வெறும் 57 சென்ட் பணத்தில் சரித்திரம் படைத்த சிறுமி! - உண்மைக்கதை #FeelGoodStory

வெறும் 57 சென்ட் பணத்தில் சரித்திரம் படைத்த சிறுமி! - உண்மைக்கதை #FeelGoodStory

FeelGoodStory

`பிறருக்காக வாழ்வது மட்டும்தான் பயனுள்ள வாழ்க்கை!’ - ஒவ்வொருவரும் மனதில் பதித்துக்கொள்ளவேண்டிய இந்த வாசகத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein). ஆனால், அது அத்தனை எளிதான காரியமல்ல. பொது வாழ்க்கையில் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிற பலரும்கூட தங்களுக்காகவும் குடும்பத்துக்காகவும் வாழ்கிற காலம்! உண்மையில், பிறருக்காக வாழ்பவர்கள், வாழும் காலத்தில் அறியப்படாமல் போனாலும், வரலாற்றில் நிலைத்து நிற்பார்கள். மற்றவர்களுக்கு நல்லது நினைக்கும் அவர்களின் சுபாவம், சரித்திரத்தில் அவர்களுக்கு மாறாத இடத்தையும் புகழையும் பெற்றுத் தந்துவிடும். அப்படி வரலாற்றில் இடம்பெற்ற இருவரின் கதை இது! 

ஐரோப்பிய நாடுகளில் `சன்டே ஸ்கூல்’ என்று ஒன்று உண்டு. வாரம் முழுக்க வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்காகவும் சிறார்களுக்காகவும் சர்ச்சில் நடத்தப்படும் பள்ளி. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பள்ளிகளில் நடத்தப்படும் வகுப்புகளில் எழுத, படிக்க, கணக்குப் பாடம் மற்றும் பைபிளிலிருந்து சில பாடங்களும் கற்றுக் கொடுக்கப்படும். 

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம். ஒரு சின்னஞ்சிறு சர்ச்சுக்கு அருகே ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர் துளிர்த்திருந்தது. அந்த வழியாக வந்த பாதிரியார் ஒருவர் சிறுமியைப் பார்த்தார். அவள் தேம்புவதும் தெரிந்தது. 

``என்ன குழந்தை... ஏன் அழுதுகிட்டு நிக்கிறே?’’ என்று கேட்டார்.  

``என்னால சன்டே ஸ்கூலுக்குப் போக முடியலை. அங்கே... சர்ச்சுக்குள்ள ஒரே கூட்டமா இருக்கு...’’ தேம்பிக்கொண்டே சொன்னாள் அந்தச் சிறுமி. பாதிரியார் அந்தச் சிறுமியை இப்போது நன்றாகக் கவனித்தார். பரட்டைத் தலை, கிழிந்த ஆடைகள்... பார்த்தாலே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பது தெரிந்தது. அதன் காரணமாகக்கூட அவளுக்குச் சர்ச்சில் இடம் கிடைக்காமல் போயிருக்கலாம். பாதிரியார் அந்தச் சின்னக் குழந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டார். அவளுடன் பேசியபடியே, அவளை அழைத்துக்கொண்டு மெள்ள நடந்தார். சர்ச்சுக்குள் நுழைந்தார். ஒரு பொருத்தமான இடமாகப் பார்த்து, ஞாயிற்றுக்கிழமை பள்ளி வகுப்பில் அவளை அமரவைத்தார். அந்தச் சிறுமி மகிழ்ச்சியோடு அவரைப் பார்த்து கையசைத்து, சிரித்தாள். பாதிரியார் வெளியே போனார். அன்றிரவு தூங்குவதற்கு முன்னர் வெகு நேரத்துக்குச் சிறுமி, ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் அவளைப்போல அமர இடம் கிடைக்காத சிறார்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள்.   

சிறுமியின் கதை

அது நடந்து இரண்டாண்டுகள் ஆகியிருந்தன. அந்தப் பாதிரியார் ஏழைகள் வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அங்கே யாரோ இறந்து போயிருந்தார்கள், அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்பது தகவல். அங்கே போன பிறகுதான் இறந்து போயிருந்தது ஒரு சிறுமி என்பது பாதிரியாருக்குத் தெரிந்தது. ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் அவர் கொண்டுவிட்ட அதே சிறுமி. அந்தக் குழந்தையின் மரணம் அவருக்கே கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 

