Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கடைத்தெருக் கதைகளைச் சொன்ன ஆ.மாதவன்! - கதை சொல்லிகளின் கதை

கதை சொல்லிகளின் கதை

பாகம்1- வ.வே.சு.ஐயர் பாகம்-2- ஆ.மாதவய்யா பாகம்-3- பாரதியார்
பாகம்-4-புதுமைப்பித்தன் பாகம்-5- மௌனி பாகம்-6 - கு.பா.ரா
பாகம்-7- ந.பிச்சமூர்த்தி பாகம்- 8 - பி.எஸ்.ராமையா பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்
பாகம் -10- அறிஞர்.அண்ணா பாகம்-11- சி.சு.செல்லப்பா    பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்
பாகம் - 13 - எஸ்.வி.வி பாகம்-14-  தி.ஜ.ரங்கராஜன் பாகம்- 15.1  கல்கி
பாகம்-15.2 கல்கி பாகம்- 16- ராஜாஜி பாகம்-17 -அநுத்தமா
பாகம்18.1-கு.அழகிரிசாமி பாகம் 18.2- கு.அழகிரிசாமி பாகம் 19- கிருஷ்ணன் நம்பி
பாகம்-20- ல.சா.ரா பாகம்-21 - விந்தன் பாகம்-22-  மா.அரங்கநாதன்
பாகம்-23- ஜி.நாகராஜன் பாகம்- 24-  பெண் படைப்பாளிகள் பாகம்-1 பாகம்-26 - பெண் படைப்பாளிகள் பாகம்-2

நகுலனையும் நீல.பத்மநாபனையும்போல திருவனந்தபுரத்திலேயே வாழும் படைப்பாளி ஆ.மாதவன், தமிழகத்தில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாத எழுத்தாளர். 2015-ம் ஆண்டில் அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டபோதும்கூட அவருடைய நேர்காணல்களோ செய்தியோ பத்திரிகைகளில் பெரிய அளவில் வரவில்லை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், அவருக்கு விருது வழங்கிப் பாராட்டியது. அப்போது அவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ஜெயமோகன் வெளியிட்டார். ஆ.மாதவனை நேர்காணல் செய்து ஜெயமோகன் வெளியிட்டார். பிறகு, அவரது 66 சிறுகதைகளின் தொகுப்பை நற்றிணைப் பதிப்பகம் வெளியிட்டது. அந்தத் தொகுப்பின் முன்னுரையில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் `கலை இலக்கியப் பெருமன்றமோ, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமோ ஆ.மாதவனைக் கூப்பிட்டு எந்தக் கூட்டமும் போட்டதில்லை. அவர்களும்தாம் தன்னாள், வேற்றாள் பார்ப்பார்கள் போலும்!' என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற கருத்தை ஜெயமோகனும் தன்னுடைய கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆ.மாதவன்லா.ச.ரா., க.நா.சு., சுந்தர ராமசாமி, தி.ஜா., ஞானக்கூத்தன் போன்ற தமிழகத்திலேயே வாழ்ந்த பல எழுத்தாளர்களையும்கூட இந்த அமைப்புகள் அழைத்துக் கூட்டம் போட்டதில்லை. அவர்கள் தன்னாள், வேற்றாள் பார்ப்பதில்லை. கருத்துரீதியாக மட்டுமே யோசிப்பவர்கள். அவர்களின் கருத்துகளும் கால ஓட்டத்தில் மாற்றம் பெற்றுள்ளன. நிற்க. இங்கு நாம் ஆ.மாதவனின் சிறுகதைகளைப் பற்றியும் அவரைப் பற்றியும் பேசுவோம்.

ஆ.மாதவன் 1934-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவரது தந்தை பெயர் ஆவுடைநாயகம் பிள்ளை. தாயார் செல்லம்மாள். ஆ.மாதவனின் தந்தையின் ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை. தாயின் ஊர் நாகர்கோவில். பிளவுபடாத திருவிதாங்கூர் இருந்த காலத்திலேயே அவர்கள் திருவனந்தபுரத்துக்குக் குடியேறிவிட்டனர். அவரது தந்தை, திருவனந்தபுரம் சாலை அங்காடியில் சிறுவணிகராக இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த ஆ.மாதவன் மேலே படிக்கவில்லை. திராவிட இயக்க ஆதரவாளராக எழுத ஆரம்பித்தார். அவரது முதல் கதை 1955-ம் ஆண்டில் `சிறுகதை’ என்ற இதழில் வெளியானது. பிறகு, மலையாளம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று தீவிர இலக்கியத்தளத்தில் செயல்படலானார். அவரது முதல் சிறுகதைத் தொகுதி `மோக பல்லவி'.

