வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (07/06/2018)

கடைசி தொடர்பு:11:34 (07/06/2018)

3 அடி நீளம், 2 அடி அகலம், 2.5 அடி ஆழம்... அடிமைக்குச் சுதந்திரம் தந்த மரப்பெட்டி!

நேரம் போகப்போக அவரது கண்கள் வீங்குவதுபோல் உணரத்தொடங்கினார், உடல் முழுவதும் நரம்புகள் வெடித்துவிடுவதைப்போல் வலித்தன. மூளையில் அதீத ரத்த அழுத்தத்தை அனுபவிக்கத் தொடங்கிய சமயம் ஒருவித பலவீனமான மயக்கத்தை உணரத்தொடங்கினார்.

``பிரௌன்...! இது ஒத்துவருமென்று எனக்குத் துளிகூட நம்பிக்கையில்லை. தயவுசெய்து இந்த முயற்சியை நீ கைவிடவேண்டும்."

``ஜேம்ஸ் கொஞ்சம் அமைதியாக வா, சத்தமாகப் பேசி நீயே காட்டிக் கொடுத்துவிடாதே. இந்த வீடுதானா?"

அடிமை விற்பனை


ஜேம்ஸ் மூலமாக உறுதி செய்துகொண்டபின் கதவு தட்டப்படுகிறது. நள்ளிரவு சமயத்தில் மூன்று முறை தட்டியவுடன் கதவு திறக்கப்பட்டதிலிருந்தே அந்த வீட்டுக்காரர் இவர்களுக்காகக் காத்திருப்பது புரிகிறது. திறந்தவர் எதுவும் பேசாமல் இருவரையும் உடனே உள்ளே வரச்சொல்லி சைகை காட்டுகிறார். இருவரும் உள்ளே நுழைகிறார்கள். யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு அந்த நபர் கதவைச் சாத்துகிறார்.

``ஆசாரி இவர்தான் நான் சொன்ன அடிமை. பிரௌன் நான் சொன்ன நம்பிக்கைமிகுந்த ஆசாரி இவர்தான்."

``ஜேம்ஸ் உங்கள் நண்பருக்கு அடிமை வாழ்க்கை அலுத்துவிட்டதா இல்லை மரணத்தின்பால் ஆசை வந்துவிட்டதா!"

ஏளனமாகக் கேட்ட ஆசாரியைப் பொங்கிவந்த ஆத்திரத்தோடு முறைத்த பிரௌன் கோபத்தை மறைத்துக்கொண்டு ஏளனப்பார்வையோடே தொடர்ந்தான். ``ஆம் சாட்டையின் முத்தங்களையும், எசமானரின் வசைக் கொஞ்சல்களையும் அனுபவித்துப் புளித்துவிட்டது. அந்தச் சொர்க்க வாழ்வைத் துறந்துவிடத் துணிந்து விட்டேன்."

அமெரிக்க அடிமை

Photo Courtesy: Getty Images


``இது தற்கொலைக்குச் சமம். எனக்கென்ன, ஜேம்ஸ் பணம் தரப்போகிறான். விர்ஜீனியா காவலர்கள் பொல்லாதவர்கள், மாட்டிவிட்டாலும் காட்டிக்கொடுக்காமல் இருப்பதாக இருந்தால் செய்கிறேன். மரப்பெட்டியின் அளவைச் சொல்லுங்கள்."

``3 அடி நீளம், 2 அடி அகலம், 2.5 அடி ஆழமும் இருக்கவேண்டும். பெட்டிக்குள் மென்மையான மெத்தைகள் அமைக்கப்படவேண்டும், நீண்ட தூரப் பயணம் என்பதால் மரத்தின் கடினம் உடலை வதைத்துவிடும். முக்கியமாக, பெட்டியில் மூன்று துவாரங்கள் நான் மூச்சுவிட வசதியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்."

