"என் பயண நண்பர்கள் பூனையும் வேனும்தான்!" - கார்ப்பரேட் வேலையை விட்டு என்ன செய்கிறார் இவர்? | An Australian rich east Travels in van with his Cat

வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (04/06/2018)

கடைசி தொடர்பு:09:39 (04/06/2018)

"என் பயண நண்பர்கள் பூனையும் வேனும்தான்!" - கார்ப்பரேட் வேலையை விட்டு என்ன செய்கிறார் இவர்?

ரிச் ஈஸ்ட் (Rich East) . ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். மே மாதம் 2015ம் ஆண்டு, ஒரு வண்டி, ஒரு பூனையோடு ஆஸ்திரேலியாவைச் சுற்றி தன் பயணத்தைத் தொடங்கினார். தற்போது 50 ஆயிரம் கிமீ தூரத்தைக் கடந்து இன்னும், இன்னும் பயணித்துக் கொண்டேயிருக்கிறார்.

"போதும்டா இந்த வாழ்க்கை... என்ன இருக்கு இதுல? எதுக்காக இந்த ஓட்டம்? யாருக்காக இந்த ஓட்டம்? எதையும் ரசிக்க முடியாம... என்னையும் ரசிக்க முடியாம, யாரையும் சந்தோஷப்படுத்த முடியாம, நானும் சந்தோஷமாக இல்லாம, பிழைக்குறதுக்கான பணத்தத் தேடி, தேடி...ஓடி, ஓடி... எல்லாம் முடிஞ்சு, எதுவுமே முடியாத மாதிரி...எல்லாம் இருந்து, எதுவுமே இல்லாத மாதிரி ஒரு வாழ்க்கை. இனியும் இப்படி ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லைன்னு முடிவு செஞ்ச அந்த நாள என்னால என்னிக்குமே மறக்க முடியாது. அது 2014யின் தொடக்கம். என்னுடைய 10 வருட கார்ப்பரேட் வாழ்வை முடிக்க முடிவு செஞ்சேன். என்னோட பழைய வாழ்க்கைக்கு 'பை' சொல்லி...புது வாழ்க்கைக்கு 'ஹாய்' சொன்ன அந்தத் தருணம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது...அன்று தொடங்கி இந்த நொடி வரை என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவ்வளவு உண்மையாவும், சந்தோஷமாகவும் வாழ்ந்திட்டிருக்கேன். இல்ல... வாழ்ந்திட்டிருக்கோம்...ஆமா, நானும் என் செல்லப் பூனை வில்லோவும்... " 

ரிச் - வில்லோ - பூனைக் கதை

ரிச் ஈஸ்ட் (Rich East) . ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். மே மாதம் 2015-ம் ஆண்டு, ஒரு வண்டி, ஒரு பூனையோடு ஆஸ்திரேலியாவைச் சுற்றி தன் பயணத்தைத் தொடங்கினார். தற்போது 50 ஆயிரம் கிமீ தூரத்தைக் கடந்து இன்னும், இன்னும் பயணித்துக் கொண்டேயிருக்கிறார். 

ஊர்சுற்றும் ஆஸ்திரேலியர்

தான் பத்தாண்டுகளாகப் பார்த்து வந்த கார்ப்பரேட் வேலையை விட்டதும் முதன் வேலையாக ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் `ட்ரான்ஸ்போர்டர்' (Transporter) எனும் ஒரு பழைய வேனை விலைக்கு வாங்குகிறார். தன்னிடமிருக்கும் எல்லாப் பொருள்களையும் விற்று, அந்த வேனையே தன் வீடாக மாற்றுகிறார்.

ஊர்சுற்றும் ரிச் - வில்லோ

எந்தத் திட்டமும் ரிச்சிடம் கிடையாது. பெரும் மகிழ்ச்சியோடு இந்த உலகை நேசித்து வாழ வேண்டும் என்பதைத் தவிர. பயணத்துக்கான தயாரிப்புகளில் இருக்கும்போது தனக்குள் எழுந்த கேள்வியை இப்படிச் சொல்கிறார் ரிச்...

