வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (08/06/2018)

கடைசி தொடர்பு:16:30 (08/06/2018)

``காலா சொல்லும் மெசேஜ் எங்களுக்கு திருப்தி!’’ - தாராவி நிஜ ஹீரோக்கள்

people belongs to real dharavi speaks about dharavi mumbai life and Ranjith rajinikanths kaala

``காலா சொல்லும் மெசேஜ் எங்களுக்கு திருப்தி!’’ - தாராவி நிஜ ஹீரோக்கள்

காலா

எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில பொட்டு வெச்சோம் - வழக்கமாக அதே சிலரால் ஒடுக்கப்பட்டு, ஓரத்தில் உட்கார வைக்கப்பட்ட கதையையே சந்தோஷமாக லாலாபோட்டு, பாடிய காலம் மெதுவாகத் தேய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் ஒளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வைத்த ரஜினி பாடல்களில் இருந்து, தற்போது ரஜினியின் குரலிலேயே சமத்துவம் பேசவைக்கிறது ‘காலா’வின் வசனங்கள். ``கைய கொடுத்துப் பழகுங்க, அதுதான் சமத்துவம்... கால்ல விழ வைக்கிறது இல்ல” என்று வசனம் வருகிறது. வழக்கமாக, எல்லா வித அழுத்தமான வசனங்களையும் ஹீரோவே பேசிவிடும் தமிழ் சினிமா ஸ்டீரியோடைப்பை உடைத்து, முதன்மைக் கதாபாத்திரமாக இதை சரினா என்னும் பெண்தான் பேசுகிறார்.

முன்னாள் காதலியைப் பார்த்துவிட்டு வரும் காலா, ’நீதான் அங்க நெறஞ்சு இருந்த. சரினாவ நிமிர்ந்து பாக்கமுடியல’ என்னும்போது, ‘எனக்கும் திருநெல்வேலிக்கு ஒரு டிக்கெட்ட போடு. என் பின்னாடியே கிறுக்கா திரிஞ்ச பெருமாள ஒரு எட்டு பாத்து பேசிட்டு வந்திடறேன்’ என்பவரிடம் கெஞ்சியது யார்? பொம்பளன்னா பஜாரித்தனம் பண்ணக்கூடாது என்று பேசிய சூப்பர் ஸ்டார்தான். ப்ளாக் அண்ட் வொயிட் படங்களின் மனிதர்கள் முதல் சமீபத்திய பிக்பாஸ் நிகழ்வுகள் வரையில் அருவருப்பான முகத்துடன் உதிர்க்கப்பட்டது, பெரும்பாலானவர்களால் உதிர்க்கப்படுகிறது. உழைக்கும் மக்கள் வாழும் சேரியை இப்படித்தான் பதிய வைத்திருக்கிறார்கள். தன் எண்ணத்துக்கு ஒத்துவரவில்லை என்னும் காரணத்துக்காக, கோபத்துடன் சேரிதானே என்று சொல்லும் மகனை மட்டுமல்ல, சேரியை அசிங்கமாக, கெட்ட வார்த்தை பேசும் இடமாக, அம்மக்களை கிரிமினல்களாக, படிக்காதவர்களாக, ஒழுங்கில்லாதவர்களாக இன்னும் என்னவெல்லாமோவாக நினைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனின் முகத்திலும், ஓங்கி பொளேரென்று அறைகிறது இயக்குநர் ரஞ்சித்தின் ’காலா’. அப்படியான, ஆசியாவின் இரண்டாவது பெரிய சேரியும், உலகத்தின் மூன்றாவது பெரிய சேரியுமான, தாராவிதான் காலாவின் உண்மையான ஹீரோ. நிஜ ஹீரோ `தாராவி'யைப் பற்றி, தாராவியிலிருக்கும் பிரச்னைகளை பிரதானமாக பேசியிருக்கும் காலாவைப் பற்றி தாராவித் தமிழர்கள் இப்படிச் சொல்கிறார்கள்...