``சரி, தயார் செய்துவிட்டு ஜேம்ஸிடம் சொல்லி அனுப்புகிறேன்." இருவரும் கிளம்பினார்கள். கதவு மூடப்பட்டது. சில நாள்களில் மரப்பெட்டி தயாரானது. ஜேம்ஸ் சீசர் அந்தோனி ஸ்மித் தனது நெருங்கிய வெள்ளை இன நண்பன் சாமுவேல் ஸ்மித் துணையுடன் ஆசாரியிடமிருந்து பெட்டியைத் தன் வீட்டுக்கு வாங்கி வருகிறார்.

மரப்பெட்டி


மார்ச் 23, 1849. அது ஒரு வெள்ளிக்கிழமை. அடிமை ஹென்ரி பிரௌன் பெட்டியில் உட்கார வைக்கப்படுகிறார். அவருக்குத் தேவையான சில பிஸ்கெட் பாக்கெட்டுகள், பழங்கள் தண்ணீர் அனைத்தும் தரப்படுகிறது. பெட்டியை மூடி ஆணி அடித்துவிட்டார்கள் ஸ்மித் நண்பர்கள் இருவரும். பெட்டியின் மேற்பகுதியில் ``இந்தப் பக்கம் மேலே" என்று எழுதுகிறார்கள். தலைகீழாகப் போட்டுவிட்டால் பிரௌன் உடலின் ரத்த ஓட்டங்கள் மூளைக்கு மொத்தமாகச் சென்று ரத்த நாளங்கள் வெடித்தே செத்துவிடுவாரே. 27 மணிநேரப் பயணத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; எதுவும் உறுதியில்லை. இருந்தாலும் விபரீதம் நடக்காமல் இருக்கத் தங்களால் இயன்றதைச் செய்துவைக்கிறார்கள். அடிமைகளும் அவர்களின் மீதான கொடுமைகளும் நிறைந்த விர்ஜீனியாவிலிருந்து அடிமைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் ஃபிலடெல்பியா ( Philadelphia)) நோக்கிய பிரௌனின் ஆபத்தான பயணம் தொடங்கியது.

பிரௌன்


பயணம் முழுவதும் அவர் ஒரே மாதிரிதான் அமர்ந்திருக்க வேண்டும். அசையவும் முடியாது, பேசவும் கூடாது. சில நிமிடங்கள் அசைவற்றுச் சிறிதுநேரம் இருந்தாலே கைகால்கள் மரத்துப்போய்விடும். மரத்துப்போன பகுதிகளில் ஊசி குத்துவதைப் போன்ற உணர்வு ஏற்படும் சமயங்களில் அதை எப்படியாவது போக்கவேண்டுமென்று படாதபாடுகளை அனுபவிப்போம். இந்த மனிதர் 27 மணிநேரம் சிறிதும் அசையாமல் ஒரே நிலையில் இருந்தபோது அவர் அனுபவித்த வேதனைகள் சொல்லிமாளாது. ஒரு கட்டத்தில் கப்பல் ஊழியர்கள் பெட்டியை வேறு இடத்துக்கு மாற்றும்போது தவறுதலாகத் தலைகீழாக வைத்துவிட்டார்கள். நேரம் போகப்போக அவரது கண்கள் வீங்குவதுபோல் உணரத்தொடங்கினார், உடல் முழுவதும் நரம்புகள் வெடித்துவிடுவதைப்போல் வலித்தன. மூளையில் அதீத ரத்த அழுத்தத்தை அனுபவிக்கத் தொடங்கிய சமயம் ஒருவித பலவீனமான மயக்கத்தை உணரத்தொடங்கினார். அதுவே அவரது கடைசி நிமிடங்கள் என்ற உணர்வு தோன்றத் தோன்ற, ``ஒருவழியாகச் சுதந்திர மனிதனாக இறக்கவாவது முடிந்ததே" என்று வேதனைப் புன்முறுவலொன்றை உதிர்த்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு அடியில் இருந்த பெட்டியை எடுக்க இவர் இருந்த பெட்டியைத் தூக்கியவர்கள் அதில் எழுதப்பட்டிருந்த அடையாளத்தைக் கவனித்துவிட்டுச் சரியாக வைத்ததால் மீண்டும் சிறிது சிறிதாகச் சுயநினைவு திரும்பி சகஜநிலைக்குத் திரும்பினார். சில நேரங்களில் பல பெட்டிகளுக்கு அடியில் கிடத்தப்படவே காற்று இல்லாமல் மூச்சுத் திணறத்தொடங்கிவிடும்.

