வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (07/06/2018)

கடைசி தொடர்பு:07:11 (08/06/2018)

``பிளாஸ்டிக்குக்குப் பதில் இதைப் பயன்படுத்தலாமே !'' - தமிழக அரசின் கவனத்துக்கு

``பிளாஸ்டிக்குக்குப் பதில் இதைப் பயன்படுத்தலாமே !'' - தமிழக அரசின் கவனத்துக்கு

மனிதர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கைப் பார்த்து இன்றைக்கு உலகமே அஞ்சி நிற்கிறது. எப்போதோ நிலத்தை ஆக்கிரமித்து விட்ட பிளாஸ்டிக் குப்பைகள் இப்பொழுது ஆழ்கடலையும் விட்டு வைக்கவில்லை. கடல் வாழ் உயிரினங்களின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளே அவற்றின் இறப்புக்குக் காரணம் என்ற செய்தி இப்பொழுதெல்லாம் அடிக்கடி வெளியாகிறது.

பிளாஸ்டிக்

இன்றைய நிலையில் சுற்றுச்சூழலுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது நாம் ஒரு முறை பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்கள்தான். ஒரு மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், ஸ்ட்ரா, ஸ்பூன்கள்,  காபி குடிக்கப் பயன்படுத்தும் கப் என பொருள்களின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை பற்றி  ஐக்கிய நாடுகள் சபை கூறியிருக்கும் சில அதிர்ச்சியான தகவல்கள்:

ஒவ்வொரு வருடமும் ஐந்து ட்ரில்லியன் பிளாஸ்டிக் பைகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு நிமிடமும் உலகம் முழுவதிலும் வாங்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் எண்ணிக்கை 1 மில்லியன்.

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானவை ஒரு முறை பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறியும் வகையிலானவை

ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் சேர்கின்றன. 

கடந்த பத்தாண்டுகளில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் அளவு கடந்த நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட மொத்த அளவையும்விட  அதிகம்.

பல நாடுகள் ஒரு முறை பயன்படுத்தும்  பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யத் தொடங்கிவிட்டன. தடை செய்யப்பட்டதோடு மட்டுமில்லாமல் அதைத் தீவிரமாக பின்பற்றவும் செய்கின்றன. தமிழக அரசும் கூட 2019-ம் ஆண்டில் இருந்து  பிளாஸ்டிக்கை முடிந்தமட்டிலும் தடை செய்ய முடிவெடுத்திருக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியாமல் போனாலும் மக்கள் மனது வைத்தால் அதன் பயன்பாட்டை குறைக்க முயற்சி செய்யலாம். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்த பல்வேறு மாற்றுப் பொருள்கள் இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் தனது சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் மற்று பொருள்களைப் பரிந்துரைத்திருக்கிறது. இவற்றை பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

Edible Spoons

  Edible Spoons

பிளாஸ்டிக் ஸ்பூன்களுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தலாம். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான இவற்றை அப்படியே சாப்பிட முடியும். சோள மாவு, அரிசி மாவு மற்றும் கோதுமை மாவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இவற்றில் வேறு செயற்கையான பொருள்கள் சேர்க்கப்படுவதில்லை. உணவை அருந்தி முடித்த பின்னர் ஸ்பூனையும் சாப்பிடலாம். இந்திய நிறுவனமான  Bakeys இதை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஸ்பூன் நான்கு ரூபாய்க்குக் கிடைக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரும்புபவர்கள் இப்பொழுதே இதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

Mycofoam

Mycofoam

உடையும் பொருள்கள் பேக் செய்யப்படும்போது தெர்மாகோல் பயன்படுத்தப்படுகிறது. தெர்மாகோலை ஒரு முறை பயன்படுத்திய பிறகு வேறு எதற்காகவும் அதைப் பயன்படுத்த முடிவதில்லை. தெர்மாகோலுக்கு இதை மாற்றாகப் பயன்படுத்த முடியும். முழுவதும் விவசாயக் கழிவுகள்  மூலமாக உருவாக்கப்படும் இது மக்கும் தன்மை உடையது.  mycelium எனும் ஒருவகை பூஞ்சை இதை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. தெர்மாகோல் போலவே எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இதை வடிவமைக்க முடியும். ஏற்கெனவே சில நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டன. பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான டெல் இதைப் பயன்படுத்துகிறது. 

pineapple fibre

pineapple fibre

விலங்குகளில் இருந்து பெறப்படும் தோல் பயன்பாட்டை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் செயற்கை தோல். ஆனால், அதை உருவாக்குவதற்கு பிளாஸ்டிக் தேவைப்பட்டது. இதற்கு மாற்றாக லண்டனைச் சேர்ந்த  Piñatex என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கும் அன்னாசிப் பழத்தில் இருந்து பெறப்படும் இழைகளைப் பயன்படுத்தலாம். அன்னாசிப்பழத்தின் இலைகளில் இருந்து பெறப்படும் நார்களில் இருந்து இது தயாரிக்கப்படுகிறது என்பதால் மக்கும் தன்மை கொண்டது. அன்னாசிப்பழங்கள் அறுவடை செய்யப்பட்ட பின்னர் அதன் இலைகள் பயன்படுவதில்லை என்பதால் இதைப் குறைந்த விலையிலேயே தயாரிக்க முடியும். இதைப் பயன்படுத்தி  Piñatex நிறுவனம் ஷூ, ஹேன்ட் பேக் மற்றும் ஃபர்னிச்சர்களை உருவாக்கியிருக்கிறது.

Milk fibres

Milk fibres

செயற்கை நூலிழைகளுக்குப் பதிலாக பாலில் இருந்து பெறப்படும் இந்த வகை இழைகளைப் பயன்படுத்தலாம். பாலில் இருக்கும்  casein புரோட்டின் மூலமாக இந்த இழைகள் உருவாக்கப்படுகின்றன. வீணாகும் பாலில் இருந்து இந்த இழைகளைத் தயாரிக்கிறார்கள். இது தவிர ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் இலையாலான தட்டுகளையும் பயன்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரை செய்திருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்