`தண்டகாரண்யம்’, `அசுரகுலத் தலைவன்’, `ராவணன்’... `காலா’ திரைப்படத்தின் குறியீடுகள் உணர்த்துவது என்ன?

`தண்டகாரண்யம்’, `அசுரகுலத் தலைவன்’, `ராவணன்’... `காலா’ திரைப்படத்தின் குறியீடுகள் உணர்த்துவது என்ன?

`தண்டகாரண்யம்’, `அசுரகுலத் தலைவன்’, `ராவணன்’... `காலா’ திரைப்படத்தின் குறியீடுகள் உணர்த்துவது என்ன?

ண்மையில் வெளியாகியிருக்கும் திரைப்படம், `காலா.’ இந்தத் திரைப்படத்தில் அசுரர்களைப் பற்றிய குறியீடுகள் அதிகம் காணப்படுகின்றன. `தண்டகாரண்ய நகர்', புலவர் குழந்தையின் `ராவண காவியம்' நூல், `ஒத்தை தல ராவணா...' பாடல், `அசுரக்குலத் தலைவன்'... என்று திரைப்படம் முழுவதும் குறியீடுகள் நிறைந்திருக்கின்றன. அவை உணர்த்தும் புராணக் கதைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

காலா

தண்டகாரண்யம் என்பது 90,000 சதுர கி.மீ அளவுக்கு சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா என்று பறந்து விரிந்திருக்கும் அடர்ந்த வனப்பகுதி. `தண்டம்’ என்றால் தண்டனை; `ஆரண்யம்’ என்றால் காடு என்று பொருள். `தண்டனை அளிக்கும் காடு' என்று பொருள். தவறு செய்பவர்களுக்கு அவர்கள் செய்த தவறுகளுக்கேற்ப நீதி வழுவாமல் தண்டனை வழங்கும் அரசர்களின் செங்கோலுக்கு, `தண்டம்' என்றுதான் பெயர். நீதியை நிலைநிறுத்தும் இயல்புகொண்டதால் செங்கோலை, `தண்டம்' என்று கூறினார்கள்.

புராணக் கதைகளிலும், ராமாயணத்திலும் புகழ்பெற்ற வனம் தண்டகாரண்யம். இந்தத் தண்டகாரண்ய வனம் தோன்றியதிலும் சுவையான புராணக் கதை ஒன்று இருக்கிறது. இக்ஷ்வாகு என்பவர் சூரியவம்ச மன்னர்களில் ஒருவர். இவருடைய மரபில் வந்தவர்கள்தாம் தசரதன், ராமர், பரதன் உள்ளிட்டவர்கள். சோழர்கள்கூட தங்களை இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றிய சூரிய அரச மரபாகவே கூறி, பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட, சூரியகுலத்தைச் சேர்ந்த இக்ஷ்வாகுவுக்கு நூறு குழந்தைகள் இருந்தனர். அவனது கடைசி மகனின் பெயர் தண்டன். விந்திய மலைக்கும் ரிஷிகாவுக்கும் இடைப்பட்ட பகுதிக்கு, மகன் தண்டனை அரசனாக நியமித்தார் இக்ஷ்வாகு. அவனது நாட்டுக்கு `மதுமன்டா' என்ற பெயரில் மிகப்பெரிய நகரையும் நிர்மாணித்து, அதன் தலைநகராக்கினார். தண்டன் ஆண்டதால் அது `தண்ட நாடு’ என அழைக்கப்பட்டது. தண்டன், சுக்ராச்சாரியாரிடம் சில சாஸ்திரங்களைக் கற்பதற்குச் செல்லத் தொடங்கினான். அங்கே சுக்ராச்சார்யாரின் மகளான அராஜா என்பவளைக் கண்டு, அவள்மீது காதல் கொண்டான். அவள் எவ்வளவோ மறுத்தும்கூட, விடாமல் அவளைத் தொந்தரவு செய்தான். தண்டனின் செயலால் வருத்தமடைந்த அராஜா, தன் தந்தை சுக்ராச்சாரியாரிடம் முறையிட்டாள். கடும் கோபம்கொண்ட சுக்ராச்சாரியார், `ஏழு நாள்களுக்குள் தண்டன் இறப்பான். அவனது நாடும் அழியும்' என்று கடுமையான சாபமிட்டு தெற்கு நோக்கிச் சென்றுவிட்டார்.

