24 நாள்கள் கடலில் மிதந்தவர்களைக் காப்பாற்றிய பறவை! - உண்மைக் கதை #FeelGoodStory | Lost At Sea For 24 Days - rescue story of Eddie Rickenbacker

வெளியிடப்பட்ட நேரம்: 08:03 (05/06/2018)

கடைசி தொடர்பு:08:03 (05/06/2018)

24 நாள்கள் கடலில் மிதந்தவர்களைக் காப்பாற்றிய பறவை! - உண்மைக் கதை #FeelGoodStory

உயிர்காத்த பறவைக்கு இறுதிக்காலம் வரை நன்றி சொன்னவரைப் பற்றிய கதை.

24 நாள்கள் கடலில் மிதந்தவர்களைக் காப்பாற்றிய பறவை! - உண்மைக் கதை #FeelGoodStory


கதை

`நன்றியறிதல் என்பது மிக உயர்ந்த ஆன்மாக்களின் அடையாளம்’ என்கிறார் கிரேக்கக் கதாசிரியர் ஈசாப் (Aesop). யார் யாரோ, எந்தெந்தச் சந்தர்ப்பங்களிலோ, என்னென்னவோ உதவிகளை நமக்குச் செய்திருப்பார்கள். அத்தனையையும் நாம் நினைவில் வைத்திருப்பதில்லை. சிறிய உதவிகள் இருக்கட்டும்... உயிரையே காப்பாற்றித் தந்தவர்களை, நம் வாழ்க்கையே மாறுவதற்குக் காரணமாக இருந்தவர்களைக்கூட மனிதர்கள் மறந்துவிடும்  இது. ஆனாலும், தங்களுக்கு உதவி செய்தவர்களை மறக்காத நல்ல உள்ளம் படைத்த உயர்ந்த மனிதர்கள் உலகெங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு மனிதர், தனக்கு உதவி செய்த பறவைக்கு தன் இறுதிக்காலம் வரை நன்றி சொன்னார். அந்தக் கதை இது!

எல்லா வெள்ளிக்கிழமை மாலை நேரத்திலும் அது தவறாமல் நடக்கும். சூரியன், அடர் மஞ்சள் நிறத்துக்கு மாறி, நீலக் கடலுக்குள் மூழ்கத் தொடங்கும் நேரத்துக்குப் பெரும்பாலும் அவர் வந்துவிடுவார். அமெரிக்காவில் கடற்கரையோரங்களில் அலைகள் ஊருக்குள் வந்துவிடாமலிருக்க அலை தாங்கும் மேடை (Pier) ஒன்றை நிறுவி வைப்பார்கள். ஒரு நீண்ட பாலம் மாதிரி அது இருக்கும். அந்த முதியவர் அந்தப் பாலத்தின் மீதேறி நடப்பார். எலும்பு துருத்தித் தெரியும் தன் கரத்தில் ஒரு பக்கெட்டை வைத்திருப்பார். அதில் இறால் மீன்கள் நிரம்பியிருக்கும். மேடையின் விளிம்புவரை நடப்பார். அது, அவருக்கேயான பிரத்யேக உலகத்தில் அவர் நுழைவதுபோலிருக்கும்.

பறவை

அங்கே போய் அவர் நின்றதும், அவர் தனியாக இல்லை என்பதுபோல சத்தம் கேட்கும். வானத்தின் மேல் சிறு வெண் புள்ளிகள் தெரியும். அவை கீழே வரும்போதுதான் அவை அத்தனையும் பறவைகள் என்பது தெரியும்; அவற்றின் கிறீச்சொலியும் கேட்கும். சில நிமிடங்களில் டஜன் கணக்கில் அந்த ஸீகல் (Seagull) பறவைகள் அவரைச் சூழ்ந்துகொள்ளும். தங்களுடைய இறக்கைகளை படபடவென அடித்துக்கொள்ள ஆரம்பிக்கும். அந்த முதியவர், தான் கொண்டு வந்திருக்கும் பக்கெட்டிலிருக்கும் இறால் மீன்களை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை நோக்கி வீசுவார். பசியோடிருக்கும் பறவைகள் இறால்களைக் கொத்தித் தின்ன ஆரம்பிக்கும். அவர் இறால்களைப் போடும்போது உற்றுக் கேட்டால் அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனிக்க முடியும்... `தேங்க் யூ... தேங்க் யூ’ என்று விடாமல் சொல்லிக்கொண்டிருப்பார்.

சில நிமிடங்களில் பக்கெட் காலியாகியிருக்கும். ஆனால், `எட்’ (Ed) என்று அழைக்கப்படும் அந்த முதியவர் உடனே அங்கிருந்து கிளம்பிப் போய்விட மாட்டார். கடலையே வெறித்து பார்த்தபடி நிற்பார். பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருப்பார்.

அவருடைய முழுப் பெயர் எட்டி ரிக்கன்பேக்கர் (Eddie Rickenbacker). முதலாம் உலகப் போரின்போது ஒரு ஹீரோபோலக் கொண்டாடப்பட்டவர். இரண்டாம் உலகப் போரிலும் அமெரிக்காவுக்குப் போர் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியவர். இரண்டாம் உலகப் போரின்போது, அவர் சென்ற விமானம் ஒன்று பசிபிக் கடலில் மூழ்கிப் போனது. அவரும் அவருடன் சென்ற ஏழுபேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் காக்கும் படகில் (Life Raft) ஏறித் தப்பித்தார்கள்.