`மலைக்கு மேகம் நிழல் காட்டுகிறது. மலை நிர்வாணத்தில் தவம் நிற்கிறது. மேகத்துக்கென்ன? காற்றின் கதியில் மேகம் நழுவியே போகிறது. மலை வெயிலில் தகிக்கிறது… கார்த்திக்கு இந்த வெயிலின் தகிப்பு தெரியுமோ?' என்று தொடங்கும் `மோக பல்லவி' கதையில் கார்த்தி என்பவர் ஒரு துணை நடிகை. கதை சொல்லியின் மனைவி மனோ மரணப்படுக்கையில் இருக்கிறார். எதிர்வீட்டுப் பெண்ணான கார்த்தி இரவில் வேலை முடித்துவிட்டு காலையில் திரும்புபவர். காலையில் வந்து மனோவுக்கு உதவிகள் செய்பவர். அந்தக் கார்த்தி மீது இவருக்கு ஓர் ஈர்ப்பு.

`பட்டுச்சேலையின் தளர்ச்சி, அலங்காரத்தின் அலட்சியம், அழகாக இருக்கிறோம் என்ற நிமிர்வு, வஞ்சகமில்லாத வளர்ச்சி, பரந்த முகம்... கார்த்தி பின்னும் மனத்திரையில் வளர்ந்தாள். விலக்க முடியாத மனச்சபலம். மனைவி நோய்ப்படுக்கையில் இருக்கிறாளே எனத் தலைகுனிகிறதா என்ன? விவஸ்தைக்கெட்ட மனசு!' என்று தொடர்கிறது கதை.

ஒரு கட்டத்தில் மோகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மனைவிக்கு உதவ வந்த கார்த்தியை வழிமறிக்கிறான். ``என்னைவிடுங்கள். என்னை விட்டுடுங்கள்...” அவள் குரல் இரங்கிற்றே தவிர, அவனது வன்மை தளர்வதாக இல்லை. அவள் முகமும் கைகளும் நெஞ்சுத்துடிப்பும் அவன் இறுக்கத்தில் வசமாகச் சிக்கிக்கொண்டன. எண்ணி சில கணப்பொழுது மூச்சுகளும் பெருமூச்சுகளும்தாம் பேசின.

ஆ.மாதவன்

இனி அவளால் முடியாது என்று அவன் சற்றே நயந்த ஒரு விநாடியில் திமிறிக்கொண்டு அவள் வெளியே பாய்ந்துவிட்டாள். இரையை நழுவவிட்ட வேங்கைபோல அவன் சமைந்து நின்றான். இரவு, வழிகாட்டியில்லாத கபோதிபோல நாதியற்றுக் கிடந்தது. ஆனால், அவனது அந்தரங்கத்தில் அடிப்படையற்ற அவலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்து முடிந்துவிட்டன. தண்டனை நிறைவேற்றப்பட்ட கழுமேடைபோல நெஞ்சம் வெறிச்சிட்டிருந்தது.

அன்று இரவு முழுக்கப் பிதற்றிக்கொண்டிருந்த அவனுடைய மனைவி விடிந்துபோய்ப் பார்த்தபோது அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். கடைசி உறக்கம். காலையில் கார்த்தி எதிர்வீட்டைக் காலிசெய்து மூட்டை முடிச்சுகளோடு கிளம்புகிறாள்.

அவன், உள்ளே மனைவியின் பிணத்தையும் மறந்து கார்த்தி போவதைப் பார்த்துக்கொண்டே நின்றான். அவள் வண்டியின் திரையை இழுத்துவிட்டுத் தன்னை மறைத்துக்கொண்டாள்.

வாசலில் அவன், கார்த்தியின் மயக்கத்தில் சிலையாக நின்றான். மனைவியின் பிணம் தனித்துத் தூங்கிற்று என்று `மோக பல்லவி' கதை முடிகிறது.

`தேவ தரிசனம்' என்ற கதையிலும் இதே போன்ற காட்சி.

