வெளியிடப்பட்ட நேரம்: 08:01 (04/06/2018)

கடைசி தொடர்பு:08:28 (04/06/2018)

பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி? - பாடம் சொல்லும் கதை! #MotivationStory

ஒரு தேர்ந்த நிர்வாகி, தன் பணியாளரின் பலவீனத்தையும் நிறுவனத்துக்குச் சாதகமாக மாற்றிவிடுவார். அது எப்படி சாத்தியமாகும் என்ற பாடத்தைக் இந்தக் கதை கற்றுத்தரும்.

பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி? - பாடம் சொல்லும் கதை! #MotivationStory

உன்னை அறிந்தால்

`பென்சில்களுக்கு அழிப்பான்கள் தேவைப்படுவது தவறுகளைத் திருத்தத்தான்!’ என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி! தவறே செய்யாதவர்கள் இங்கு யாருமில்லை. ஒரு வேலையை மிகச் சரியாக, துல்லியமாகச் செய்பவர்கள் மிக மிக அரிதானவர்கள். ஆக, எல்லோரிடமும் குறையிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பிறரின் குறைகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதுதான் தலைமைப் பண்பின் அடையாளம். ஒரு தேர்ந்த நிர்வாகி, தன் பணியாளர்களின் பலவீனங்களையும் நிறுவனத்துக்குச் சாதகமாக மாற்றிவிடுவார். பணியிடம், பள்ளி, பிசினஸ்... என அனைத்திலுமே இது சாத்தியமே. அதற்கு பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது இந்தக் கதை. 

அது ஒரு மலையடிவார கிராமம். அங்கே ஒரு விவசாயி இருந்தார். அந்த கிராமத்துக்கு குடிநீருக்கு ஆதாரமாக இருந்தது, சற்று தூரத்திலிருந்த ஓடை மட்டுமே. விவசாயியிடம் இரண்டு மண் பானைகளிருந்தன. பானைகளை ஒரு கம்பின் இரு நுனிகளிலும் கட்டித் தொங்கவிட்டு, கம்பின் நடுப் பகுதியைத் தோளில் வைத்துக்கொள்வார். அதைத் தூக்கிக்கொண்டு ஓடைக்குப் போய் நீரெடுத்துக்கொண்டு திரும்பி வருவார். இது அவருடைய தினசரி வழக்கம். அந்தப் பானைகளில் ஒன்றில் லேசாகக் கீறல் விழுந்து ஓட்டையாகியிருந்தது. மற்றொன்று, எந்தக் குறையும் இல்லாத முழுமையான பானை. விவசாயி ஓடையிலிருந்து வீடு திரும்பும்போது, நல்ல பானையில் நிரப்பப்பட்ட தண்ணீர் அப்படியே முழுவதுமாக இருக்கும். கீறல் விழுந்த பானைத் தண்ணீரில் பாதி நீர் கீழே வடிந்து போயிருக்கும். 

கதை

பல வருடங்களாக அந்த மனிதர், இரண்டு பானைகளில் நீர் நிரப்பி, வீட்டுக்கு ஒன்றரைப் பானைத் தண்ணீரோடு திரும்பிக்கொண்டிருந்தார். குறையில்லாத நல்ல பானைக்கு, தன் வேலையை மிகச் சரியாகச் செய்துவருவதில் பெருமை. கீறல் விழுந்த பானை, தன்னை நினைத்து நினைத்து அவமானப்பட்டுக்கொண்டிருந்தது. 

ஒருநாள், ஓடையில் குனிந்து பானைகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டிருந்தார் விவசாயி. கீறல் விழுந்த பானை அதற்கும் மேல் பொறுக்க முடியாமல் அவரிடம் பேசியது. ``ஐயா... என்னை மன்னிச்சிடுங்க!’’ 

முதலில் குரல் எங்கிருந்து வருகிறது என்பது விவசாயிக்குப் புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். ``ஐயா... நான் உங்க பானை பேசுறேன்’’ என்றதும் அதிர்ந்து போனார். அதை ஆச்சர்யமாகப் பார்த்தார். 

``ஐயா... என்னை மன்னிப்பீங்களா?’’ 

``எதுக்கு? நீ ஏன் என்கிட்ட மன்னிப்பு கேட்கிறே?’’

``என்மேல கீறல் விழுந்ததால நீங்க முழுசா தண்ணீரை நிரப்பினாலும், என்னால பாதித் தண்ணீரைத்தான் வீட்டுக்குக் கொண்டுபோக முடியுது. நீங்க எதிர்பார்த்ததை என்னால நிறைவேற்ற முடியலை. அதுக்காகத்தான் மன்னிப்பு கேட்கிறேன்.’’ 

இதற்குப் பதில் சொல்லாமல் விவசாயி பானைகளில் ஓடைத் தண்ணீரை நிரப்பினார். அவற்றைக் கரைக்கு கொண்டு வந்து கம்பின் இரு நுனிகளிலும் கட்டினார். பிறகு கீறல் விழுந்த பானையிடம் சொன்னார்... ``இன்னிக்கு நாம வீட்டுக்குப் போகும்போது நாம போகும் பாதையை நல்லா கவனிச்சிக்கிட்டே வா... என்ன?’’ பானை அதற்கு ஒப்புக்கொண்டது. 

அவர் சொன்னபடியே, வீட்டுக்குச் செல்லும் பாதையை கவனமாகப் பார்த்துக்கொண்டே வந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வழக்கம்போல கீறல் பானையிலிருந்த தண்ணீரில் பாதி காலியாகியிருந்தது. விவசாயி பானைகளைக் கீழே இறக்கிவைத்துவிட்டு கேட்டார்... ``வழியில நீ என்ன பார்த்தே?’’ 

``நாம வந்த பாதையெல்லாம் அழகழகான பூக்கள் பூத்திருந்துச்சு.’’ 

 

பூக்கள்

 

``ரொம்பச் சரி. பாதையில பூக்கள் பூத்திருந்ததுதான். ஆனா, அதெல்லாம் பாதையின் ஒரு பக்கம் மட்டுமே பூத்திருந்ததை கவனிச்சியா? இதோ பாரு... நான் உன்னோட கீறலையும், அதனால ஓட்டை விழுந்ததையும், தண்ணீர் வழியுறதையும் எப்பவுமே ஞாபகத்துலவெச்சிருக்கேன். அதை எனக்குச் சாதகமா பயன்படுத்திக்க நினைச்சேன். ஓடைக்குப் போற பாதை முழுக்க எனக்கு பிடிச்ச பூக்களுக்கான விதைகளைப் போட்டுவெச்சேன்; சில செடிகளை நட்டுவெச்சேன். ஒவ்வொரு நாளும் நாம ஓடையிலருந்து திரும்பி வரும்போது, அந்த விதைகளுக்கும் செடிகளுக்கும் நீதான் தண்ணீர் வார்த்தே. உன்னாலதான் அற்புதமான, அழகான அந்தப் பூக்கள் பூத்துச்சு. அதையெல்லாம் நான் பூஜைக்குப் பயன்படுத்துறேன்; என் நண்பர்களுக்கும் சொந்தக்காரங்களுக்கும் கொடுக்கிறேன். உன்னோட கீறல் இல்லாம இந்த சந்தோஷம் எனக்குக் கிடைச்சிருக்காது.’’ 

***      

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்