பசிபிக் பெருங்கடல்...கடல் நீரின் மேல் கேப்டன் எட்டி ரிக்கன்பேக்கரும் உடன் வந்தவர்களும் நாள் கணக்கில் மிதந்தார்கள். பகல் முழுக்க சூரியனின் வெப்பத்தோடு போராடினார்கள்; சுறா மீன்களோடு சண்டையிட்டுத் தப்பித்தார்கள்; இவற்றைவிட தாகத்தோடும் பசியோடும் போராடினார்கள். கடலில் மிதக்க ஆரம்பித்த எட்டாவது நாளே அவர்களிடமிருந்த உணவு தீர்ந்துபோயிருந்தது. உணவில்லை; குடிக்கத் தண்ணீரில்லை. நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால், தூரத்தில் எங்கேயோ கரையிருந்தது. இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதோ, உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதோ யாருக்கும் தெரியாது. ஆனால், தினமும் அமெரிக்காவில் பல லட்சக்கணக்கானவர்கள் எட்டி ரிக்கன்பேக்கர் எங்கேயிருக்கிறார் என்று தேடிக்கொண்டிருந்தார்கள்.

கடலில் மிதந்துகொண்டிருந்த அந்த மனிதர்களுக்கு ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால்தான் உயிர்பிழைப்பது சாத்தியம் என்று உறுதியாகத் தெரிந்தது. பசியோடும் தாகத்தோடும் தவித்துக்கொண்டிருந்த ஒரு பிற்பகலில், ஏதாவது அதிசயம் நடக்க வேண்டும் என்று வேண்டி அவர்கள் கூட்டாகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு களைப்பில் அரைத் தூக்கம் போட்டார்கள். எட்டி ரிக்கன்பேக்கர் வெயில் முகத்தில் படாதபடி தன் தொப்பியால் முகத்தை மூக்கு நுனிவரை மூடிக்கொண்டு, சாய்ந்து படுத்திருந்தார். நேரம் போய்க்கொண்டிருந்தது.

படகு

திடீரென்று ஏதோ ஓர் அலை உயிர் காக்கும் படகின் மேல் மோதியதுபோல ஒரு சத்தம்... ஏதோ ஒன்று அவருடைய தொப்பியின் மேல் வந்து உட்கார்ந்ததை உணர்ந்தார் எட்டி. அது ஒரு கடல் பறவை என்பதை, அதன் சிறகடிப்பிலிருந்து உணர்ந்துகொண்டார். அவர் அசையாமல் சில விநாடிகள் அப்படியேயிருந்தார். அடுத்து என்ன செய்வது என்று யோசித்தார். சடக்கென்று காற்றில் கையை வீசி பறவையைப் பிடித்தார்.  கிறீச்சிட ஆரம்பித்திருந்தது; அவர் கையிலிருந்து விடுபட இறக்கைகளை அடித்துத் துடித்தது. ஆனால் எட்டி எப்படியோ சாதுர்யமாக அந்தப் பறவையின் கழுத்தைப் பிடித்து இறுக்கிவிட்டார்.

எட்டி ரிக்கன்பேக்கர்பிறகு எல்லோரும் சேர்ந்து ஸீகலின் சிறகுகளை உதிர்த்தார்கள். அன்றைக்கு அந்தக் குழுவிலிருந்த மொத்தப் பேருக்கும் அந்தப் பறவை சிறிய உணவானது. மீதமிருந்த பறவையின் குடல் பகுதியை தூண்டில் இரையாக்கினார்கள். அதைக் கொண்டு கடலில் மீன் பிடித்தார்கள். ஒரு சுழற்சியாக ஒன்றை உண்டு, மீதத்தை தூண்டில் இரையாக்கி அவர்கள் நாள்களை நகர்த்த ஆரம்பித்திருந்தார்கள். இயற்கையும் அவர்களுக்குத் துணைபுரிந்தது. அவ்வப்போது சிறியதாகப் பெய்த மழை அவர்களின் தாகம் தீர்க்க உதவியது. இப்படி 24 தினங்கள் அவர்கள் கடலில் மிதந்து, கடைசியாகக் காப்பாற்றப்பட்டார்கள்.

அந்தக் கடுமையான துன்ப நிகழ்வுக்குப் பிறகும் பல ஆண்டுகள் எட்டி ரிக்கன்பேக்கர் உயிர் வாழ்ந்தார். அவரையும் அவர் குழுவினரையும் காப்பாற்றிய அந்த முதல் ஸீகல் அவர் நினைவிலேயே இருந்தது. அதற்குப் பிறகு ஒருபோதும் ஸீகலைப் பார்க்கும்போதெல்லாம் அவர் `தேங்க் யூ’ சொல்லத் தவறியதில்லை. அந்த கடல் பறவைகளுக்கு நன்றி சொல்வதற்காகத்தான் அவர் வாழ்நாள் முழுக்க ஒரு பக்கெட் நிறைய இறால் மீன்களோடு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் கடற்கரையிலிருக்கும் அலை தாங்கும் மேடையில் நடந்துகொண்டிருந்தார்.

(குறிப்பு: எட்டி ரிக்கன்பேக்கர் `ஈஸ்டர்ன் ஏர்லைன்’ஸை நிறுவியவர்களில் ஒருவர். அமெரிக்க விமானப்படையில் பைலட்டாக இருந்தவர், அமெரிக்காவின் ஃபைட்டர் ஏஸ் (America's Fighter Ace) என்ற கௌரவம் பெற்றவர்.)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close