`வசுமதி ஆரம்பத்தில் எப்படியோ வாழ்ந்தவள். அவளது வாடிக்கையாளர்களில் ஒருவனே அவளை நிரந்தரமாக்கிக்கொண்டு கழுத்தில் சரடேற்றி வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டான். அதிலிருந்து இவள் தன் பத்தினித்தன்மையை நிலைநாட்டிக்கொள்ள தினமும் விடியற்காலையின் முதல் தொழுகைக்காகக் கோயிலுக்கு வருகிறாள். ``கோயிலில் சங்கு ஊதும் ஆள் ஒருவன்தான் கதை சொல்லி. சந்தடியற்ற காலைப்பொழுதில் கோயில் வரை வழித்துணையாக வசுமதிக்கு இவன் அமைகிறான். பத்திருபது நாள்களில் அவனுக்கு அவள்மீது மோகம் வந்துவிடுகிறது. ஒருநாள் கோயிலுக்குள்ளேயே ஆளரவமற்ற ஓரிடத்தில் அவளை வழிமறிக்கிறான்.

``எனக்கு வழிவிடுங்கள். இது பாவம்.”

``நீ பாவ காரியம் செய்துகொண்டிருந்த காலத்தில் உன் மேல் சுமத்தப்பட்டிருந்த மலிவு காரணமாக என்னால் உன்னை அணுக முடியவில்லை. இப்போது நீ புடம்போட்ட தங்கம். தீக்குளித்து வந்த புராண நாயகிபோல புனிதமான உன்னை, நான் வேண்டுவதெல்லாம் ஒரே ஒருமுறை...”

``நான் தீக்குளித்துவிட்டு என்னை நம்பும் ஒருவருக்கு மனைவியாகிவிட்டேன். இன்னும் என்னைப் பழைய சேற்றுக்கு இழுக்காதீர்கள். இது தேவாலயம், எனக்கு வழிவிடுங்கள்.”

ஆனால், அவன் அவளை மறித்தது மறித்ததுதான்.

அதற்குப் பிறகு அவள் கோயிலுக்கு வருவதை நிறுத்திவிடுவதாகக் கதை முடிகிறது.

`நாலு பேர்' என்று இன்னொரு கதை. `காதோரத்து நரை பூத்த வயதின் பள்ளிக்கூடத்து வாத்தியார் ஒருவர், இறகடியில் மென் பீலி போன்ற பருவத்தின் தன் மாணவி துளசி மீது மையல்கொள்கிறார். அவளும் அவர் மீது.

``முறையற்ற எனது பேராசையை அவளிடம் நீட்டியபோது - புன்னகையால் அவள் அதைத் தழுவிக்கொண்டாள். அந்தப் பேராச்சர்யத்தின் நாளை, நான் புல்லரிப்பால் நினைக்கிறேன்.

வயல்கரைக்கு அப்பால், தாழைப்புதருக்கு அடியில் என் அழைப்பை ஏற்று அவள் வந்தபோது - இந்தப் பிரபஞ்சம் முறைகேட்டுக்காக ஒரு கணம் ஸ்தம்பித்துக்கொண்டது.

``துளசி, நீ ஏன் வந்தாய்?''

``நீங்கள் அழைத்தீர்கள். வந்தேன்.”

ஆனால், அந்த ஆசிரியன் பறையர் வகுப்பு. அவளோ உயர்சாதி. அவளை அண்ணன்மார் வீட்டுச்சிறை வைக்கிறார்கள். அவள் தப்பி ஓடி வருகிறாள். ``வாருங்கள் நாம் கண்காணாத பாழ்வெளிக்குப் போய்விடுவோம்.” நான் மௌனமாக நின்றேன். தொலைவில் விளக்கொளி எங்களைத் தேடி வரும் அரவம் கேட்டது. அவள் மிரண்டாள்.

``இப்போதாவது வாயைத் திறந்து முடிவைச் சொல்லிவிடுங்கள். நாம் ஓடிவிடுவோம். அதோ என் அண்ணன்மார் விளக்கொளி நம்மைச் சுட்டி வருகிறது.” நான் மௌனமாக நின்றேன்.

ஆ.மாதவன்என் கையை விட்டெறிந்துவிட்டு, அவள் இருளை மூடிக்கொண்டு ஓடியே போனாள். மௌனம் என்னை மீட்டபோது விடிந்திருந்தது.

ஆனால், விடிந்ததா?

அண்ணன்மார் நான்கு பேரும் அவளை அடித்தே கொன்றுபோடுகிறார்கள்.

