ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

எதற்கெடுத்தாலும் குறைப்பட்டுக்கொள்வது சரியா? - பாடம் சொல்லும் கதை! #MotivationStory

எதற்கெடுத்தாலும் குறைப்பட்டுக்கொள்வது சரியா? - பாடம் சொல்லும் கதை! #MotivationStory

Motivation Story

`குறுகிய மனோபாவம், மோசமான மனநிலை, எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றோடு நாம் இருக்கவே கூடாது!’ என்கிறார் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் டி.எஸ்.எலியட் (T.S.Eliot). உண்மையில், இன்றையச் சூழலில் பாசிட்டிவ் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக்கூட நெகட்டிவாக சிந்திப்பது தவிர்க்க முடியாததே! `இவ்வளவு பிரச்னை ஒரு மனுஷனுக்கு வரவே கூடாது... என்னை ஏன் கடவுள் இவ்வளவு சோதிக்கிறார்?’ என்று வருத்தப்படுபவர்கள் நம்மில் ஏராளமானோர். இதற்குக் காரணம் எதிர்மறையான மனநிலைதான். `எல்லாம் தப்பு தப்பாகவே நமக்கு நடக்கிறது’ என்று நினைப்பவர்கள், அந்தக் காரியங்களின் மறுபுறத்தை ஆராய்ந்தால், ஒருவேளை நமக்கு நன்மை செய்வதற்காகக்கூட அவை நடந்திருப்பதை அறிந்துகொள்ளலாம். `எல்லாம் நன்மைக்கே!’ என்கிற மனநிலை வாய்த்தவர்கள் அதிகம் பிரச்னைக்கு ஆளாவதில்லை. அந்த மனோபாவம்தான் பாசிட்டிவ் அணுகுமுறைக்குத் தேவை. இந்த உண்மையை உணர்த்தும் கதை இது. 

அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர். அன்றைக்கு வேலை முடிந்து அவர் வீடு திரும்ப இரவு ஏழு மணிக்கு மேலாகிவிட்டது. காரைவிட்டு இறங்கியவர், நேரே வீட்டுக்குள் செல்லாமல், பின் பக்கத்திலிருக்கும் தன் பிரத்யேக ஜிம்முக்குள் போனார். சில நிமிடங்கள்தான்... வெளியே வந்துவிட்டார். அவர் முகம் இறுகிக் கிடந்தது. எதிர்கொண்டு அழைத்த மனைவியிடம்கூட ஒரு வார்த்தை பேசவில்லை. நேராகத் தன் அறைக்குப் போனார். உடையை மாற்றிக்கொண்டு கட்டிலில் படுத்துவிட்டார். ஏதோ யோசனை வந்தவராக, போனை எடுத்தார், டயல் செய்தார்... கடவுளிடம் பேசினார். 

``கடவுளே... வணக்கம். உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?’’ 

``தாராளமாகக் கேள்.’’ 

``இன்னிக்கி ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் குடுத்தீங்க கடவுளே?’’ 

``என்னப்பா சொல்றே? எனக்குப் புரியலை.’’ 

``வழக்கத்தைவிட நான் இன்னிக்கி கொஞ்சம் லேட்டாத்தான் எந்திரிச்சேன். அதனாலேயே பல வேலைகள் நின்னு போய் பரபரப்பாயிட்டேன். உங்களுக்குத் தெரியும்தானே?’’ 

``ஆமா.’’ 

``ஆபிஸுக்குக் கிளம்பும்போது என் கார் உடனே கிளம்பலை. ஸ்டார்ட் ஆக ரொம்ப நேரம் ஆச்சு.’’ 

``சரி...’’ 

``மதியம் சாப்பாடுகூட சரியான நேரத்துக்கு வரலை. அதைக் கொண்டு வர்ற ஆளுக்காக நான் ரொம்ப நேரம் காத்திருந்தேன். அப்புறம் வேற சாப்பாட்டை ஹோட்டல்லருந்து வரவழைச்சு சாப்பிடவேண்டியதாகிடுச்சு. சாப்பிட்டு முடிச்சதும், வழக்கமா வர்ற ஆள் சாப்பாட்டோட வந்து நிக்கிறார்...’’ 

``ம்...’’ 

``ஆபிஸ்லருந்து கார்ல திரும்பும்போது யாரோ போன் பண்ணினாங்க. எடுத்து `ஹலோ’ சொல்றதுக்குள்ள போன் சார்ஜ் தீர்ந்து போய் டெட்டாயிடுச்சு...’’ 

``ஆமா.’’ 

``இது எல்லாத்துக்கும் மேல எனக்கு கால்ல வலின்னா அப்படி ஒரு வலி. சரி... வீட்ல இருக்குற ஜிம்முக்குப் போயி கொஞ்ச நேரம் காலை மசாஜ் செஞ்சுக்கலாம்னு போனேன். அங்கே என்னோட ஃபுட் மசாஜர் (Foot Massager) வேலை செய்யலை. வலியோட வீட்டுக்குள்ள வந்துட்டேன். இன்னிக்கி எனக்கு எதுவுமே சரியா நடக்கலை கடவுளே! எனக்கு ஏன் இவ்வளவு பிரச்னைகளைக் கொடுத்தீங்க?’’ 

