வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (12/06/2018)

கடைசி தொடர்பு:11:44 (12/06/2018)

``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்!” - ஜாலி டால்ஃபின்கள்

டால்ஃபின்கள் கூட்டமாக நீரில் வளையம்போல் வட்டமிட்டுச் சுற்றுவதை நேரிலோ வீடியோ பதிவுகளிலோ பார்த்திருப்போம். அவை சொல்லிவைத்தாற்போல் அப்படி ஒற்றுமையாகச் சுற்றிவருவதற்குக் காரணம்

``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்!” - ஜாலி டால்ஃபின்கள்

டால்ஃபின்கள். எத்தனை முறை ரசித்தாலும் மீண்டும் முதல்முறை போலவே ரசிக்கத் தூண்டுபவை. பல சமயங்களில் மனிதர்களைப் போலவே டால்ஃபின்கள் நடந்துகொள்ளும். மனிதர்களைப் போலவே அவையும் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு கூட்டமாகச் சுற்றும் பழக்கம் கொண்டவை. டால்ஃபின்கள் கூட்டமாக நீரில் வளையம்போல் வட்டமிட்டுச் சுற்றுவதை நேரிலோ வீடியோ பதிவுகளிலோ பார்த்திருப்போம். அவை சொல்லிவைத்தாற்போல் அப்படி ஒற்றுமையாகச் சுற்றிவருவதற்குக் காரணம் உண்மையில் அவை ஒன்றுக்கொன்று சொல்லித்தான் வைத்திருக்கும். ஆம், டால்ஃபின்கள் கேங் சேர்ந்துதான் நீந்தும். பல வருட நட்பு கொண்டிருக்கும். அவற்றின் நட்பு பல பத்தாண்டுகளுக்குக்கூட நீடிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

டால்ஃபின்கள்

அதிகபட்சம் 14 டால்ஃபின்கள் ஒரு நட்புவட்டத்தில் சேர்ந்திருக்கும். நீண்டகால நட்பைப் பேணிக்காக்கும் விதமாக ஒன்றுக்கொன்று தனித்தனி குரல்களை வைத்திருக்கும். அதாவது ஒவ்வொரு நண்பரிடமும் அவை பேசும்விதம் வித்தியாசமானது. அதைத் தன் நண்பர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமாக அவை கருதுவதுண்டு. அத்தகைய தனிப் பேச்சுமுறையை அவர்களோடு தனியாக இருக்கும் சமயங்களைவிடக் கூட்டமாக இருக்கும்போதே அதிகமாகப் பயன்படுத்துமாம். அதன்மூலம் அந்த நண்பன் தனக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதைக் கூட்டத்துக்குப் புரியவைக்கும் ஒரு முயற்சியாக இதைச் செய்கிறது.

மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டெஃபானி கிங் (Stephanie King) என்பவர் டால்ஃபின்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். டால்ஃபின்கள் நீண்டகால நட்போடு அக்கறையோடு ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழும் அறிய உயிரினம். கடலில் காயம்பட்ட மனிதர்களுக்கே உதவும் டால்ஃபின்கள் தன் கூட்டத்தினரோடு ஒத்துழைத்து ஒற்றுமையாக வாழ்வது ஆச்சர்யமில்லை. ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், அவை தங்கள் நண்பர்களுக்கென்று தனித்தனி பெயர் வைத்து அடையாளப்படுத்திக் கொள்ளும். ஆண் டால்ஃபின்களுக்கு மட்டுமே இந்தப் பழக்கம் உண்டு. தன்னோடு நீண்டகாலமாக இருக்கும் நண்பர்களை அழைப்பதற்குத் தனித்தன்மையான குரலொலிகளைப் பயன்படுத்துகின்றன. அதாவது மனிதர்கள் ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைப்பதைப்போல.

டால்ஃபின் கூட்டம்

கிங் மற்றும் அவரது சகாக்கள் இதைப் பற்றிப்  புரிந்துகொள்ள முடிவுசெய்தனர். நீருக்கடியில் வேலைசெய்யும் மைக்ரோஃபோன்களை டால்ஃபின்களின் உடலில் பொருத்திக் குரலொலிகளை ஆய்வுசெய்தனர். அவர்கள் தேர்வுசெய்த சில ஆண் டால்ஃபின்களின் ஒவ்வொரு குரலொலியும் பதிவு செய்யப்பட்டது. அதன்மூலம் அவர்கள் சாதாரணமாக டால்ஃபிகளுக்குத் தனித்தனிக் குரல்கள் இருப்பதும், ஒவ்வொரு டால்ஃபினும் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமான குரலொலிகளை எழுப்புவதும் தெரியவந்தது.