இனி வேதாந்தியைப்போல உதட்டளவில் சிரித்துக் காட்டிக்கொண்டு பைத்தியமாகத் திரியவேண்டியதுதான்!' என்று கதையை முடிக்கிறார்.

இன்று நடக்கும் ஆணவக்கொலைகள்போல இந்தக் கதையில் ஓர் ஆணவக்கொலைதான் நடக்கிறது. ஆனால், கதை அதன் மீது அழுத்தம் தராமல் காதலின் மீது அழுத்தம் தருகிறது. துளசி - உன் முடிவுக்குக் குளம் போன்ற குட்டையான என் மௌனமே எமன் என்று திசை திரும்புகிறது. மேற்சொன்ன மூன்று கதைகளிலுமே முறையற்ற பாலியல் உந்துதல் கதைக்கருவாக அமைந்துள்ளது.

ஆ.மாதவனின் கதைகளின் பொதுவான உள்ளடக்கமாக இந்த வரம்புமீறல் இருக்கிறது. அவர் கடைத்தெரு மக்களையும் அடித்தட்டு மக்களையும் பற்றித்தான் பேசுகிறார். ஆனால், அவர்களின் வாழ்வியல் அவரின் கதைக்களனாவதில்லை. கதையின் போக்கில் அது வெளிப்படும்.

இதுபற்றி அவருடைய நேர்காணலில் பதில் கூறுகிறார்.

``உங்கள் படைப்புகளில் நீங்கள் பாலியல் ஒழுக்கத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்று ஓர் அபிப்பிராயம் உள்ளதே. அதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்? பாலியல் மீறல்களை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா என்ன?''

``பாலியல் ஒழுக்கம் என்பது, முதலில் குறிப்பிட்டதுபோல ஒரு தடுப்புக்கல் மட்டுமே. உணர்ச்சிச் சக்கரம் உருண்டு செல்லும் மானிட உலகில் அதற்கு ஒரு தேவை உள்ளது. ஆனால், அந்தத் தடுப்புக்கல்லை எறிபவர்களை, அதாவது சந்தைவெளி மாந்தர்களை, எட்ட நின்று பார்த்து நயமாக எழுதிக் கட்டுவதை நான் இலக்கியத்தில் ஒரு பகுதியாகக்கொண்டிருக்கிறேன். அவர்களின் உலகம் அப்படிப்பட்டதுதான். அங்கே அந்தக் கல் இல்லை.

உண்மையில் பாலியல் காரியங்கள் அனைத்துமே `ஒழுக்கம்’ என்ற வரைமுறைக்கு அப்பாற்பட்டவைதானே. ஒழுக்கம்கூட நாமே சுயநலமாக வகுத்துக்கொண்ட நியாயங்களாயிற்றே. ஆடை அணிந்தால் ஒழுக்கம். `நிர்வாணம்’ என்பது ஒழுக்கமின்மை. ஆனால், ஆடை அணியாத நிர்வாணம் மனிதனுக்கு மானசீகமாக வேண்டும்தான். அந்த அவலம் சமூக ஆட்டங்களாக நடத்தப்படுவதை `இப்பிடி இருக்கிறது’ என்று, கொஞ்சம் மெல்லிய கலைப்பால் சேர்த்து குவளையில் ஊற்றிவைக்கிறேன். அவ்வளவே! குற்றம் காண்பவர்கள் உண்மையில் தாகம்கொண்டவர்கள். மறைவாக அருந்திக்கொள்பவர்கள். ஆக, நான் சித்திரம் வரைகிறேன். தவிர தத்துவம் உபதேசிக்க வரவில்லை.''

இதுதான் அவரும் அவர் எழுத்தும் நிற்கும் இடம்.

ஜி.நாகராஜன் அழுத்தமாகத் தீட்டிய புழக்கடை வாழ்க்கையை இவர் மெல்லிதாகத் தீட்டியிருக்கிரார் என்று சொல்லத் தோன்றுகிறது. கடைத்தெருவில் மூட்டை தூக்குபவர்கள், பிச்சைக்காரர்கள், வேசிகள், தெருப்பொறுக்கிகள், சிறுதொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்க்கையைத்தான் அவர் தீட்டியிருக்கிறார். திருவனந்தபுரத்தின் சாலைத்தெருவில் அமைந்த செல்வி ஸ்டோர்ஸ் என்னும் கடையில் அமர்ந்தபடி அவர் நம்மை நோக்கிப் பேசுகிறார். உள்ளதை உள்ளபடி எந்தப் பக்கமும் சார்புநிலை எடுக்காமல் எழுதிச்செல்கிறார்.

