Published:Updated:

''ஊருக்கு பயந்து நான் விவாகரத்து ஆன விஷயத்தை சொல்லலை!'' - சிங்கிள் மதர் ஜசீனாவின் தன்னம்பிக்கை

''ஊருக்கு பயந்து நான் விவாகரத்து ஆன விஷயத்தை சொல்லலை!'' - சிங்கிள் மதர் ஜசீனாவின் தன்னம்பிக்கை
''ஊருக்கு பயந்து நான் விவாகரத்து ஆன விஷயத்தை சொல்லலை!'' - சிங்கிள் மதர் ஜசீனாவின் தன்னம்பிக்கை

 ''என் குழந்தைக்கு அம்மாவும் நான்தான். அப்பாவும் நான்தான்'' என சிங்கிள் மதராக தன் மகளை வளர்த்துவருகிறார் ஜசீனா பேக்கர் ( Jaseena Backer). இவர் ஒரு சைக்காலஜி மருத்துவர். பேரன்டிங் பற்றிப் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறார். கார்ப்பரேட் கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்குத் தேவையான பயிற்சியும் அளிக்கிறார். தன் குட்டி இளவரசிக்காகக் கடினமான முள் பாதையையும் பூக்கள் நிறைந்த பாதையாக கடந்துவந்திருக்கிறார். அந்த வலி மிகுந்த பாதைக்குள் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார், ஜசீனா.

''நான் பிறந்தது கேரளா. வீட்டில் மொத்தம் ஐந்து பெண் குழந்தைகள்.  அப்பாவும் அம்மாவும் முற்போக்கானவங்க. ஏழாம் வகுப்பு வரை துபாயில் படிச்சேன். அப்புறம், ஊட்டியில் படிச்சேன். எங்க குடும்பத்திலேயே என் அக்காதான் முதல் பட்டதாரி. எங்க சொந்தக்காரங்க வீட்டுல உள்ள பிள்ளைங்க யாருமே டிகிரி படிச்சதில்லை. ஆண்கள் வெளிநாட்டு வேலைக்கு போய்டுவாங்க. பெண்களுக்குத் திருமணம் செஞ்சுவெச்சுருவாங்க. ஆனால், நாங்க ஐந்து பேருமே டிகிரி வாங்கினோம். நான் சைக்காலஜி முடிச்சேன். அரேன்ஜ்டு மேரேஜாகி துபாய்க்குப் போயிட்டேன். எனக்கும்  கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரோடு சேர்ந்து வாழப் பிடிக்கலை. அப்போதான் மகள், மஹெக் ( Mahek) பிறந்தாள். குழந்தையின் நலனுக்காக அட்ஜஸ் பண்ணிட்டு அவரோடு வாழலாம்னு நினைச்சேன். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேலே அவருடன் வாழவே முடியாதுன்னு புரிஞ்சதும், விவாகரத்துக்கு அப்ளை பண்ணிட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்'' என்கிற ஜசீனா, தொடர்ந்த சவால்களைச் சொல்கிறார்.

''என் சமூகத்தில் என்ன சொல்வாங்களோ? தனியா பொம்பளைப் பிள்ளையை எப்படி வளர்க்கிறது? என்னென்னமோ பேசுமே எப்படிச் சமாளிக்கிறதுன்னு நினைச்சு புழுவா துடிச்சேன். கேள்விகளால் என்னைக் குத்தித் துளைச்ச நாக்குகளுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக நின்னேன். ஒரு பொம்பளை தனியா நின்னு அவள் மகளை வளர்க்கிறதை சமூகம் எப்படி ஒத்துக்கும்? என்னோடு சேர்த்து என் குழந்தையையும் அசிங்கப்படுத்துமே. என் வயித்துல பிறந்ததது தவிர வேற எந்தத் தப்புமே செய்யாத என் குழந்தை எந்தச் சூழ்நிலையிலும் துவண்டுடக் கூடாதுன்னு நினைச்சேன். என் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும்தான் நான் விவாகரத்து வாங்கின விஷயம் தெரியும். இரண்டாவதாக திருமணம் செய்துக்கவும் விருப்பம் இல்லை. என் பொண்ணை நல்லா வளர்க்கணும் என்கிற லட்சியம் மட்டும்தான் இருந்துச்சு.  அம்மாவும் அப்பாவும் என்னை அரவணைச்சுக்கிட்டாங்க. ஆனாலும், அவங்களுக்கு பாரமா இருக்க விரும்பாமல், நிறைய போராட்டத்துக்குப் பிறகு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். வீட்டுக்கு களைச்சு வரும் எனக்கு மகள்தான் மருந்து. ஒருநாள் அவள் விளையாடிட்டு இருக்கும்போது திடீர்னு, 'அப்பா எங்கேம்மா?'னு கேட்டாள். 'உன் அப்பா அமெரிக்காவில் இருக்காங்க'னு சொன்னேன். வெளியிலும் அதே பதிலைத்தான் சொல்லிட்டிருந்தேன். என் பொண்ணு வளர வளர சவால்கள் அதிகமாச்சு'' என அந்த சில நொடிகள் மெளனித்து தொடர்ந்தார் ஜசீனா.