கார்

மறு முனையில் கடவுள் சிரிப்பது அவருக்குக் கேட்டது... ``சரி... எல்லாத்துக்குமே பதில் சொல்றேன். இன்னிக்கிக் காலையில நீ தூங்கிக்கிட்டு இருக்கும்போது மரண தேவதை உன்னை அழைச்சுட்டுப் போறதுக்காக உன் கட்டில்கிட்ட வந்தது. நான்தான் உனக்கு இங்கே செய்யறதுக்கு நிறையா வேலை பாக்கி இருக்குனு, இன்னொரு தேவதையை அனுப்பி, அதன் மூலமா மரண தேவதையை அங்கேயிருந்து கிளப்பிவிடச் சொன்னேன். இதெல்லாம் நடந்து முடிகிறவரைக்கும் நீ எந்திரிச்சிடக் கூடாதுனுதான் உன்னை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கவெச்சேன்.’’ 

``அப்படியா?!’’ 

``உன் காரைக் கிளப்பினப்போ, நீ போற வழியில ஒரு டிரைவர் குடிச்சிட்டு காரை ஓட்டிக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தான். அவன் உன் கார்ல மோதி ஆக்ஸிடன்ட் ஆகிடக் கூடாதுனுதான் உன் கார் உடனே ஸ்டார்ட் ஆகாமப் பார்த்துக்கிட்டேன்...’’ 

``அடடா!’’ 

``உன் சாப்பாடு ஏன் லேட்டாச்சுன்னா, வழக்கமா அதைக் கொண்டு வர்ற ஆளுக்கு இன்னிக்கி ஒரு இன்ஃபெக்‌ஷன். அதோடதான் சமைச்சிருந்தார். அந்தச் சாப்பாட்டை நீ சாப்பிட்டிருந்தீன்னா, உனக்கும் இன்ஃபெக்‌ஷனாகி நோய்வாய்ப்பட்டிருப்பே. அதைத் தாங்கிக்கிற சக்தி உனக்கு இல்லை. அதனாலதான் சாப்பாடு லேட்டா வர்ற மாதிரி செஞ்சேன்.’’ 

``ஐயய்யோ...’’

``போன்ல பேசினவன் உன்னை ஏமாத்தப் பார்த்தான். அவனோட தெளிவான, தேனொழுகுற பேச்சைக் கேட்டுட்டு நீ, அவன் கூப்பிட்ட இடத்துக்குப் போயிருப்பே. அவன் உன்கிட்ட இருக்குறதையெல்லாம் பிடுங்கிட்டுப் போயிருப்பான். அதுனாலதான் சார்ஜ் இல்லாமப் பண்ணினேன்...’’ 

``இது எனக்கு தெரியாமப் போச்சே கடவுளே!’’ 

 நேர்மறைச் சிந்தனை கொண்ட கதை

``அப்புறம் என்ன... அந்த ஃபுட் மசாஜர்... அதுல ஒரு முக்கியமான பகுதி செயலிழந்து போச்சு... நீ மட்டும் அதை ஆன் பண்ணியிருந்தேன்னா, உன் வீட்ல இருக்குற மொத்த கரன்ட்டும் போயிருக்கும். ராத்திரி முழுக்க காத்து இல்லாம, இருட்டுல நீ இருக்குறது எனக்குப் பிடிக்கலை. அதனாலதான் ஃபுட் மசாஜர் வொர்க் ஆகாமப் பார்த்துக்கிட்டேன்...’’ 

``கடவுளே என்னை மன்னிச்சிடுங்க...’’ 

``மன்னிப்பெல்லாம் கேட்காதே! நல்லது நடக்குதோ, கெட்டது நடக்குதோ முதல்ல என்னை நம்புறதுக்குப் பழகு! எதுக்கெடுத்தாலும் ஏன் இப்படி நடக்குதுனு குறைப்பட்டுக்காதே, சந்தேகப்படாதே... பாசிட்டிவ் அப்ரோச்சை வளர்த்துக்கோ!’’ 

``சரி கடவுளே...’’ 

அந்த நேரத்தில் யாரோ அவருடைய தோளைப் பிடித்து உலுக்கினார்கள். ``அப்பா... அப்பா...’’ என்ற குரலும் கேட்டது. 

அவர் திடுக்கிட்டு கண்விழித்தார். எதிரே அவருடைய ஆறு வயதுச் சிறுமி நின்றுகொண்டிருந்தாள். 

``என்னப்பா... வந்தவுடனே தூங்கிட்டீங்க?’’ 

அப்போதுதான் மலர்ந்த மலர் போன்ற முகத்தோடு நிற்கிற மகளின் முகத்தைப் பார்த்தார். அப்படியே வாரி அணைத்து, தோளில் போட்டு, முத்தமாரி பொழிந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!