இடதுசாரிகள் அவரைப் புறக்கணித்ததாக நாஞ்சில்நாடன் முன்னுரையில் பேசினாலும் அவர் அப்படி நினைக்கவில்லை.

``தமிழக முற்போக்கு முகாம் உங்களை கவனிக்கவில்லையா? இயல்புவாதம் அவர்களுக்கு உகந்த அழகியலாயிற்றே?''

``தோழர் ப.ஜீவானந்தத்தை ஆசிரியராகக்கொண்டு நடந்து வந்த `ஜனசக்தி' நாளிதழின் மாத ஏடு `தாமரை'க்கு அப்போது தி.க.சிவசங்கரன் பொறுப்பாசிரியராக இருந்தார். `பாச்சி' கதையைப் பாராட்டி அவருக்கே உரித்தான அஞ்சலட்டைக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததுடன் தாமரை வருட மலருக்குக் கதை ஒன்று அனுப்ப வேண்டியும் கேட்டிருந்தார்.

தாமரை வருட நிறைவு சிறுகதை மலரில் எனது கதை, `பதினாலு முறி’ சிறப்புக் குறிப்புரையுடன் வெளிவந்தது. பிறகு, தாமரையின் ஒவ்வொரு மலரிலும் எனது கதை தவறாது இடம்பெற்றது. மலையாளமும் தமிழுமான சாலை வட்டார மொழியும் கலாசாரப் பழக்கங்களும்கொண்ட தமிழ் மக்களின் அகண்ட வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு தொடர்ந்து எழுத `தீபம்', `தாமரை' இலக்கிய இதழ்கள் எனக்கு மிகமிக உதவின.

அவர் தொடக்கத்தில் திராவிட இயக்கம் மற்றும் தி.மு.க-வால் மனக்கிளர்ச்சி அடைந்து திராவிட இயக்க இதழ்களில்தாம் ஆரம்பகாலக் கதைகளை வெளியிட்டார். ``நான் நிறைய வாசிக்கவும் நல்ல நூல்களை வாசிக்கவும் திராவிட அறிவு இயக்கமே காரணம். தமிழகத்தில், திராவிட கழகத்திலிருந்து பிரிந்து 1949-ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் புதிய எழுச்சியோடு தோன்றியபோது அதன் தலைவர்கள் அண்ணா, மு.க.நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, என்.வி.என்., தில்லை வில்லாளன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சஞ்சிகை தொடங்கி நடத்திவந்தனர். `திராவிட நாடு', `திராவிடன்’, `போர்வாள்’ போன்றவை.

இதற்கெல்லாம் புறம்பாகக் கட்டுரை, கதை மட்டுமாக நிரப்பிக்கொண்டு, தனி இலக்கியப் பத்தரிகையாக முருக சுந்தரத்தின் `பொன்னி' வெளிவந்தது. கடைப் பையன்களிடையே வாசிப்பு நண்பர்களாகக் கிடைத்த ஏ.நடராஜன் ஏ.கிருஷ்ணன் போன்றோர் பொன்னியையும் திராவிடன் வார ஏட்டையும் தவறாமல் படிக்கத் தந்து உதவினர். அங்கிருந்துதான் என் நல்ல வாசிப்புக்கான தொடக்கம்.” பிறகு சுந்தர ராமசாமி ஒரு கூட்டத்தில் அவருக்கு விடுத்த சவாலை எதிர்கொள்ளவே திராவிட இயக்க எழுத்திலிருந்து மாறி யதார்த்தவாத எழுத்துக்கு வந்தார்.

