``தண்ணீர் ₹10... பிளாஸ்டிக் பாட்டிலைத் திருப்பித் தந்தால் ₹5!"- அசத்தும் இந்தியன் ரயில்வே

plastic crushing machine on vadodara railway station

``தண்ணீர் ₹10... பிளாஸ்டிக் பாட்டிலைத் திருப்பித் தந்தால் ₹5!

ன்றைய காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது சுற்றுச்சூழல் மாசுபாடுதான். அதில் மிகத் தீவிரமான, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காகப் பல வழிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவிலும் பிளாஸ்டிக்கை ஒழிப்பது பற்றி தீவிரமான ஆலோசனைகளும், புதுப்புது திட்டங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் கடந்த ஆண்டு கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட 'சூசித்வா சாகாரம்' என்ற பிரசாரம் பிளாஸ்டிக்குகளை அகற்ற முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் பிளாஸ்டிக்குகளையும் சேர்த்து எடுத்து வர வேண்டும் என்பதுதான் அத்திட்டத்தின் நோக்கம். அதன்படி முதற்கட்டமாக 25 டன் பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் இருந்து அகற்றி இருக்கிறார்கள். அகற்றிய பிளாஸ்டிக்குகளைப் தூளாக அரைத்து சாலை பயன்பாட்டுக்காகப் பயன்படுத்த இருக்கிறார்கள். அண்மையில் தமிழக அரசும் அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக்

அந்த வரிசையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காகவும், கண்ட இடங்களில் பாட்டில்களை எறிவதைத் தவிர்ப்பதற்காகவும் குஜராத்தில் புதிய திட்டம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் மக்களைக் கவர்வதற்காக கூடுதலாக ஒரு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள வதோரா ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக ஓர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில் பயணிகள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களைப் போட வேண்டும். உள்ளே செல்லும் பாட்டிலானது இயந்திரத்தினுள் சுக்கு நூறாக உடைக்கப்படும். பாட்டில்களைப் போட்டவுடன் பயணிகள் தங்கள் செல்போன் நம்பரைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் பேடீஎம் மூலமாக 5 ரூபாய் பணம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் மற்றொரு சிறப்பும் உண்டு. பாட்டில்களின் எடைக்கு ஏற்பவும் பேடீஎம் மூலம் பணமும் வழங்கப்படுகிறது. இப்புதிய திட்டத்துக்கு மக்களிடையே அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளது. ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் 'ரயில் தண்ணீர்' பாட்டிலின் விலையே பத்து ரூபாய்தான். பிளாஸ்டிக் பாட்டில்களை இயந்திரத்தினுள் போடுவதால் அங்கே உடைக்கப்பட்டு மறு சுழற்சி செய்வதற்காகக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது. 

இதைப் பற்றி இந்தியன் ரயில்வே நிர்வாகம் ``சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இது ஒரு புதிய முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் பயணிகளுக்கு மிகவும் உபயோகமாகவும் இருக்கும். அதே நேரம் பணம் கொடுப்பது, மக்களுக்கு பிளாஸ்டிக்குகளை மக்கள் இயந்திரத்தில் போடும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்" எனத் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், ``சுற்றுச்சூழல் தினத்தில் இதுபோன்ற திட்டங்களை முன்னெடுப்பதைப் பெருமையானதாக கருதுகிறோம். இதுதவிர, ரயில்களில் வழங்கப்படும் உணவு பாக்கெட்டுகள் பிளாஸ்டிக்குகளுக்குப் பதிலாகச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்படையா வண்ணம் பொருள்களை பாக்கெட் செய்து கொடுக்கப் போகிறோம். இதையும் முதற்கட்டமாக டெல்லியில் சதாப்தி மற்றும் ராஜ்தானி ஆகிய ரயில்களில் தலா நான்கு ரயில்களில் மட்டும் இத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்" என்று ட்வீட்டியுள்ளார். 

 

ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழலைக் காப்பதற்காகவும் இந்த இயந்திரத்தை வைத்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது, குஜராத் அரசு. உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நோக்கம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினத்தில் பிளாஸ்டிக்குகளை அனைத்து நாடுகளும் மறுசுழற்சி செய்ய வேண்டும் என்ற நோக்கம் அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் வரும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற இயந்திரங்களை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வைக்கத் தமிழக அரசு ஏற்பாடு செய்யலாமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!