வெளியிடப்பட்ட நேரம்: 20:07 (08/06/2018)

கடைசி தொடர்பு:20:10 (08/06/2018)

பார்ட்டிக்குப் புடவைதான் டிரெண்ட்... இது காலா சரினா ஃபேஷன்!

பார்ட்டிக்குப் புடவைதான் டிரெண்ட்... இது காலா சரினா ஃபேஷன்!

முகத்தில் சுருக்கங்கள் இருந்தபோதிலும், சுட்டித்தனம் குறையாத கருநிற ஆடைக்குச் சொந்தக்காரன் `கரிகாலன்' (ஸாரி, இப்படிக் கூப்பிட வேண்டாம்னு சரினாவிடம் கேட்டுக்கொண்டதால் நாமும் `காலா'னு சொல்வோம்!). சின்ன சின்ன கண்ணசைவில் முதுமைக்காலப் பரிதவிப்பை காலா, செல்வி, சரினா வெளிப்படுத்தியவிதம், ஆசம்! படத்தின் உயிர்நாடி கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என்றால், அந்தக் கதாபாத்திரங்களுக்கு முழுமையான தோற்றத்தைத் தந்தது அவர்களின் ஆடை வடிவமைப்பு. அந்த வகையில், காலாவின் கருநிற ஆடைகள், செல்வியின் பட்டுப்புடவைகள் க்ளாசிக் டச் என்றாலும், சரினாவின் எளிமையான கைத்தறி ஆடைகள் அனைத்தும் டாப் க்ளாஸ்.

காலா

மாற்றங்களை விரும்பும் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு, தற்போது `புடவை'தான் ஃபேவரிட் சாய்ஸாக இருக்கிறது. அதிலும் ஸ்கர்ட், முழுநீள டிரெஸ் என இடமே பல்வேறு வண்ணங்களால் நிறைந்திருக்கும் பார்ட்டிகளுக்கு, நிச்சயம் புடவை தனிப்பட்ட அடையாளத்தைக் கொடுக்கும். பிறந்தநாள், ஃபேர்வெல், திருமண பார்ட்டி என ஏகப்பட்ட பார்ட்டிகள் இருக்கின்றன. இந்த சூப்பர்டூப்பர் பார்ட்டிகளுக்கு ஏற்ற  `காலா'வின் `சரினா புடவை ஸ்டைலிங் டிப்ஸ்' இங்கே...

Huma

`பார்ட்டி என்றாலே மினுமினுக்கும் உடைகள்தாம் அணியவேண்டும்' என்ற தவறான எண்ணம் பலரிடம் உண்டு. ஆனால், மிகக் குறைவான வேலைப்பாடுகளைக்கொண்ட துணி வகை என்றைக்குமே க்ளாஸிக் தோற்றத்தைக் கொடுக்கும் என்று சரினா சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அதிலும் ட்ரெண்டில் இருக்கும் `பேஸ்ட்டல்' நிறங்களில் ஆடையின் தேர்வு நிச்சயம் தவறாகாது. `எம்ப்ராய்டரி', `எம்போசிங்' முதலிய வேலைப்பாடுகள் குறைந்த ஆடைகளுக்குக் கனமான ஆபரணங்கள் சரியான மேட்ச். இவற்றுடன் கற்கள் பொருந்திய சிறிய அளவு ஹீல்ஸ் வைத்த காலணி, அழகாகச் செதுக்கிய சிகையலங்காரம், இவை அனைத்தும் சிம்பிள் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தைத் தரும் என்றது சரினாவின் காஸ்டியூம்ஸ்.

புடவைப் பிரியர்கள், விலை அதிகமுள்ள புடவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு மாறாக, புடவை உடுத்தும் ஸ்டைலை மாற்றலாம். காலர் பிளவுஸ், லாங் பிளவுஸ் (Long Blouse), Flap பிளவுஸ் என வித்தியாசமான பிளவுஸ் வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். காலர் பிளவுஸ் அணிந்தால், நெக்லஸ் அணியத் தேவையில்லை. பிளெயின் புடவைக்கு அதிக வேலைப்பாடுகள் நிறைந்த பிளவுஸும், எம்ப்ராய்டரி நிறைந்த புடவைக்கு பிளெயின் பிளவுஸும் சரியான சாய்ஸ். ஷர்ட் மாடல்களிலும் தற்போது பிளவுஸ் ட்ரெண்டாகிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் முழுநீளக் கை பிளவுஸ்தான் `காலா'வில் சரினாவின் சாய்ஸ். ஸ்மார்ட் சாய்ஸ்தானே?

புடவையில் மட்டுமல்ல, லெஹெங்கா சோலி, பலாசோ குர்த்தி போன்ற `செட்' காஸ்டியூம்களிலும் `பிளெயின் வேலைப்பாடுகள் நிறைந்தவை' ஃபார்முலா பொருந்தும். ஸ்லீவ் (Sleeve), காலர், கழுத்து டிசைன் போன்றவற்றில் சிறியளவு வித்தியாசத்தை மட்டுமே ஏற்படுத்தி `பார்ட்டி லுக்' எளிதில் பெறலாம்.

Kaala

இவற்றுக்குச் சரியான காலணிகளைத் தேர்ந்தெடுப்பதும் சவாலான ஒன்றுதான். நம் நாட்டின் பாரம்பர்ய உடைகளின் தாக்கம் அதிகம் இருக்கும் உடைகளுக்கு, கற்கள் பொருந்திய காலணிகள் கச்சிதமாய்ப் பொருந்தும். குறைந்தளவு ஹீல்ஸ் சிறந்தது. இங்கு உயரமான சரினாவின் தேர்வு, லெதர் Flats. 

இப்போதெல்லாம் `லூஸ் ஹேர்' எனச் சொல்லப்படும் பின்னல் விரித்த கூந்தலையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால், குந்தன், முத்துகள், பீட்ஸ் போன்ற கற்கள் பதித்து, தலையில் சூடிக்கொள்ளும் ஆபரணங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. இவை நிச்சயம் தனிப்பட்ட தோற்றத்தைத் தரும். நம்ம சரினா, இதுல தேர்ந்தெடுத்திருப்பது படிந்த கொண்டை. அதைச் சுற்றி அன்று மலர்ந்த மல்லிகைச் சரம். இது ஆஹா ரகம்!

எக்ஸ்டரா டிப்ஸ்: வெளித்தோற்றம் மட்டும் அழகாய் இருந்தால் போதுமா? அதிகக் கூட்டம் நிறைந்த சபைகளுக்கேற்ற வாசனைத் திரவியம் பயன்படுத்துவது மிக முக்கியம். அடிக்கடி டாப்-அப் செய்துகொள்ள அவசியமில்லாத, நீண்ட நேரம் உழைக்கும் தன்மைகொண்ட பெர்ஃப்யூம், பார்ட்டிக்கு மிகச் சிறந்தது. பூக்கள் வாசம்கொண்ட திரவியம் நிச்சயம் பார்ட்டிகளில் கைகொடுக்கும்.


டிரெண்டிங் @ விகடன்