ஆ.மாதவன்

திராவிட இயக்கப் பின்னணி அவருக்கு இருந்தபோதும் காலப்போக்கில் அவர் பகுத்தறிவுப் பாதையில் பயணிக்காமல் கடவுள் நம்பிக்கைகொண்டவராகவும், இந்து மதத்தின் மீது மதிப்பும் பற்றும்கொண்டவராகவும் ஆகிறார். ``இன்று எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் `கடவுள்களிடம்' நம்பிக்கை இல்லை. கடவுள் நிறைவு என ஒன்று இல்லையென்றால் கலைகள் இல்லை. கல்மிஷமற்ற நல்ல நினைவுகளை மெள்ள மெள்ளத் தாலாட்ட இறை நம்பிக்கை வேண்டும். கடவுள் எனும் புலப்படாத பிரமாண்டத்தின் அரவணைப்பை மனித மனதின் நுண்ணுணர்வால்தான் உணர முடியும். அந்த உணர்வின் சாட்சிக்கூடம்தான் கோயில்கள், சிற்பங்கள்… நாட்டியம், இசை எல்லாம். இசையை மட்டும் ரசித்து உணர்ந்தாலே கடவுளாகக் காண்பதுபோலத்தான். நான் அந்த ஸ்பரிச சுகத்தை `தெய்விகம்' என்று உணர்பவன். அதனால் நான் கலைஞன் என்று தன்னைத்தானே அகந்தைகொள்வதுண்டு. சூழ்நிலைகளை சற்றே மறந்து விகாரமற்று நிற்க கோயில் சன்னதி பல நேரங்களில் உதவுவதுண்டு.

இந்து மதம் எனக்குப் பிடிக்கும். கிறிஸ்தவத்தின் மதச் சான்றுகளில் அதிகம் உள்புகுந்து பாராததினாலோ என்னமோ, அந்த மதம் பற்றி அதிகம் தெரியாது. இஸ்லாம் மதத்தில் நிறைய கட்டுப்பாடுகள்.

வீணாக ஏன் வேறு பாதை பற்றிச் சிந்திக்க வேண்டும்? இந்து மதம் ஆழமான தத்துவச்சரடும்கொண்டது. வேதம் – வேதாந்தம் என. விருப்பு-வெறுப்பு-சந்தோஷம்-சாயுஜ்யம் எல்லாமே இந்து மதத்தில் உள்ளன. இந்துமதம் அணைப்புக்கு அன்னையாக, சுகப்புக்குக் கன்னியாக, பற்றுக்குப் பிள்ளையாக, வாழ்வுக்குத் தென்றலாக உள்ளது. வேறென்ன… நிறைய சொல்லலாம்.”

இப்படி ஓர் ஆன்மிகராக இருந்தாலும் தன் படைப்புகளில் அவர் ஒருபோதும் ஒழுக்கத்தைப் போதிப்பதில்லை. வாழ்க்கையும் மனிதர்களும் என்னவாக இருக்கிறார்களோ அன்னவாகவே தன் படைப்புகளில் வைத்துவிட்டு, வாசகனுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றுகொள்கிறார்.

ஆ.மாதவன்

அவருடைய சிறுகதைகளில் மிகவும் பேசப்படும் கதைகளாக `பாச்சி' மற்றும் `எட்டாவது நாள்' இரண்டையும் குறிப்பிடலாம்.

`பாச்சி செத்துப்போனாள். வாழ்வு அநித்யம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பாச்சி செத்துப்போவாள் என்று கனவில்கூட நினைத்ததில்லை. மனதால் தீண்டிக்கூடப் பார்க்காத ஒரு பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. பாச்சி செத்துப்போனாள்! நாணுவுக்கு எல்லாவற்றின் பேரிலும் வெறுப்பாக வந்தது, ``சே! என்ன வேண்டிக் கிடக்கிறது? போச்சு, எல்லாம்போச்சு!”

கடைத்தெரு முழுக்க சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவில்லை. தேங்காய்மட்டை ஏற்றிய வண்டிகள், எறும்புப் பட்டாளம்போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன. சக்கரங்கள், அச்சுக்கோலில் டக்டக்கென மோதிக்கொள்ளும் சத்தம் தொலைவரை நீளக் கேட்கிறது.  சாலையில் கடைகள் ஒன்றுமே திறக்கவில்லை. அப்புவின் புட்டுக்கடை மட்டும் திறந்து, வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுப் போனான் பையன். உள்ளே, சாயரத்தட்டில் கரண்டி மோதும் சத்தமும், பாய்லரின் உள்ளே கரி வெடிக்கும் சத்தமும் கேட்கின்றன.

