லன்ச் பாக்ஸில் நெய் சாதம் கலந்து வைக்கும்போது இதைக் கவனியுங்கள்! #GheeRice #VarietyRice

பிரியாணிக்கு ருசியான மாற்று, நெய் சாதம். பிரியாணியைவிட சமைப்பதும் சுலபம். குழந்தைகளுக்கு மதிய உணவாக நெய் சாதத்தை கொடுத்து அனுப்பினால், லன்ச் பாக்ஸ் காலியாக திரும்பிவரும். நெய் சாதத்தை எப்படிச் செய்வது என செட்டிநாடு சமையல் கலை நிபுணர், வள்ளிக்கண்ணு மெய்யப்பன் சொல்லித்தருகிறார்.

நெய் சாதம்

 

``நெய் சாதத்தை இரண்டு முறைகளில் செய்யலாம். ஒன்று, சிம்பிளான நெய் சாதம். இன்னொன்று, தேங்காய்ப்பால் சேர்த்த, ருசியில் பிரியாணியை ஓவர்டேக் செய்யும் நெய் சாதம். 

சிம்பிளான நெய் சாதம்!

ஒரு கப் சீரக சம்பா அல்லது பாஸ்மதி அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் வேகவைப்பதாக இருந்தால், ஒரு கப் சீரக சம்பா அரிசிக்கு 2 கப் தண்ணீர் விடவும். பாசுமதி அரிசி என்றால், ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனுடன் தேவையான உப்பையும் போட்டுவிட வேண்டும். ஒரு விசில் வந்ததும், அடுப்பை 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து அணைத்துவிடவும். விசில் அடங்கியதும், சாதத்தைப் பெரிய பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும்.

பாத்திரத்தில் செய்வதாக இருந்தால், அரிசியுடன் தேவையான உப்புப் போட்டு வேகவைத்து, வடித்து ஆறவிடவும். 

வள்ளிக்கண்ணு    4 டீஸ்பூன் நெய்யில் 2 பட்டை, 2 பிரின்ஜி இலை, இரண்டு பச்சை மிளகாய் தாளித்து, அரை டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுது (தேவைப்பட்டால்) சேர்த்து வதக்கவும். இதில், ஆறிய சாதத்தைச் சேர்த்துக் கிளறி, மேலே நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும். சிம்பிள் அண்டு க்விக் நெய் சாதம் ரெடி.

தேங்காய்ப்பால் நெய் சாதம்!

இதையும் சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசியில் செய்யலாம். ஒரு கப் சீரக சம்பாவுக்கு 2 கப் தேங்காய்ப்பால், பாசுமதி என்றால் ஒன்றரை கப் தேங்காய்ப்பால் எடுத்துக்கொள்ளவும். முற்றியத் தேங்காயை (கொப்பரைத் தேங்காய் அல்ல) அரைத்து, பிழிந்தெடுத்த முதல் பாலை இந்தச் சாதத்துக்குப் பயன்படுத்த வேண்டும். இரண்டாம் பால், மூன்றாம் பால் பயன்படுத்தி நெய் சாதம் செய்தால் லன்ச் பேக் செய்யும்போது, சாதம் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. இனி செய்முறை...

குக்கரை அடுப்பில்வைத்து, 4 டீஸ்பூன் நெய்யில் 2 பட்டை, 2 பிரின்ஜி இலை தாளித்து, இரண்டு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுதைப் போட்டு (தேவைப்பட்டால்), அடிப்பிடிக்காமல் சிவக்க வதக்கவும். இதனுடன் 10 நிமிடம் ஊறவைத்த அரிசியைப் போட்டு, இரண்டு அல்லது மூன்று புரட்டுப் புரட்டி லேசாக வதக்கவும். பிறகு, தயாராக உள்ள தேங்காய்ப்பாலை ஊற்றி, ருசிக்கேற்ப உப்புப் போடவும். குக்கரை மூடி, விசிலைப் போடவும். அடுப்பை ஹையிலும் இல்லாமல் சிம்மிலும் இல்லாமல் நடுத்தரமாக வைக்கவும். ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் 5 நிமிடம்வைத்து அணைத்துவிடவும். விசில் அடங்கியதும் நெய் சாதத்தை ஹாட்பேக்கில் போட்டு மூடிவிடவும். குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்புவதாக இருந்தால், பெரிய தாம்பாளத்தில் கொட்டி ஆறவிட்டு, பேக் செய்யவும். சுடச்சுட பேக் செய்தால், சாதம் வியர்த்து, அந்தத் தண்ணீர் சாப்பாட்டில் விழுந்து ஊசிப் போய்விடலாம். இதற்கு சைட் டிஷ்ஷாக உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் வைக்கலாம்.

நெய்

தேங்காய்ப்பால் நெய் சாதத்தை வார இறுதி ஸ்பெஷலாக தயாரிக்கிறீர்கள் என்றால், மேலே சொன்ன அதே அளவில் பாத்திரத்திலும் சமைக்கலாம். அடுப்பை சிம்மிலேயே வேகவைத்து, சாதம் குழையாமல் கிளறிவிடவும். அரிசி பாதி அளவு வெந்ததும், பாத்திரத்தை மூடி வெந்நீர் பாத்திரத்தை அதன்மேலே அரை மணி நேரம்வைக்க வேண்டும். அல்லது இரும்பு தவ்வாவை அடுப்பில்வைத்து அது சூடானதும், நெய் சாத பாத்திரத்தை அதன்மேலே வைத்து, அதற்கு மேலே வெந்நீர் பாத்திரத்தை அரை மணி நேரம் வைக்கவும். இப்படி 'தம்' வைத்த நெய் சாதத்துக்கு, காரசாரமான மட்டன் குழம்போ, சிக்கன் குழம்போ கூட்டணி சேர்ந்தால், அந்த நாளே ருசி நிறைந்த நாளாகிவிடும். சைவ விரும்பிகள் கத்தரிக்காய் கிரேவி தொட்டுக்கொள்ளலாம்.''

அடுத்த சண்டே உங்க வீட்டில் நெய் சாதம்தானே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!