ராமன்

அவரது சாபத்தின்படி தண்டன் ஏழு நாள்களுக்குள் மர்மமான முறையில் இறந்தான். அதன் பிறகு அவனது தலைநகரான `மதுமன்டா' சிதைந்து போனது. தண்டன் ஆண்ட நாடு சூரிய ஒளிகூட நுழைய முடியாதபடி கருங்காடாகியது. பிசாசுகளும் ராட்சசர்களும் வசிக்கும் இடமாக மாறத் தொடங்கியது. தண்டனின் காலத்துக்குப் பிறகு அந்தக் காடு `தண்டவனம்’ எனும் பெயரில் `தண்டகாரண்யம்' என அழைக்கப்பட்டது. அந்த வனத்தில் வசிக்கும் ராட்சசர்களும், `தண்டர்கள்’ என்றே அழைக்கப்பட்டார்கள்.

அதன் பிறகு தண்டனைக்கு உரியவர்கள்தாம் இந்த வனத்தில் வசிக்கலானார்கள். ரகுகுலத் தோன்றல் ராமனும் தனது 14 வருட வனவாசத்தில் 13 வருடங்களை இந்த வனத்தில்தான் தன் தம்பி லட்சுமணன் மற்றும் மனைவி சீதையுடன் வசித்தார். ராமாயணத்தில், ஆரண்ய காண்டத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் இந்தத் தண்டகாரண்ய வனத்தில் நடைபெற்ற நிகழ்வுகளே. ராமன் தண்டகாரண்ய வனத்தில் தங்கியிருந்த அந்த 13 வருடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?

* `இலங்கேஸ்வரர்’ என அழைக்கப்படும் ராவணனின் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் அறுத்தது இந்த வனத்தில்தான்.

* விராதன் எனும் கந்தர்வனை அழித்து அவனுக்கு ராமர் அருள்புரிந்ததும் இந்த வனத்தில்தான்.

* ராவணன் சீதையை, `பஞ்சவடி’ என்ற இடத்தில் அபகரித்துச் சென்றான். அந்தப் பஞ்சவடி தண்டகாரண்ய வனத்துக்குள்தான் இருக்கிறது.

* தண்டனின் இறப்புக்குப் பிறகு அந்த இடம் ராவணனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கரன் என்பவனை நியமித்து ஆட்சி செலுத்தினான் ராவணன். கரன் ராமனால் கொல்லப்பட்டான்.

* தண்டகாரண்ய வனத்தில்தான் அகஸ்திய முனிவர் தங்கியிருந்தார். அவரிடம் ராமன் ஆசீர்வாதம் பெற்றதும் இங்குதான்.

* தன்னுடைய முதிர்ந்த வயதில் ராமனின் தரிசனத்துக்காகக் காத்துக்கொண்டிருந்த சபரிக்கு ராமன் தரிசனம் தந்ததும் இந்த வனத்தில்தான்.

ராவணப்

அசுரர்கள் என அழைக்கப்பட்ட ராவணன் கட்டுப்பாட்டில் இருந்த இந்தத் தண்டகாரண்ய வனத்தில்தான் இவ்வளவு அற்புதங்கள் நடந்தேறின. ராமாயணக் கதை என்பது பழங்காலத்தில் தென்னாட்டவர்களுக்கும், வடநாட்டவர்களுக்கும் நடைபெற்ற போராகவே பலரால் பார்க்கப்படுகிறது. தென்னாட்டவர்களின் அரசன் ராவணன். அவன்தான் ராமாயணத்தில் அசுரன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறான். அதனால்தான் `காலா’ படத்தில் `தண்டகாரண்ய நகர்' என்று பெயரிட்டு குறியீடாகத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

மேலும், `காலா’ படத்தில் அசுரகுலத் தலைவன், ராவணன், புலவர் குழந்தையின் `ராவண காவியம்’ நூலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் சில சுவாரஸ்யமான தகவல்களைக் கூறுகிறார்கள். வட மொழியில் வால்மீகியால் இயற்றப்பட்டது ராமாயண காவியம். அதைத் தழுவி எழுதப்பட்டதே கம்பரின் ராமாயணமும். இதற்கு முன்பே சங்ககாலத்தில் இருந்த ராமாயண நூல் கிடைக்கப் பெறவில்லை, அழிந்து போனது. அதன் சில பாடல்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றிருக்கிறது. அந்தப் பாடல்கள் `பழைய ராமாயணம்' எனும் பெயரில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. வால்மீகி மற்றும் கம்பரைப்போல அல்லாமல், `ராவண காவியம்' ராவணனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். அதைத்தான் `காலா’ திரைப்படத்தில், ரஜினியை `ராவணன்’ என்று கூறுவதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!