பாச்சி செத்துப்போன விஷயம் யாருக்காவது தெரிந்திருக்குமோ? தெரிந்திருந்தாலும் யாருக்கென்ன? நாணுவுக்கு, மனசு இருப்புக்கொள்ளவில்லை. நேற்று இரவு இரண்டாவது ஆட்டம் சினிமாவிட்டு ஆள்கள் போகும்போதெல்லாம்கூட பாச்சி சுறுசுறுப்போடுதான் இருந்தாள். அதற்குப் பிறகு என்ன நடந்துவிட்டது? சந்து பொந்துகளிலிருந்து ஏதாவது விஷப்பூச்சி தீண்டியிருக்குமோ? ராத்திரி லாரியிலோ மோட்டாரிலோ அடிபட்டிருக்குமோ என்றால் அதுக்கான ஊமைக்காயம்கூடப் பாச்சியின் உடலில் இல்லை. என்ன மறிமாயமோ! விடியற்காலை பார்த்தபோது பாச்சி காலைப் பரப்பி, நாக்கையும் துருத்திக்கொண்டு செத்துக்கிடக்கிறது. பாச்சி என்கிற தெருநாய் மீது கடைத்தெரு மனிதனான நாணுகொள்ளும் வாஞ்சையே பாச்சிக் கதை.

அவருடைய கதைகளில் உச்சம் எனக் கொண்டாடப்படும் `எட்டாவது நாள்' சற்றே பெரிய கதை. `இதை `தாமரை'யில் 45 பக்கங்களுக்குமேல் ஒரே இதழில் வெளியிட்டு, என்னையும் அறிமுகப்படுத்தி வட்டார இலக்கிய உலகின் மற்றொரு வாசலையும் திறந்துவைத்தார் தி.க.சிவசங்கரன்' என்று குறிப்பிடுகிறார் ஆ.மாதவன்.

ஆ.மாதவன்

`சாளைப்பட்டாணி' எனப் பிறரால் அழைக்கப்படும் பட்டாணி திடகாத்திரமான உழைப்பாளி. ``எறச்சிக்கடையிலே நின்னேன். சாயக்கடையிலே நின்னேன். ஆரஞ்சு விக்கப்போனேன்” என்று அவனே கூறுவதுபோல உடல் உழைப்புச் சார்ந்து அவன் செய்யாத தொழில் இல்லை. 20 வயதுக்குமேல் அவன் செய்யாத சேட்டைகளும் இல்லை.

அவனுடைய வலதுகை உணர்ச்சியற்றுப்போய் கழுத்தில் தொட்டில் கட்டித் தொங்கப்போட்டுக்கொண்டு அலையும் இடத்தில் கதை தொடங்குகிறது. ``எட்டு நாள்களுக்குச் சாராயம் குடிக்காமல் தினசரி வந்து ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். எட்டாவது நாள்தான் தெரியும். அவனுடைய கை தப்புமா அல்லது வெட்டி எடுத்துவிட வேண்டுமா என்பது'' என டாக்டர் சொல்லியிருக்கிறார். இப்போது அவனுக்கு 50 வயசுக்கிட்ட இருக்கும். இந்த முப்பது வருடத்தில் இந்தக் கையாலே அவன் செய்யாத பாவ காரியங்கள் இல்லை. எத்தனை பெண்களை இந்தக் கையால் நாசம் செய்திருக்கிறான்.

``சம்பக்கடையில் உள்ள எறச்சிக் கடையிலே வெட்டுக்காரனா இருக்கும்போ எத்தரையோ எச்சி நாய்களை, எறச்சி வெட்டும் கத்தியினாலே முதுகிலேயும் வாலிலேயும் வெட்டியிட்டுண்டும், அப்போ அது ஒரு ஜாலி…வெட்டுக்கொண்டதும் நாயி குய்யோன்னு விளிச்சுக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஓடிப்போறதைக் காண தமாஷாயிருக்கும். சம்பைக்கடைக்கு மீன் வாங்க வரும் பொம்பளைங்கள் எல்லாம் ``சாம துரோகி, கை புழுத்துப்போகும். வாயில்லாத ஜீவனை இப்பிடியா வெட்டுவது?” என்று கூப்பாடுபோடுவார்கள்.

கடைவீதியை தன் மிரட்டலுக்குக் கட்டுப்படும்படி வைத்திருந்தான். ஆனால், இப்போதோ உடல் தளர்ந்துபோச்சு. போகிற வருகிற சின்னப்பயல்கள் எல்லாம் அவனைக் கண்டதும் உற்சாகமாகிக் கல்லெடுத்து எறிகிறார்கள். எட்டாவது நாள் வரட்டும். தன் ஒருகை போனாலும் இன்னொரு கையை வைத்து இந்தப் பொடியன்களை என்ன செய்கிறேன் பார் என்று கறுவிக்கொண்டு எட்டு நாளையும் கடத்துகிறான்.