நாடகம்


இவ்வாறு பல சிரமங்களுக்கு ஆளாகி ஒருவழியாக ஃபிலடெல்பியா வந்துசேர்ந்து, சேரவேண்டிய விலாசமான அடிமைத்தன ஒழிப்புச் சங்கத்தை அடைந்ததும் திறக்கப்பட்ட பெட்டியிலிருந்து சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபடியே வெளியே வந்தார் பிரௌன். அவரது அபாயகரமான தப்பித்தல் முறையைக் கண்டவுடன் பல சீர்திருத்தவாதிகள் அந்த விஷயத்தைப் பொதுமக்களிடமிருந்து ரகசியமாக வைக்க நினைத்தனர். ஆனால், பிரௌன் இதை மக்கள் முன்னால் வெளிப்படையாக அறிவிக்கத் தொடங்கினார். அத்தோடு அதையே மேடைகளில் நாடகமாகவும் செய்துகாட்டினார். பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதியது. ஹென்ரி பிரௌன், ஹென்ரி `பாக்ஸ்' பிரௌன் என்று அனைவரின் பேசுபொருளாகவும் மாறினார். பிற்காலத்தில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிவந்த அவரது அனுபவங்களை, ``அடிமைத்தனக் கொடுமையிலிருந்து 3அடி நீளம் 2அடி அகலப் பெட்டியில் தப்பி வந்த ஹென்ரி `பாக்ஸ்' பிரௌனின் கதை" என்ற புத்தகமாகவும் எழுதினார்.

மரண தண்டனை


இந்த அனைத்துச் சாதனைகளையும் பிரௌன் செய்திருந்தாலும் சட்டப்படி அவர் ஓர் அமெரிக்க அடிமைதான். ஓர் அமெரிக்கருக்குச் சொந்தமானவர். 1843ல் இருந்தே வடக்கு நோக்கிப் பல அடிமைகள் தப்பியோடிக் கொண்டிருந்தனர். அதனால், 1850 ஆகஸ்ட் மாதம் தப்பியோடிய அடிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. அதன்மூலம் அதிகாரிகள் தப்பிய அடிமைகளைத் தேடிச்சென்று பிடித்துவரவேண்டும். அப்படிப் பிடித்து வருபவர்களுக்குச் சன்மானமும் பதவி உயர்வும் வழங்கப்படும். அத்தோடு தப்பிச்செல்லும் அடிமைகளுக்குக் கடுமையான தண்டனைகள் (மரண தண்டனை வரை) காத்திருந்தன. இது வருங்காலத்தில் அடிமைகள் பயமின்றி இவ்வாறு செய்யக் கூடாது என்பதற்காகவே செய்யப்பட்டது. இந்தச் சட்டத்துக்குப் பிறகு தன்னை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்ட பிரௌன் கப்பல் மூலமாக இங்கிலாந்து சென்றவர், அங்கேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு நாடு முழுவதும் பயணம் செய்து தனது அனுபவங்களை நாடகமாகப் போட்டுக்கொண்டு மீதி வாழ்க்கையை வாழ்ந்தார்.

அவருக்கு உதவி செய்த ஜேம்ஸ் ஸ்மித் மற்றும் சாமுவேல் ஸ்மித் அதைப்போலவே மற்ற சில அடிமைகளுக்கும் உதவ முயன்று மாட்டிக்கொண்டார்கள். தப்பியோடிய அடிமைகள் சட்டப்படி அவர்களில் ஜேம்ஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். சாமுவேல் வெள்ளையர் என்ற காரணத்தால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டும் வழங்கப்பட்டது. தன் உயிரைப் பணயம் வைத்துத் தப்பிக்கத் துணிந்த பிரௌன், அடிமைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை எல்லைகள் கடந்து அமெரிக்கா செய்துகொண்டிருந்ததை வரலாற்றில் என்றும் அழியாத கறுப்புப் புள்ளியாகப் பதிவுசெய்துவிட்டார்.


டிரெண்டிங் @ விகடன்