அந்தச் சிறுமியை அவளின் படுக்கையிலிருந்து இறக்கினார்கள். அப்போதுதான் படுக்கையின் தலையணைக்குக் கீழே நைந்து போய், லேசாகக் கிழிந்திருந்த ஒரு பர்ஸைப் பார்த்தார் பாதிரியார். குப்பையில் கிடக்கவேண்டிய ஒன்று அங்கே இருப்பதுபோல அது இருந்தது. பாதிரியார் அந்த பர்ஸைப் பிரித்தார். அதற்குள் சில நாணயங்களும், கசங்கிப் போயிருந்த சில கரன்ஸிகளும் இருந்தன. மொத்தம் 57 சென்ட்கள் பணம். கூடவே குழந்தைக் கிறுக்கலில் குறிப்பு ஒன்று இருந்தது. அதைப் பிரித்துப் படித்தார். `சின்ன சர்ச்சை பெரிதாக்கிக் கட்டுவதற்காக இந்தப் பணத்தைச் சேர்த்து வைத்திருக்கிறேன். சின்ன சர்ச், பெரிதானால்தான் நிறைய குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குப் போக முடியும்...’ இதைப் படித்ததும் பாதிரியாரின் கண்கள் கலங்கின. இரண்டு வருட காலமாக இந்தச் சிறுமி, இந்தச் சிறு தொகையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துவைத்திருக்கிறாள் என்பது தெரிந்தது. அதோடு, இனி மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதும் அவருக்குப் புரிந்தது. 

church

அந்தச் சிறுமியின் இறுதிச் சடங்கு முடிந்தது. பாதிரியார் சிறுமி சேர்த்துவைத்திருந்த 57 சென்ட் பணத்தையும், அவள் எழுதிய குறிப்பையும் கையோடு எடுத்துக்கொண்டார். அன்றைக்குத் தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது மேடையில் சிறுமி குறித்தும், அவளின் சுயநலமற்ற குணத்தையும் விருப்பத்தையும் உருக்கமாகச் சொன்னார். அன்று மட்டுமல்ல... ஒவ்வொரு பிரார்த்தனை நேரத்திலும் சர்ச் மேடையில் நின்று அந்த விஷயத்தைச் சொன்னார். தன் உதவி பாதிரியார்களுக்கு `எப்படியாவது பணம் புரட்டி, தேவாலயத்தைப் பெரிதாக்கிக் கட்ட வேண்டும்... அதற்கான வேலைகளைச் செய்யுங்கள்’ என்று உத்தரவு போட்டார். 

சில நாள்களில் இந்தக் கதையை எப்படியோ தெரிந்துகொண்ட ஒரு பத்திரிகை அதைச் செய்தியாக வெளியிட்டது. இதைப் படித்த ஒருவர், பல ஆயிரக்கணக்கான டாலர் பெறுமானமுள்ள தன் நிலத்தை சர்ச் கட்டுவதற்காகக் கொடுக்க முன்வந்தார். ஆனால், சர்ச் தரப்பிலிருந்து அவ்வளவு பணத்தைத் தங்களால் கொடுக்க முடியாது என்று சொல்லப்பட்டது. அதற்கு அந்தத் தரகர் சொன்னார்... `அந்த 57 சென்ட்களைக் கொடுங்கள்... நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்!’ பாதிரியார் ரஸ்ஸல் ஹெச் கான்வெல்லின்

பிரமாண்டமான பெரிய தேவாலயத்தைக் கட்ட இடம் கிடைத்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நன்கொடைகள் குவிய ஆரம்பித்தன. ஐந்தே ஆண்டுகளில் நன்கொடையாக சர்ச்சுக்கு வந்த பணம் 2,50,000 டாலர். அந்தக் காலத்தில் அது சாதாரண தொகையல்ல. அந்தச் சிறுமியின் தன்னலமற்ற உள்ளம் வாரிக் கொடுத்த தொகை அது. 

இப்போது அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உயர்ந்து நிற்கிறது அந்த பிரமாண்டமான டெம்பிள் பாப்டிஸ் தேவாலயம் (Temple Baptist Church). அங்கே ஒரே நேரத்தில் 3,300 பேர் வரை அமரலாம். அங்கிருக்கும் தேவாலயப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தேவாலயம் கட்டப்பட்ட பிறகு, ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் ஒரு குழந்தைகூட வெளியில் நிற்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 

தேவாலயத்தின் ஓர் அறையில் 57 சென்ட்கள் கொடுத்த சிறுமியின் முகம் ஓவியமாக வரைந்து மாட்டப்பட்டிருக்கிறது. பக்கத்திலேயே அந்தப் பாதிரியார் ரஸ்ஸல் ஹெச் கான்வெல்லின் (Russell Conwell) புகைப்படமும் இருக்கிறது. வெறும் 57 சென்ட்கள் பணம்தான்... ஆனால் ஒரு சிறுமியின் சுயநலமற்ற உள்ளம் ஒரு சரித்திரத்தை உருவாக்கிய உண்மை! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!