``ராத்திரி படுத்தா ஒறக்கமில்லை. பகல் ஒறக்கமில்லை. கண்ணும் அடச்சிக்கிட்டு படுத்திருந்தா, பழைய சங்கதிகள் நெஞ்சிலே உருண்டு உருண்டு வருது. கஞ்சி திளைச்சு மறியிது மாதிரி ஒவ்வொண்ணும் பொங்கிப்பொங்கி வருது. ஆருக்கோ கதை சொல்வது மாதிரி மனசுக்கேகூடப் பேசிக்கொண்டு இருந்தா கொஞ்சம் சொகமிருக்கு.”

ஆ.மாதவன்

இப்படித் தனக்குள் அவன் பேசிக்கொள்ளும் பேச்சின் மூலமே நாம் அவன் கதையை அறிகிறோம். அவன் செய்த காரியங்கள் பற்றி எந்தக் குற்ற உணர்வும் அவனுக்கு இல்லை. ஆ.மாதவனும் அவனைக் குற்றவாளியாக்கிய சமூகமே என்கிற பாணியில் எந்த வசனம் பேசவும் இல்லை. அவனுக்காகக் கண்ணீர் சிந்தவும் இல்லை. நம்மைக் கண்ணீர் சிந்தவைக்கவும் இல்லை. உள்ளதை உள்ளபடி வரைந்துகொண்டு போகிறார். ``அவன் செய்யும் அனைத்துக் குற்றங்களிலும் என் உள்ளம் திளைப்பதை நான் கண்டுகொண்டதே அந்தக் கதை எனக்கு அளித்த அனுபவம் என்று 25 ஆண்டுகளுக்கு முன் உணர்ந்தேன். நான் யாரென எனக்குக் காட்டிய படைப்புகளில் ஒன்று அது” என்று இந்தக் கதை குறித்து ஆ.மாதவன் கூறுகிறார்.

பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டுபோகும் இந்த நாள்களில் ஆண் மனதின் இருண்ட பகுதிகளை ஆராய்வது மிக மிகத் தேவை. அத்தகைய ஆய்வுக்கு வளமான ஆதாரங்களை ஆ.மாதவனின் சிறுகதைகள் நமக்குத் தருகின்றன. புறச்சூழலின் தாக்கம் குறித்து அவர் கதைகளில் பேசாவிட்டாலும் நம்மால் உய்த்துணர முடிகிறது.

ஆரம்பத்தில் தி.மு.க சார்புடையவராக இருந்தாலும் பிறகு எந்த அரசியல் சார்பும் அற்றவராக மாறிவிட்டார். அரசியலே எனக்குப் பிடிக்காது என்கிற நிலைக்கு வந்துவிட்டார். திராவிட இயக்கம் பற்றிய அவர் கூற்று முக்கியமானது. ``ஆரம்பத்தில் அது புதிய பகுத்தறிவை எளிய மக்களிடம் பரப்பத் தோன்றிய ஒரு பெரிய இயக்கமாக இருந்தது. நல்ல தமிழ்ப் பேச, எழுத, தெளிவான கருத்தைச் சொல்ல, மக்களின் மூடநம்பிக்கையை விரட்ட, பகுத்தறிவு பாதையில் பயணிக்க, சுயநலமற்ற தலைவர்கள் முன்னின்று நடத்திய காலகட்டம் அது. என் இளமைக்காலத்தில் அது என்னை ஈர்த்தது. எளிய கல்வி கற்ற எனக்கு, பல மேல்நாட்டு அறிஞர்களின் அறிமுகமும் இலக்கியத் தேடலும் அங்கிருந்து வந்ததே! அழுக்கும் அவலமும் ஏறிப்போன இந்தக் காலத்தில் அவர்கள் நடந்த பாதையில் இப்போது நடப்பதில்லை” இது ஒரு முக்கியமான விமர்சனமும்கூட.

80 வயதைக் கடந்து இன்று திருவனந்தபுரத்தில் வாழ்ந்துவரும் ஆ.மாதவன், சிறுகதை வரலாற்றில் மறுக்க முடியாத சாதனைகள் படைத்தவர்.

``படைப்புலகில் நான் ஒரு போதகனல்ல. என் வழி கலையைக் கலை உணர்வுடன், யதார்த்தப் பரிவுடன், விளம்புவது மட்டுமே என்பது உண்மை!” - ஆ.மாதவன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement