வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (05/06/2018)

கடைசி தொடர்பு:18:45 (05/06/2018)

தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த 1,337 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி!

தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த 1,337 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி!

'நீட் தேர்வு, உயிர்க்கொல்லியாக இருக்கிறது!' என விமர்சனங்கள் மீண்டும் உயிர்பெற்றிருக்கும் நிலையில், 'அரசுப் பள்ளியில் படித்த 1,337 பேர், நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள்!' என்கிறது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை! 

நீட் தேர்வு

மருத்துவம் படிப்பதற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 6-ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து 1,14,602 பேர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழ் மொழியில் தேர்வு எழுதியவர்கள் 24,720 பேர். இந்நிலையில், நீட் தேர்வின் முடிவுகள் நேற்று (4-6-2018) வெளியாகின. இதில் `அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 1,337 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்' என்ற விவரத்தை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவில், தேர்வு எழுதிய மாணவர்களில் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்குக் குறைந்தபட்ச தேர்வு மதிப்பெண்ணாக 119-ம்,  இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு 96 மதிப்பெண்ணும் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயித்தது இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ தற்போது அரசுப் பயிற்சி மையத்தில் தேர்ச்சிபெற்றவர்களின் விவரத்தையும் தொகுத்துவருகிறது. இந்தப் பட்டியலில், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து அதிக அளவிலான மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். 

நீட் தேர்வு

நீட் தேர்வு முடிவில், ராஜஸ்தானிலிருந்து 74.29 சதவிகிதமும், டெல்லியிலிருந்து 73.72 சதவிகிதமும், ஹரியானா மாநிலத்திலிருந்து 72.59 சதவிகிதமும், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 72.54 சதவிகிதமும், சண்டிகர் யூனியன் பிரதேசத்திலிருந்து 71.81 சதவிகிதம் பேரும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

கடைசியிலிருந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 39.55 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் டாமன்-டையூ யூனியன்பிரதேசமும், நாகாலாந்து மாநிலமும் உள்ளன. கல்வியில் பின்தங்கியதாகச் சொல்லப்படும் ஜார்கண்ட், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களிலிருந்து 60 சதவிகிதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். தென்னிந்தியாவில் தெலங்கானாவிலிருந்து 68.88 சதவிகிதம் பேரும், கேரளாவிலிருந்து 66.73 சதவிகிதம் பேரும், கர்நாடகாவிலிருந்து 63.13 சதவிகிதம் பேரும் தேர்ச்சிபெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதியவர் 83,359 பேர். இதில் தேர்ச்சிபெற்றவர்கள் 32,368 பேர். அதாவது 38.83 சதவிகிதம். இந்த ஆண்டு 1,14,602 தேர்வு எழுதியவர்களில் 45,336 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 39.55 சதவிகிதம்.  கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 30,000 பேர் கூடுதலாக நீட் தேர்வு எழுதியுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் ஒரு சதவிகிதம் முன்னேறி இருக்கிறோம். தேர்ச்சிபெற்றவர்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. இந்நிலையில், நீட் தேர்வில் தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்பட்டதா அல்லது முன்னேறி வருகிறதா என்பது குறித்து கல்வியாளர்களிடம் பேசினோம்...

``நீட் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டதில் தேர்வு எழுதியவர்களில் அதிக சதவிகிதம் தேர்ச்சிபெற்ற முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்களில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அதிகம் உள்ளன. மேலும், இந்த மாநிலங்களில் நீண்டகாலமாக மாணவர்கள் அகில இந்திய மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காகத் தேர்வு எழுதிவருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டிலிருந்து மட்டுமே நீட் தேர்வை எதிர்கொண்டுவருகிறோம். மேலும், மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்டன. இதுவும் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டுகளில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மட்டுமே மாணவர்கள் மதிப்பெண் பெற ஆர்வம்காட்டினர். இதனால் ப்ளஸ் ஒன் வகுப்புப் பாடங்களைச் சரியாகப் படிக்காமல் நீட் தேர்வு எழுதியவர்களும் உண்டு" என்றவர்கள், தமிழக அரசு முன்கூட்டியே களம் இறங்கியிருந்தால் தேர்ச்சி விகிதமும் கூடியிருக்கும் எனப் பட்டியலிட்டனர்.   

நீட் தேர்வு

``தமிழக அரசு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்த பிறகே பயிற்சி மையத்தைத் தொடங்கியது. மேலும் ஒவ்வொரு வட்டார அளவிலும் ஒரு பயிற்சி மையம் என்று ஆரம்பிக்கப்பட்டதில், பல பயிற்சி மையங்களில் முறையான வசதிகள்கூட இல்லாமல் சரியாகச் செயல்படவில்லை.  தமிழக அரசு, தேர்வுக்கு 30 நாளுக்கு முன்பாக 3,000 மாணவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி வழங்கியதிலும் போதுமான வசதிகள் இல்லை. இவை எல்லாமே தமிழக மாணவர்கள் தடுமாற்றமடையவைத்தன. ஆனாலும், இந்த ஆண்டு 1,337 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர் என்பதே சற்று ஆறுதல். கடந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஐந்து பேருக்கு மட்டும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் வேளையில், இந்த ஆண்டு பல மாணவர்களுக்கும் இடம் கிடைக்க இந்த எண்ணிக்கை நிச்சயம் வழிவகுக்கும். இனி வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் அரசு மாணவர்கள் தேர்ச்சிபெறுவார்கள்" என்றனர். 

அடுத்தடுத்த ஆண்டுகளில், தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சிபெற்று சாதனை படைக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம்!


டிரெண்டிங் @ விகடன்