`` எல்லாம் முடிந்துவிட்டது. சீக்கிரமே கிளம்ப வேண்டும். என்னிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. என்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். ஒரே ஒரு கேள்வி மட்டும் இருந்தது. நான் இத்தனை நாள்கள் செல்லமாக வளர்த்த என் பூனையை மட்டும் என்ன செய்வது? அது என்னிடம் பிறந்து, வளர்ந்தது அல்ல... அது யாரோ வளர்த்து கைவிடப்பட்டது. ஆனால், எனக்கும் அதற்கும் இடையே ஒரு அன்பு பகிர்தல் உண்டு. இவளை நான் தனியாக விட்டுப் போக முடியாது. இவளை நான் கண்டிப்பாக என்னுடன் கூட்டிப் போக வேண்டும். இந்தக் குரல் மட்டும் என்னுள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. என் சின்ன வீட்டுக்குள், அவளுக்கும் ஒரு மிகச் சிறிய உலகை அமைத்தேன். நானும், அவளும் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இதோ...இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறோம்."

ஊர்சிற்றும் ரிச் - வில்லோ

பொதுவாக இதுபோன்ற பயணங்களுக்கு நாய்கள் தான் உற்ற துணையாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், பூனையோடு பயணிப்பது சற்று கடினமான விஷயம் தான். ரிச்சின் பூனை வில்லோ (Willow) பகலில் பெரும்பாலும் தூங்கிக்கொண்டேதானிருக்கும். இரவுகளில் தான் அது சுறுசுறுப்பாக இயங்கும். வண்டியை விட்டு அதிக தூரம் வில்லோ போய்விடுவதில்லை. இருந்தும் அதற்கு கழுத்தில் ஜிபிஎஸ் ட்ராக்கர் பொருத்தப்பட்டுள்ளது.

வில்லோவைப் பயணத்துக்கு கொஞ்சம், கொஞ்சமாக தயார்படுத்தியுள்ளார் ரிச். முதலில் ஒரு நாள் பயணங்கள், வாரப் பயணங்கள் எனத் தொடங்கி இன்று முழு நேரமாகப் பயணத்தில் செலவிடும் அளவுக்கு வில்லோ தயாராகியிருக்கிறது. 

வில்லோ

பயணத்தில் வேகத்துக்கு ரிச் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வேக, வேகமாக அடுத்தடுத்த இடங்களை அடைய வேண்டும் என்ற இலக்குகளும் இல்லை. மிகவும் பொறுமையாக பயணிக்கிறார்கள். சராசரியாக வாரத்திற்கு 60 கிமீ தூரம் என்ற கணக்கில் பயணிக்கிறார்கள்.  பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கிறார்கள். தங்களுடைய பயண வாழ்க்கையை வலைப் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டும் வருகிறார்கள். 

தற்சமயம் ரிச்சும், வில்லோவும், ட்ரான்ஸ்போர்ட்டரும் மனிதர்கள் வாழாத ஒரு ஆஸ்திரேலிய தீவில் இருக்கிறார்கள். அவர்களிடம் எந்தத் தொலைத் தொடர்பு சாதனங்களும், கருவிகளும் கிடையாது. ஜூன் 11-ம் தேதி மீண்டும் இந்த நவீன உலகுக்குள் வருகிறோம். அதுவரை கடலோடும், காற்றோடும் கலந்திருப்போம் என்று சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார் ரிச். 

ரிச் - வில்லோ - ஊர் சுற்றும் பூனை

தன் பயணங்கள் குறித்து ரிச் இன்னொன்றையும் சொல்கிறார்... 

``மனித இதயங்களையும், அதில் ஊற்றெடுக்கும் அன்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தப் பூமி ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல. எங்கள் பயணத்துக்கு எதுவும் தூரமில்லை..." 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close