வலிமையான கால்... செம கொழுப்பு பால்... உயிர்கொண்ட டிராக்டர்! - இது உம்பளச்சேரி மாட்டின் கதை | Highlights and benefits of Umbalachery cow

வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (07/06/2018)

கடைசி தொடர்பு:15:56 (07/06/2018)

வலிமையான கால்... செம கொழுப்பு பால்... உயிர்கொண்ட டிராக்டர்! - இது உம்பளச்சேரி மாட்டின் கதை

umbalachery

வலிமையான கால்... செம கொழுப்பு பால்... உயிர்கொண்ட டிராக்டர்! - இது உம்பளச்சேரி மாட்டின் கதை

நாட்டு வகை மாடுகளில் மிக முக்கியமானவை உம்பளச்சேரி மாடுகள். நாகப்பட்டினம் மாவட்டத்தின், தலை ஞாயிறு ஒன்றியத்தைச் சேர்ந்த உம்பளச்சேரி ஊராட்சியின் பெயரால் `உம்பளச்சேரி மாடுகள்' என அழைக்கப்படுகின்றன. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சதுப்பு நிலப்பகுதியில் உள்ள உப்பின் அருகு என்ற உப்புச்சத்து நிறைந்த புற்களை மேய்ந்து இனவிருத்தி செய்ததால் `உப்பளச்சேரி' என்ற சொல் மருவி உம்பளச்சேரி எனவும் பெயர் பெற்றது. 

உம்பளச்சேரி

உம்பளச்சேரி கன்றுகள் பிறக்கும்போது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். மூன்று அல்லது நான்கு மாதங்களில் சிவப்பு நிறமானது சாம்பல் நிறத்துக்கு மாறும். ஆறு மாதம் முதல்  எட்டு மாதங்களில் முழுமையான சாம்பல் நிறத்துக்கு மாறிவிடும். காலில் முட்டிக்குக் கீழே கால் உறை அணிந்ததுபோல வெள்ளை நிறமாகக் காணப்படும். வால் பகுதிகள் மட்டும் பாதி வெள்ளை நிறத்தில் இருக்கும். உம்பளச்சேரி இளம் காளைகளினுடைய கொம்பு கூர்மையானதாக இருக்கும். அதனால் கொம்பைத் தீய்க்கும்(மழுக்கும்) பழக்கம் இன்றளவும் வழக்கத்தில் இருக்கிறது. இதன் திமில் கொஞ்சம் பெருத்து உறுதியாக இருக்கும். சில இடங்களில் ஜல்லிக்கட்டுக்காகவும் இதை வளர்ப்பதும் உண்டு. உம்பளச்சேரியின் உடற்கூறுகளைப் பொறுத்தவரை, (தலையைத் தவிர்த்து) காங்கேயம் மாடுகளைப்போலவே இருக்கும். காங்கேயம் காளைகளை உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் கலப்பு செய்யப்பட்டதாலும் உம்பளச்சேரி என்ற தனி மாட்டினம் உருவானதாகவும் கருதப்படுகிறது.

உம்பளச்சேரி பசுக்கள் பால் குறைந்த (ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் ) அளவிலேயே கொடுக்கும். ஆனாலும் இதன் பால் அதிகக் கெட்டித் தன்மையும், நோய் எதிர்ப்புசக்தியும் கொண்டது. பாலில் கொழுப்புச் சத்து 4.5 சதவிகிதம் முதல் 5.5 சதவிகிதம் வரை இருக்கும். பாலில் கொழுப்பு அல்லாத திடப்பொருள் 8 சதவிகிதம் இருக்கும். இதன் பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கன்றை ஈன்ற பின்னர் 8 மாதங்கள் வரை பால் கொடுக்கும். இம்மாட்டின் சிறப்பைப் பற்றி காளமேகப்புலவர் ``முத்துமுத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளச்சேரி மோருக்குச் சோறு கிடைக்காது" என்று எழுதியிருக்கிறார். இவ்வினக் காளைகள் கடுமையான சேற்றிலும்கூட, குறைந்த தீவனத்துடன் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை உழவு செய்யும். டிராக்டர்கொண்டு உழ வசதியில்லாதவர்களுக்கு உம்பளச்சேரி மாடுகள் ஒரு வரப்பிரசாதம்தாம். அந்த அளவுக்கு இதன் கால்கள் மிக வலிமையானவை. இதன் கால்கள் பார்ப்பதற்குச் சன்னமாகக் காட்சியளிக்கும். 2,500 கிலோ எடையைக் கொண்ட மாட்டு வண்டியை 20 கி.மீ தூரம் வரைக்கும் அசால்ட்டாக இழுத்துச் செல்லும் தன்மைகொண்டது.

உம்பளச்சேரி

உம்பளச்சேரி மாடுகளைத் தெற்கத்தி மாடு, மொட்டை மாடு, மோழை மாடு, வெண்ணா மாடு, தஞ்சாவூர் மாடு, கணபதியான் மாடு, சூரியங்காட்டு மாடு என ஒவ்வொரு பகுதிகளிலும் காரணப் பெயர்களைக்கொண்டு அழைக்கிறார்கள். இவை கொஞ்சம் குட்டையான ரகத்தைச் சேர்ந்தது. ஆனால், சுறுசுறுப்புடன் செயல்படக் கூடியவை. நேரான தலை அமைப்பைக்கொண்டது. முன் தலையில் வெள்ளை நட்சத்திர வடிவம்கொண்ட குறியீடு இருக்கும். தோல் மெலிதானதாக இருக்கும். இவை பரவலாக நாகை திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றின் முகம், வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத்திலான திட்டுகள் காணப்படும். வெயில் மற்றும் மழைக்காலங்களை அலட்டிக்கொள்ளாமல் கடந்து செல்லும் தன்மை படைத்தவை, உம்பளச்சேரி மாடுகள். தமிழக அரசு திருவாரூர் மாவட்டத்தில் உம்பளச்சேரி இன மாடுகளுக்காகவே ஒரு காப்பகத்தினை அமைத்துள்ளது. இங்கு உம்பளச்சேரி இனக் கன்றுகள் விற்பனைக்கும் உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்