ராஜேஷ் (பாடகர்)

rajesh kaala singerதாராவியைப் பத்திச் சொல்லுங்க என்றதும், ``இரஞ்சித் நிஜமான தாராவிய அப்படியே காட்டியிருக்காரு. அதுல எனக்கு பயங்கர சந்தோஷம். இன்னைக்கு இந்த ஊரு திருவிழா மாதிரி இருக்குது. தண்ணி பிரச்னையாகட்டும், சுகாதாரம் மாதிரியான பிரச்னையாகட்டும். எல்லாரும் கூடினா சரிபண்ணலாம்னு ஒரு மேசேஜ் சொல்லுது காலா. தங்களுக்கான பிரச்னைக்காக அப்படி ரொம்ப இயல்பா சேர்ந்து போராடுற குணம் இந்த மக்கள்கிட்ட இருக்கு. இங்க பொறாமை இருக்காது. ஏன்னா, கஷ்டம்னா என்னன்னு இங்க எல்லாருக்கும் தெரியும். உழைக்குறவங்களுக்கு பொறாமை பட நேரம் இருக்காது. இன்னும் முக்கியமான ஸ்பெஷலான விஷயம் இருக்கு. கல்யாணமோ, பிறந்தநாளோ, சாவு வீடோ எல்லாத்துக்கு ஒரே ரியாக்‌ஷன கொடுக்குற சிட்டி செட்டப் இங்க இருக்காது. எமோஷன்ஸ் சத்தமா இருக்கும். கொண்டாட்டங்கள்னாலே எல்லா கள்ளிகளும் (தெருக்களும்), கலர் லைட்ஸ் போட்டு, ஸ்பீக்கர் வெச்சு, சின்னக் குழந்தைலேர்ந்து வயசான தாத்தா வரைக்கும் டான்ஸ் ஆடி, செலிப்ரேட் பண்ணுவாங்க” என்றவர், ``நிலம் தொடர்பான பிரச்னை ரொம்ப உண்மை. சால்ல (பகுதி) மூணு வீடு வெச்சிருக்கவனுக்கு, பில்டிங் கட்டி ஒரு வீடு கொடுத்து ஏமாத்த நினைக்கிறாங்க. மும்பை சிட்டிக்கு சென்டரா இருக்குறதால, எங்கள எவிக்‌ஷன் பண்ற திட்டம் கவர்மெண்ட்டுக்கு இருக்கு” என்கிறார்.

காலாவில் ராப் இளைஞர்கள் குழுவில் ஒருவராக பெர்ஃபார்ம் செய்திருக்கும் இவர், ராப், தாராவியின் கலை வடிவங்கள் தொடர்பாக  கேட்டதும், ``சேரின்னாவே அசிங்கம்னு நினைப்பாங்க. அதுவும் தாராவியைப் பொறுத்தவரைக்கும், தாராவியில இருந்து போற மக்கள் எவ்வளவு உழைச்சாலும், அவங்க ரவுடிங்கன்னு பாக்குற ஒரு கெட்ட பழக்கம், எல்லாருக்கும் இருக்கு. தாராவி அப்படியானது இல்ல. நாங்க முடிவு பண்ணிட்டோம். இதையெல்லாம் மாத்தணும். இப்போ தாராவிக்கு இன்னொரு முகமும், அடையாளமும் இருக்கு. ராப் இசையும், ஃப்யூஷன் இசையும் ஒரு முக்கிய அடையாளமா மாறியிருக்கு. எங்கள எல்லாரும் மதிக்கணும். இத்தன தப்பு பண்ணியிருந்தா, இனிமேலாவது ஜெனரல் சொசைட்டி அவங்க பார்வைய மாத்திக்கட்டும்” என்கிறார் ராஜேஷ், ஸ்டைலா, கெத்தா...