டால்ஃபின்களின் குரலொலிகளைப் பெயர்களோடு ஒப்பிடுவதற்குக் காரணம் உண்டு. குரலொலி என்பது டால்ஃபின்கள் தங்கள் நண்பனுக்கென்று தனி விசில் சத்தத்தையே அடையாளமாக வைத்திருக்கும். ஒவ்வொரு டால்ஃபினுக்கும் ஒரு விதமான விசில் சத்தம் இருக்கும். டால்ஃபின்களும் அந்த விசில் சத்தத்தைத் தான் மற்ற டால்ஃபின்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதும் பயன்படுத்தும். மிகவும் நெருங்கிய நண்பர்களாக அவற்றுக்குள் ஒற்றுமை மேம்படும்போது அதையே அவை தங்களுக்குள் பொதுவான அடையாளமாகக்கூட மாற்றிக்கொள்ளும். கிளி, யானை, வௌவால்கள் போன்ற உயிரினங்களில்கூட இந்தமாதிரி ஒரேவித ஒலிப் பரிமாற்றங்கள் நிகழ்வதுண்டு. ஒருவேளை ஒற்றுமையாக இருக்கும் இரண்டு டால்ஃபின்கள் தங்களுக்கு ஒரே விசில் சத்தத்தைக் கொண்டிருந்தால் அவை இரண்டும் நெருங்கிய நண்பர்கள் என்று பொருள். மிகவும் நெருங்கியவர்களாக அவர்கள் இருப்பதால் அவை இரண்டும் தங்களைத் தனித்தனியாகப் பாவிக்காமல் ஒரே ஒலியை இருவருக்கும் பொதுவானதாக மாற்றிக்கொள்ளும். இது இரண்டு டால்ஃபின்களுக்கு இடையில் மட்டுமே நிகழும். இரண்டுக்கும் மேற்பட்ட டால்ஃபின் நண்பர்கள் கூட்டமாக வாழும்போது அவற்றுக்கென்று தனித்தனி குரலொலிகள் இருக்கும்.

குரலொலி

அனைத்து டால்ஃபின்களுக்குமே ஒருவித குரலொலி அடையாளங்கள் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட குரலொலி அடையாளங்கள்கூட இருக்கின்றன என்று ஸ்டெஃபானி கிங் கூறுகிறார். உதாரணமாக ஒரு டால்ஃபின் சில ஆண்டுகள் ஒரு கூட்டத்தோடு நட்புறவுகொண்டு அவர்களோடு கூட்டாக வாழ்ந்திருக்கும். பிறகு அவர்களைப் பிரிந்து வேறொரு கூட்டத்தோடு சேர்ந்திருக்கலாம். புதிய கூட்டத்தில் அதற்கென்று தனி குரலொலி ஏற்படும். புதிய நண்பர்கள் புதிய ஒலியை எழுப்பித்தான் அழைப்பார்கள். உணவு கிடைக்காத சமயங்களில் டால்ஃபின்கள் அங்கேயே இருக்காது. உணவுதேடி வேறு இடங்களுக்கும் வலசை செல்லக்கூடியவை. அப்படிச் செல்லும்போது தனது பழைய நண்பர்கள் கூட்டத்தைச் சந்திக்க நேர்ந்தால் அவை தனது நண்பனைப் பழைய குரலொலி அடையாளத்தைக் கொண்டே அழைக்கும். டால்ஃபின்களுக்கு இருக்கும் நினைவுத் திறன் நாம் அனைவரும் அறிந்ததே. ஆகவே, தனது நண்பனையோ அவனுக்கான அடையாளக் குறியீட்டு ஒலியையோ அவை மறக்காதது ஆச்சர்யமில்லை. அவ்வாறு நட்புறவோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவற்றின் ஒற்றுமையே நம்மை ஆச்சர்யத்துக்குள்ளாக்குகிறது.


டிரெண்டிங் @ விகடன்