வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (03/06/2018)

கடைசி தொடர்பு:20:50 (03/06/2018)

அலமாரி, சோபா, டைல்ஸ்... வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள சிம்பிள் டிப்ஸ்!

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வார இறுதியில் கிடைக்கும் ஒருநாள் என்பது, வாரம் முழுக்க விழுந்த துணிகளை துவைக்கவும், விதவிதமாக சமைக்கவும், ஒரு அவுட்டிங் அல்லது குட்டித் தூக்கம் எனவும் ஓடிவிடுகிறது. வீட்டைச் சுத்தம் செய்வது என்பது, வாரம் வாரம் தள்ளிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் மொத்தமாகச் சேர்ந்து பெரும் பூதமாகப் பயமுறுத்தும். இதைத் தவிர்க்கவும் வீடு எப்போதும் சுத்தமாக இருக்கவும் சிம்பிள் டிப்ஸ் தருகிறார், இன்டீரியர் டிசைனர் ஸ்வப்னா.

டிப்ஸ்

* கிச்சன் ஷெல்ஃப் முதல் துணி கப்போர்ட் வரை மரக்கதவு அல்லது கண்ணாடிக் கதவு போட்டு மூடிவையுங்கள். தூசி படிவது குறையும். மாதத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்தாலே போதும்.

* இனிமேல்தான் வீடு கட்டப்போகிறீர்கள் என்றால், இன்டீரியர் செய்யும்போதே, அலமாரிகளுக்கு மரம் அல்லது கண்ணாடிக் கதவுகளைப் பொருத்திவிடுங்கள். வீடு சுத்தமாக நீட் லுக்கில் தெரியும்.

ஸ்வப்னா* போட்டோக்களுக்கு மேட் லேமினேஷன் அழகாகத்தான் இருக்கும். ஆனால், கிளாஸி லேமினேஷன் செய்தீர்கள் என்றால், மெத்தென்ற துணியால் ஒரு துடை துடைத்தாலே பளிச் ஆகிவிடும்.  

* ஷோகேஸில் குட்டிக் குட்டிப் பொம்மைகள் வைக்கும் பழக்கமா? அவசியம் கண்ணாடிக் கதவு போடுங்கள். வாரம் ஒருமுறை கண்ணாடியைத் துடைக்கும் பிரெஷ் மூலம் ஷோகேஸ் வெளிப்பகுதியைத் துடைக்கலாம். மாதம் ஒருமுறை பொம்மைகளைத் துடைக்கலாம். உங்கள் வீட்டு வரவேற்பறை ஜம்மென்று இருக்கும். 

* வாசலில் செருப்பு வைப்பதற்குக் கதவு போட்ட தனி ரேக், வீட்டுக்குள் நியூஸ் பேப்பர்ஸ் வைக்க தனி ரேக், குழந்தைகளின் பொம்மைகளை வைக்கத் தனி கூடை என இருந்தால், வீடு கசகசவென இருக்காது. இதை உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளையும் ஃபாலோ செய்யப் பழக்கினால் மட்டுமே வீடு 100 சதவிகிதம் சுத்தமாக இருக்கும். 

* கர்ட்டன்களை இரண்டு வாரத்துக்கு ஒருமுறை துவையுங்கள். முடியவில்லை என்றால், இரண்டு செட் கர்ட்டன்ஸ் வாங்கி மாற்றி மாற்றி உபயோகியுங்கள்.

* மின்விசிறி மாதிரியான ஃபிட்டிங் பொருள்களை மாதத்துக்கு ஒருமுறை ஈரத்துணியால் துடைக்கலாம்.

* தரையில் போடும் தரியை ( Dari) வாரத்துக்கு ஒருமுறை தூசி தட்டியே ஆகவேண்டும். ஏனென்றால், இதன்மேல் குழந்தைகள் நடப்பது மட்டுமின்றி, உட்காரவும் செய்வார்கள்.