''அவளுக்கு ஏழு வயசு இருக்கும்போது, 'எனக்கும் உன் அப்பாவுக்கும் இந்த விஷயத்துக்குத்தான் பிரச்னை வந்துச்சு. அதனால் நாங்க பிரிஞ்சிட்டோம்'னு சொன்னேன். அவள் என்னை நம்புவாளா? என்னைப் புரிஞ்சுப்பாளா எனப் பயந்தேன். ஆனால், 'எனக்குத்தான் அம்மாவாகவும், அப்பாவாகவும் நீ இருக்கியேம்மா'னு அவள் சொன்ன நொடியில், அத்தனை நாளாக மனசுக்குள் சேர்த்துவெச்சிருந்த மொத்த கண்ணீரையும் கொட்டிட்டேன். அப்புறம்தான் நான் விவாகரத்து பெற்ற விஷயத்தை சமூகத்துக்கு உரக்க சொன்னேன். 'இவ்வளவு வருஷமா புருஷன் ஏன் வரலை?'னு பேசிட்டிருந்தவங்க, 'பொம்பளைப் பிள்ளையை எப்படி வளர்க்கப் போறாளோ'னு பேச ஆரம்பிச்சாங்க.

ப்போ என் பொண்ணுக்கு 10 வயசு. அவளை ஊட்டியில் ஹாஸ்டலில் சேர்த்திருக்கேன். ஒருநாள் விட்டு ஒருநாள் என வாரத்துக்கு நான்கு கடிதங்களை, அவளிடம் சொல்ல ஆசைப்படும் விஷயங்களை என் கையால் எழுதி அனுப்பறேன். அவள் அந்தக் கடிதங்களில் என்னை உணர்வதாகச் சொல்வாள். குழந்தைக்காக வாழ ஆரம்பிக்கும்போது, இந்தச் சமூகம் வைக்கும் எல்லா குற்றச்சாட்டுமே தவிடுபொடியாகிடும். என் பொண்ணை அசிங்கமா நினைக்கும் சமூகமே, அவளைக் கொண்டாடும் அளவுக்கு வளர்த்துக் காட்டுவேன்'' எனத் தாய்மையில் நெகிழ்கிறார்.

''ஒரு பொண்ணு தனியா இருந்தாலே இந்தச் சமூகம் அருவருப்புடன் பார்க்கிறதும், கேலி பேசறதும் எவ்வளவு பெரிய கொடுமை? விவாகரத்து வாங்கிட்டு தனியா தன் குழந்தைக்காக சம்பாதிக்கிறதும் வாழறதும் அவ்வளவு பெரிய தப்பா? விவாகரத்தானவங்க ஓர் ஆண் பக்கத்தில் நின்னாலே அது தப்பான உறவுதானா? உங்களாலும் தனியா வாழ்ந்து காட்டமுடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்காமல் புறக்கணிக்கிறது எந்த வகையில் நியாயம்? என் பொண்ணு வளர்ந்து நிற்கும்போது, அவள் வெற்றியைக் கொண்டாட கண்ணீரைத் தவிர இந்த சிங்கிள் மதரிடம் வேற பதில் இல்லீங்க'' எனக் கண்கள் பனிக்க சொல்கிறார் ஜசீனா. 

நீங்க ஜெயிப்பீங்க அம்மா!