வெளியிடப்பட்ட நேரம்: 09:03 (13/06/2018)

கடைசி தொடர்பு:09:03 (13/06/2018)

அவசியமில்லை அட்டெஸ்டேஷன்... அலட்சிய அரசு அலுவலகங்கள்!

அவசியமில்லை அட்டெஸ்டேஷன்... அலட்சிய அரசு அலுவலகங்கள்!

`பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களின் ஜெராக்ஸ் பதிவில் (gazetted officer attested) அட்டெஸ்டேஷன் வேண்டும் என்கின்றனர். சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்டேஷன் வேண்டி அரசு அலுவலகங்களுக்குச் சென்றால், அங்கு உள்ள அதிகாரிகள் எங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று எங்களை அலைக்கழிக்கின்றனர். சில அதிகாரிகள், 2014-ம் ஆண்டு முதல் self-attested இருந்தால் போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் gazetted officer attested தேவையில்லை என்று திருப்பி அனுப்புகின்றனர். உண்மையில் அட்டெஸ்டேஷன் அவசியமா அவசியமில்லையா என்பதுகுறித்த தகவல் கிடைத்தால் உதவியாக இருக்கும்' என விகடனுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர் வாசகர்கள். இதுகுறித்து அரசு அலுவலகங்களில் விசாரித்தோம்... 

அட்டெஸ்டேஷன்

வருமானவரித் துறையின் மூத்த அதிகாரியான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, ``பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு என எதற்கு விண்ணப்பித்தாலும், சான்றிதழ் நகல்களுக்கு அட்டெஸ்டேஷன் (சான்றொப்பம்) பெற்று அனுப்புவது வழக்கம். 2014-ம் ஆண்டு வரை, அட்டெஸ்டேஷன் அவசியம் என்ற முறை இருந்தது. இது காலம்காலமாகக் கடைப்பிடித்துவரும் வழக்கம் என்றாலும், இனி அட்டெஸ்டேஷன் அவசியமில்லை. இந்த விவரம், பிரதமரின் அலுவலக இணையதளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. (http://www.pmindia.gov.in/en/news_updates/pm-encourages-self-certification-in-place-of-affidavits-and-attestations-to-benefit-the-common-man). 

அட்டஸ்டேஷன் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்திஅட்டெஸ்டேஷன் முறை என்பது, நிர்வாக ஆணையில் வழக்கத்தின்வழியே கடைப்பிடிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று. இதற்கு என்றும் தனிச் சட்டம் கிடையாது. 1990-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஜெராக்ஸ் மெஷின் புழக்கத்தில் வருவதற்கு முன்பு, சான்றிதழ்களின் விவரங்களை டைப் செய்து அதை விண்ணப்பத்துடன் இணைக்கும் வழக்கம் இருந்தது. அப்போது டைப் செய்ததில் எந்தப் பிழையும் இல்லை என்பதற்கான சான்றொப்பமிடும் முறை (Attestation) இருந்தது. ஆனால், தற்போது ஜெராக்ஸ் மெஷின், மூலச்சான்றிதழை அப்படியே நகலேடுத்துத் தருகிறது. காலங்கள் மாறினாலும் இன்னமும் டைப்ரைட்டிங் காலத்தில்தான் அட்டெஸ்டேஷனுக்காக அல்லாடிக்கொண்டிருக்கிறோம். 

இதை மாற்றி அமைக்கும்விதத்தில், 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர், `சான்றொப்பமிடும் வழக்கத்தையும் நோட்டரி பப்ளிக்கிடம் உறுதிமொழி பத்திரங்கள் (Affidavits) பெறுவதையும் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, சுயசான்றொப்பமிடும் (Self Attestation) வழக்கத்தைக் கொண்டுவாருங்கள்' என்று அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, பிரதமரின் ஆலோசனையை ஏற்று மாநிலத் தலைமைச் செயலாளர்கள், துறைச்செயலர்கள் அனைவருக்கும் `அட்டெஸ்டேஷன் மற்றும் நோட்டரி பப்ளிக் உறுதிமொழி பத்திரங்கள் தேவையில்லை. சுயசான்றொப்பம் போதுமானது' என்ற சுற்றறிக்கையை அனுப்பியது. 

இதனால், இனி அலுவலகங்களுக்குச் சான்றொப்பம் பெற, அதிகாரிகளைச் சந்திக்கவேண்டிய அவசியமில்லை. சான்றொப்பமிடுவதற்காகக் கைக்கட்டி நிற்பதும், அதற்கு பணம் கொடுப்பதும் தேவையில்லாதவை. உங்களுடைய புகைப்படங்களுக்கு இன்னொருவர் சான்றிதழ் வழங்குவதும் பயனற்றது. தற்போது பத்திரப்பதிவுகள் போன்றவற்றுக்குக் கேட்கப்படும் நோட்டரி பப்ளிக் முறையும் ஒழிக்கப்பட்டிருக்கிறது" என்றவர், 

``பள்ளியில் சேரும்போதோ அல்லது கல்லூரியில் சேரும்போதோ மூலச்சான்றிதழைப் (Original Certificates) பார்த்துவிட்டுதான் சேர்த்துக்கொள்கிறார்கள். ஒருவர் மூலச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை மறைத்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். இதை நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் வலியுறுத்தியிருக்கிறது. விண்ணப்பம் பெறும் கல்வி நிறுவனத்தினர் பொதுமக்களின் கஷ்டங்களை உணர்ந்தும் தேவையில்லாத வழக்கத்தைக் கைவிடுவதும் நல்லது" என்றார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

பிரதமர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை அரசு அலுவலகங்கள் நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம். ஆனால், இன்னமும் அரசு அலுவலகங்களும் கல்வி நிறுவனங்களும் கண்மூடிக்கொண்டு அட்டெஸ்டேஷன் கேட்டுப் பெறுவதை என்ன சொல்வது எனத் தெரியவில்லை. 


டிரெண்டிங் @ விகடன்