டிப்ஸ்

* சோபா செட்டை வருடத்துக்கு ஒருமுறை வாஷ் செய்தாலே போதும். இது முடியாதவர்கள், இதற்கென இருக்கிறவர்களிடம் சொல்லி, வாஷ் பண்ணலாம். துணி, வெல்வெட் என்று எந்த வகை சோபாவாக இருந்தாலும் வாக்யூம் செய்து, சோப் வாட்டரால் வாஷ் செய்து, புதிதுபோல மாற்றித் தருவார்கள். 

* பெட்ஷீட், தலையணை உறைகளை இரண்டு அல்லது மூன்று செட் வைத்துக்கொண்டு, வாரத்துக்கு ஒருமுறை மாற்றுங்கள். கைவசம் இரண்டு, மூன்று செட் இருப்பதால், நிதானமாகத் துவைக்கலாம்.

* அலமாரியோ அல்லது வார்ட்ராபோ... இன்னர் கிளாத், புடவை, பேண்டு, டாப், குழந்தைகளுக்கு, கணவருக்கு என்று தனித்தனியாக ஆடைகளைப் பிரித்துவையுங்கள். எடுப்பதும் சுலபம். சுலபத்தில் துணிகள் கலையாது.

* எவ்வளவு அழகான இன்டீரியர் செய்திருந்தாலும் துவைத்த துணிகளை மடிக்காமல் அப்படியே வைத்திருந்தால், மொத்த வீட்டின் அழகும் கெட்டுவிடும். அதனால், துவைத்த துணிகளைத் தினமும் மடித்துவிடுங்கள். அல்லது, அதற்கென ஒரு மூங்கில் கூடையில் வைத்து மூடுங்கள்.

* டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் சிறிய அழுக்கு தென்பட்ட அடுத்த நொடியே துடைத்துவிடுங்கள். தள்ளிப் போட்டால் கண்ணாடி கறைப் பிடித்து வேலையை இரு மடங்காக்கும். 

* டாய்லெட்டில் இருக்கும் கண்ணாடியைத் தினமும் குளித்துவிட்டு வெளியே வரும்போதே ஸ்பான்சால் ஒருமுறை துடையுங்கள். கவனிக்காமல்விட்டால் தண்ணீர்த் திவலை கறைகள் விழும். துடைக்கும் வேலையும் இரு மடங்காகும்.

* மரத்தாலான தரை போடுவதாக இருந்தால், லேசாக லேமினேட் செய்த மரத்தை உபயோகியுங்கள். சுத்தம் செய்வது சுலபம். டைல்ஸ் போட்டீர்கள் என்றாலும் துடைப்பது சுலபம். மொசைக் தரையில் பிடித்த அழுக்கு அழுத்தி அழுத்தித் துடைத்தால்தான் போகும். முடிந்தவரை மொசைக் தரையை அவாய்டு செய்தால், வீட்டுத் தரையைப் பராமரிப்பது ஈஸியான வேலைதான், 

* டைல்ஸ் போடும்போது பேப்பர் நுனிகூட உள்ளே போகமுடியாத அளவுக்குப் பதிக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் டைல்ஸ் ஓரங்களில் படியும் அழுக்குக் கண்களுக்குத் தெரியாது. பெரிய பெரிய டைல்ஸ் போட்டால், அவற்றின் ஜாயின்ட் குறைவாக இருக்கும். அதனால், அழுக்கு சேரும் இடங்களும் குறையும். புதிதாக வீடு கட்டப்போகிறீர்கள் அல்லது டைல்ஸ் மாற்றப்போகிறீர்கள் என்றால், மேலே சொன்னதை பின்பற்றுங்கள்.

டைல்ஸ் நடுவே இருக்கும் இடைவெளிகளில் பட்டைப் பட்டையாக ஒயிட் சிமென்ட் தடவுவது, சின்னச் சின்ன டைல்ஸ் போடுவது இரண்டுமே தரையை சீக்கிரம் அழுக்காகக் காட்டும். அதனால், இந்த இரண்டு விஷயங்களையும் தவிருங்கள்.

மேலே சொன்ன டிப்ஸ் வேலைக்குப் போகும் பெண்களுக்கு மட்டுமின்றி, ஹோம் மேக்கர்களுக்கும் பொருந்தும். 


டிரெண்டிங் @ விகடன்