ராஜா குட்டி (ஜெய்பீம் அறக்கட்டளைச் செயலாளர்)

kutty raja dharavi``தாராவியை சரியா காட்ட முயற்சி பண்ணியிருக்காங்க. ஆனா, இதுல காட்டப்படாத சில விஷயங்களும் இருக்கு. உரிமைக்காக போராடுகிற, அரசியல் புரிதலோட இருக்கற இளைஞர்கள் ரொம்பவும் குறைவு. மதம் சார்ந்த, சாதி சார்ந்த கூட்டங்கள் இளைஞர்களை கொஞ்சம் தவறா வழிநடத்தறாங்க. அது மாறினா, இங்க நிறைய நல்லது நடக்கும். இவ்வளவு வறுமைலயும் கூட, ஒரு கொண்டாட்டமான வாழ்க்கையை வாழுற மக்கள இங்க நீங்க பாக்கமுடியும். எறும்பா உழைப்பாங்க. இப்படியொரு உழைப்ப நீங்க எங்கயும் பாக்கமுடியாது. அதனால, வாழ்வாதார பிரச்னைகளை பேசவிடாம தடுக்குறது சாதியும், மதமும்தான். ஒடுக்கப்பட்ட மக்களை சாதி உணர்வும், மத உணர்வும் இன்னும் அடிமையாக்குது, இன்னும் அடிமைப்படுத்துது. இதுதான் மாறணும். நிறைய முற்போக்கு இங்க தேவையா இருக்கு. மத்தபடி தாராவி உழைக்கும் மக்கள் கோட்டைதான்” - ஜெய்பீம் என முடிக்கிறார் ராஜா குட்டி.

 

ஜென்சி (கல்லூரி மாணவி)

``தாராவி எங்க கூடு. எங்க பார்த்தாலும் வேட்டி, சட்டை, புடவைல, சுடிதார்ல மனுஷங்க. தமிழ் பாட்டு, இந்தி பாட்டு, மராத்தி பாட்டுன்னு கொலாப்ஸ் பாஷையா இருக்கும். எல்லாருக்கும் ரெண்டு மூணு மொழி தெரியும். இது குட்டி தமிழ்நாடு. தாராவி குடிசைப்பகுதிதான், ஆனா கோடிகணக்குல பிசினஸ் நடக்குற ஏரியா. அவ்வளவு உழைப்பாங்க. அப்பளம் ஆரம்பிச்சு கருவாடு, ஆட்டோமொபைல் பார்ட்ஸ் வரைக்கும், சிம்பிளா சொல்லணும்னா Dust to Digital accessories இங்க கிடைக்கும். பிளாஸ்டிக் கம்பெனி, ஜரிகை கம்பெனி எல்லாமே இங்க ஃபேமஸ். குடிசைப்பகுதிங்கிற ஒரே காரணத்துக்காக, இங்கு இருக்கவங்களுக்கு புதுசா தொழில்துவங்க எந்த பேங்குகளும் கடன் கொடுக்க யோசிப்பாங்க. குடிசைல வாழ்ற மக்களே ஒருங்கிணைச்சு, சமுதாய வங்கியை நடத்திட்டு வராங்க. பெரிய விஷயம்தானே”

``சின்னச் சின்ன வீடு இருக்கறதால ப்ரைவசி இருக்காது. பொட்டப்பிள்ளங்களுக்கு ட்ரெஸ் மாத்த கொஞ்சம் கஷ்டமா இருக்கும் . காலைலயே எழுந்து டாய்லெட்டுக்கு வரிசை கட்டணும். குழந்தைகளையெல்லாம் ஸ்கூலுக்கு அனுப்பி விட்டுட்டு, 12 மணிக்கு பாத்ரூமுக்கு போவாங்க நிறைய அம்மாக்கள். காலா படத்துல காட்டுற land rights ரொம்ப சரி. நிஜமாவே மக்கள் சேர்ந்து அப்படி ஒரு சேஞ்ச் கொண்டு வந்தா நல்லா இருக்கும். நாங்களும் படிக்கிறோம். நாங்களும் சிட்டிசன்ஸ்தான்” என்கிறார் நம்பிக்கையுடன் ஜென்சி!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்