திரா பயன்படுத்தியிருப்பதை, ஸ்பை படங்களைப் பார்க்கும்போதே தெரிந்துகொள்ளலாம்.  அதாவது C-பில்லர் வரை இரண்டு எஸ்யூவிகளுக்கும் ஒரே பாடி பேனல்கள் மற்றும் மோனோகாக் சேஸிதான் இருக்கும்; D-பில்லரைப் பொறுத்தவரை, காம்பேக்ட் எஸ்யூவியில் வித்தியாசமான டெயில் கேட், டெயில் லைட் மற்றும் பின்பக்க பம்பர் இருக்கிறது. 

 

Mahindra S201 Center Console

மேலும் பெயருக்கு ஏற்ப, இது மிட் சைஸ் எஸ்யூவியைவிட 200 மி.மீ குறைவான நீளத்தில் காம்பேக்ட்டான காராகவே இருக்கும்; இதுவே மிட் சைஸ் எஸ்யூவி என்றால், அது 200 மி.மீ கூடுதல் நீளத்தைக் கொண்டிருக்கும் என்பதுடன், பின்பகுதி முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். தவிர இரண்டுமே எஸ்யூவிகள் என்பதால், அதற்கேற்றபடி அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அகலமான டயர்கள் இருக்கும் என நம்பலாம். 

கேபினில் என்ன ஸ்பெஷல்?

 

Mahindra S201 Seats


க்ரெட்டாவுக்குப் போட்டியாக வரப்போகும் அந்த மிட் சைஸ் எஸ்யூவியின் கேபின் படங்கள் நமக்குப் பிரத்யேகமாகக் கிடைத்துள்ளன. இந்த கார் பாண்டிச்சேரி Toll road அருகே டெஸ்ட்டிங்கில் இருக்கும்போது அதைப் படம்பிடித்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான டி. நவின் குமார். காரின் வெளிப்புறத்தில் DRL உடனான புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட்ஸ், அலாய் வீல்கள், இண்டிகேட்டருடன் கூடிய ரியர் வியூ மிரர், ரூஃப் ரெயில், பனி விளக்குகள், ரியர் வைப்பர், பின்பக்க ஸ்பாய்லர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, கேபினின் வடிவமைப்பு ஹூண்டாய் கார்களை நினைவுபடுத்தும்படியே அமைந்திருக்கிறது. டூயல் டோன் கலர், சென்டர் கன்சோல் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். 

 

Mahindra S201 Headlights

 

இந்த காரில் இருக்கும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், FM ரேடியோ - USB - AUX - சாட்டிலைட் நேவிகேஷன் - ரிவர்ஸ் கேமரா - ப்ளூடூத் ஆகிய வசதிகள் இருக்கின்றன. லேட்டஸ்ட் கார்களைப் போலவே, இதில் ஆப்பிள் கார் ப்ளே - மிரர் லிங்க் - ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை இருக்கும் என நம்பலாம். இதனுடன் 12V Socket, கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம், பல வித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டிரைவருக்கான ஆர்ம் ரெஸ்ட், லெதர் மற்றும் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகள் என மாடர்ன் கார்களில் காணப்படும் சிறப்பம்சங்கள் இங்கும் இடம்பெற்றுள்ளது ப்ளஸ்.


இன்ஜின் ஆப்ஷன்கள் என்னென்ன?

 

Mahindra S201 Alloy Wheels


காம்பேக்ட் எஸ்யூவியில், தனது புதிய 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் வழக்கமான 1.5 லிட்டர் mHawk 100, 3 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களைப் பொருத்தும் முடிவில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இதில் பெட்ரோல் இன்ஜின், KUV 1OO காரில் இருக்கும் G80 இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் மற்றும் டர்போ சார்ஜர் வழங்கப்பட்டிருப்பதனால், 140bhp பவரை வெளிப்படுத்தலாம். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இருக்கலாம்.

 

Mahindra S201 Front

 

இங்கே ஸ்பை படங்களில் இருக்கும் மிட் சைஸ் எஸ்யூவி, டீசல் இன்ஜினைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் 4,500 ஆர்பிஎம்முக்குப் பிறகு ரெட்லைன் குறிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் இருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மேலும் காரின் அலாய் வீலில், அப்போலோ நிறுவனத்தின் அகலமான 215/55 R17 சைஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது.

பெயர் என்னவாக இருக்கும்?

Mahindra S201 Rear


மஹிந்திரா நிறுவனம், KUV 1OO மற்றும் XUV 5OO ஆகிய மோனோகாக் சேஸி அமைப்பைக் கொண்ட கார்களை விற்பனை செய்துவருகிறது. இதில் KUV லேட்டஸ்டாக இருந்தாலும், XUV-தான் ஹிட்டடித்திருக்கிறது. எனவே காம்பேக்ட் எஸ்யூவியை KUV 3OO எனவும், மிட் சைஸ் எஸ்யூவியை XUV 3OO எனவும் பெயர் சூட்டப்படலாம். தவிர 7 காற்றுப்பைகள், ABS, EBD, ESP, Hill Hold & Hill Descent கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இருக்கும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close