வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (08/06/2018)

கடைசி தொடர்பு:12:49 (08/06/2018)

க்ரூஸ் கன்ட்ரோல் டு வார்னிங் சிஸ்டம்... பைக்கைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்!

உலக பைக் சந்தையில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் டுகாட்டி, கேடிஎம் போன்ற பைக் நிறுவனங்கள், இந்தத் தொழில்நுட்பங்களைத் தமது புதிய பர்ஃபாமென்ஸ் பைக்குகளில் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

பாதுகாப்பு வசதிகள்... இவைதான் கார், டூ-வீலர் எனப் பாரபட்சம் பார்க்காமல் செயல்படக்கூடியவை! டிராக்‌ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், LED ஹெட்லைட்ஸ், TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவை முதலில் கார்களில்தான் அறிமுகமாயின; ஆனால், இன்று இவற்றை 600 சிசிக்கும் அதிகமான பைக்குகளிலேயே பார்க்க முடிகிறது. இப்போது நீங்கள் பார்க்கப்போகும் தொழில்நுட்பங்கள், 2020-ல் பைக்குகளில் இடம்பெறும் என BOSCH நிறுவனம் தெரிவித்துள்ளது.

டுகாட்டி


இவையெல்லாம் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் இல்லையென்றாலும், இவையும் கார்களில் இருந்து பைக்குகளுக்கு இடம் பெயர உள்ளன. உலக பைக் சந்தையில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் டுகாட்டி, கேடிஎம் போன்ற பைக் நிறுவனங்கள், இந்த தொழில்நுட்பங்களைத் தமது புதிய பர்ஃபாமென்ஸ் பைக்குகளில் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Adaptive க்ரூஸ் கன்ட்ரோல்:

ஒருவர் ஆக்ஸிலரேட்டரைப் பயன்படுத்தாமலேயே, தனது பைக்கை நிலையான வேகத்தில் செலுத்த உதவுவதுதான் க்ரூஸ் கன்ட்ரோல். ஆனால், இந்நேரத்தில் நாம் பிரேக்கைப் பயன்படுத்தும்போது, இந்த அமைப்பு தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். எனவே, ஓட்டுநர் தனது முழுகவனத்தையும் சாலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதை இன்னும் சுலபமாக்கும் பணியை, அடாப்ட்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் செய்யும்.

தொழில்நுட்பங்கள்


ஆம், ரேடாரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது, முன்னே செல்லும் வாகனத்தின் வேகத்துக்கு ஏற்ப, தான் இருக்கும் வாகனத்தின் வேகத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இதனால் நீண்ட (நேர) தூரப் பயணங்கள், பாதுகாப்பானதாக அமைவதற்கான சாத்தியங்கள் அதிகமாகலாம்.

Collision வார்னிங் சிஸ்டம்: 

 

தொழில்நுட்பங்கள்

 

இதுவும் ரேடாரை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு அம்சம்தான். உங்களுக்கு முன்னே செல்லும் வாகனத்துக்கு உங்களுக்கும் இடையேயான இடைவெளியைப் பொறுத்து, ஓட்டுநருக்கு விபத்து நேரக்கூடிய வாய்ப்பு இருப்பதை ஒலி விதத்திலும், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் சமிக்ஞை செய்தும் உணர்த்தும். இந்நேரத்தில் நீங்கள் செல்லும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் பணியை முன்னே இருக்கும் அமைப்பு செய்யும். 

Active டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம்:

ஒருவர் தனது பைக்கைத் திருப்பங்களில் வளைத்துச் செலுத்தும்போது, பைக்கில் இருக்கும் Gyroscope மற்றும் Accelerometer உதவியுடன், பைக்கின் நிலைத்தன்மையை சீராக்குவதுதான் 6-Axis டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம். அந்த பைக்கில் Active டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இருந்தால், அது பைக்கின் த்ராட்டில் மற்றும் பிரேக்கிங்கையும் கட்டுப்படுத்தும் என்கிறது BOSCH.  இதனால் திருப்பங்களில் திடீரென பிரேக் பிடிக்கும்போது, ரைடர்கள் பைக்குடன் சேர்ந்து விழுவது தவிர்க்கப்படலாம்.

பாஷ்

இந்நேரத்தில் பைக்கின் முன்பக்கம் நிலையாக இல்லாவிட்டால், நீங்கள் கீழே விழாமல் இருக்க, பைக்கின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் Lateral Thrusters துணைநிற்கும் என BOSCH நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நாஸாவின் விண்கலனில் இருக்கும் Anti-Slide வசதியைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. 

BlindSpot வார்னிங் சிஸ்டம்:

 

தொழில்நுட்பங்கள்

கார் ஓட்டுநர்களுடன் ஒப்பிடும்போது, பைக் ரைடர்களுக்கு BlindSpot-னால் ஏற்படும் பிரச்னை குறைவுதான் என்றாலும், அதை எளிதாகத் தவிர்த்துவிட முடியாது. ரேடாரின் உதவியுடன் இயங்கக்கூடிய இந்த அமைப்பு, உங்களுக்கே தெரியாமல் உங்களைக் கடந்துசெல்லப்போகும் வாகனத்தின் வருகையை, ரியர்வியூ மிரர்களில் இருக்கும் விளக்குகள் வாயிலாகத் தெரியப்படுத்தும். எனவே ரைடர், அதற்கேற்ப தனது பைக்கின் வேகத்தைக் குறைத்தோ, அந்த வாகனத்துக்கு வழிவிடுவதையோ மேற்கொள்ளலாம். ஒரு காலத்தில் ஜேம்ஸ் பாண்டு தனது கார்களில் கொண்டிருந்த இதுபோன்ற வசதிகள், மக்களின் வாகனங்களில் இருக்கும் நாள், வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க