Published:Updated:

''செருப்பில்லாம நடக்குற ஸ்கூல் குழந்தைகளை உடனே ஏத்திப்பேன்'' - ஆட்டோ ஓட்டுநர் ராஜீ அசோக்

''செருப்பில்லாம நடக்குற ஸ்கூல் குழந்தைகளை உடனே ஏத்திப்பேன்'' - ஆட்டோ ஓட்டுநர் ராஜீ அசோக்
''செருப்பில்லாம நடக்குற ஸ்கூல் குழந்தைகளை உடனே ஏத்திப்பேன்'' - ஆட்டோ ஓட்டுநர் ராஜீ அசோக்

காலை நேரம்... சென்னை மாநகரின் பரபரப்புடன் சேர்ந்து அவரும் இயங்குகிறார். அவரின் முறுக்கேற்றும் கரங்களில் சென்னையின் மூலை, முடுக்குகளுக்கு விரைகிறது அந்த ஆட்டோ. தன் பயணாளர்களை பத்திரமாக அவரவர் இடங்களில் கொண்டுசேர்க்கிறார். 40 வயதிலும் சற்றும் சோர்வடையாமல் சுழல்கிறார் ராஜீ அசோக்.

``நாங்க முதல்ல கோயம்புத்தூர்ல இருந்தோம். என் கணவர் அங்கே ஆட்டோ ஓட்டிட்டிருந்தார். நான் ஒரு கம்பெனியில் குறைஞ்ச சம்பளத்துக்கு வேலைக்கு போயிட்டிருந்தேன். பெருசா வருமானம் இல்லே. குடும்பச் சூழலை சமாளிக்க சென்னைக்கு வந்தோம். இங்கேயும் அவர் ஆட்டோதான் ஓட்டிட்டிருந்தார். அவருக்கு உதவியா நாமும் ஏதாவது பண்ணனும்னு, `நானும் ஆட்டோ ஓட்டுறேங்க'னு சொன்னேன். அவர் கோயம்புத்தூர்ல ஆட்டோ ஓட்டிட்டிருந்த அனுபவத்தைவெச்சு, 'எல்லோரும் நல்ல மனிதசங்கதான். உனக்கு விருப்பம் இருந்தா ஓட்டும்மா'னு சொன்னார். ஒன்றரை மணி நேரம்தான் சொல்லிக்கொடுத்தார். அப்புறம் நானாகவே ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்'' என்கிற ராஜீவுக்கு, ஆட்டோ தோழனாகி 19 ஆண்டுகள் ஆகிறது.

``ஆரம்பத்துல ஆட்டோ ஓட்டும்போது ஒவ்வொரு மனுஷங்களும் எப்படிப்பட்டவங்கன்னு புரிஞ்சுக்க சிரமப்பட்டேன். சிலர் காசு கொடுக்காமல் நைசா ஏமாத்திட்டுப் போயிருக்காங்க. ஒருநாள் நைட்டு 10 மணி இருக்கும். சென்ட்ரலுக்கு ஒரு சவாரி ஏத்திட்டு போய்ட்டிருந்தேன். அந்த ஆளு என்கிட்ட `உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணுங்க யாராச்சும் இருக்கா?'னு கேட்டான். கோபம் வந்திருச்சு. 'அதெல்லாம் தெரியாதுங்க'னு சொல்லிட்டு பதற்றமா ஓட்ட ஆரம்பிச்சேன். அந்த ஆளு விடலை. 'எவ்வளவு காசு வேணும்னா தரேன். நீ வர்றியா?'னு கேட்டாம்மா. எந்தப் பதிலும் சொல்லாமல் சிக்னலில் நின்னுட்டிருந்த போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுத்தேன். அப்போ அந்த போலீஸ்காரர், ``ராத்திரி 10 மணிக்கு மேலே ஏம்மா வண்டி ஓட்டுறே?'னு கேட்டார். `சென்னைக்கு வெளியே ராத்திரியில் ஓட்ட மாட்டோம். சிட்டிக்குள்ளேதானேனு ஓட்டறோம் சார்'னு சொல்லிட்டு வந்தேன். பசங்களைப் படிக்கவைக்கிறதுக்காக இந்தக் கஷ்டங்களை பொறுத்துக்கிட்டேன். இப்போ என் பொண்ணுக்குக் கல்யாணமாகி, ஒரு குழந்தை இருக்கு. பையன் காலேஜ் படிக்கிறான். என்னோடு ஆட்டோ ஓட்டும் பொண்ணுங்களின் பசங்க அவங்க அம்மா ஆட்டோ ஓட்டுறதைக் கேவலமா நினைக்கிறாங்க. ஆனால், என் பசங்க என்னைப் பெருமையா கொண்டாடுவாங்கம்மா. இப்பவும் குடும்பச்சூழல் பெருசா மாறிடலை. பேரன் வந்தும் ஆட்டோ ஓட்டிட்டே இருக்கேன்'' என்றவரின் பேச்சில் உழைப்பின் வலி தெரிந்தது.

``முன்னாடியெல்லாம் காலையில் அஞ்சு மணிக்கே சவாரியை ஆரம்பிச்சிருவேன். இப்போ உடம்பு அந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது இல்லேம்மா. 9 மணிக்கு மேலேதான் ஆரம்பிக்கிறேன். ஒருநாள் கோடம்பாக்கத்திலிருந்து ஜெமினிக்கு வந்துட்டிருக்கும்போது ஒருத்தருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. எல்லோரும் சுற்றி நின்னு வேடிக்கை பார்த்துட்டிருந்தாங்க. நான் ஆட்டோவில் இருந்த சவாரியை இறக்கிவிட்டுட்டு, அடிபட்டவரை துக்கிப் போட்டுட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அவர் வீட்டுக்கும் தகவல் சொன்னேன். அவர் பெயர் அன்பரசன். பேங்க் மேனஜராம். அன்னைக்கு அவருடைய பர்ஸ்ல நிறைய பணம் இருந்துச்சு. அதையெல்லாத்தையும் பத்திரமா ஒப்படைச்சுட்டு நடுராத்திரி வீட்டுக்குப் போனேன். அப்புறம், அவர் கோமாவில் தனியார் மருத்துவமனையில் இருந்தார். அடிக்கடி பார்த்துட்டு வருவேன். அதுக்கப்புறம் என்ன ஆனார்ன்னு தெரியலைம்மா. அவர் எப்படி இருக்காரோன்னு இப்பவும் நினைக்கிறதுண்டு. சவாரி இல்லாத நேரங்களில், ஸ்கூல் முடிஞ்சு செருப்புகூட இல்லாமல் நடந்துபோகும் குழந்தைகளைப் பார்த்தால், உடனே ஆட்டோவில் ஏத்திட்டு கொண்டுபோய் விடுவேன். காசு, பணம் இல்லாட்டியும் நம்மால் முடிஞ்ச சின்ன உதவி'' எனப் புன்னகைக்கும் ராஜீ முகத்தில் அன்பு ஒளிர்கிறது.

``இப்போ ஓலோ ஆட்டோ ஓட்டுறதால் இந்த நம்பரைவெச்சும் சிலர் தொந்தரவு பண்ணுவாங்க. ஆரம்பத்தில் அதிர்ச்சியா இருந்துச்சு. இப்போ, அவங்களை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு நாளைக்கு 700 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். ஒருநாள் ஒண்ணுமே இருக்காது. சென்னையில் நிறைய வித்தியாசமான மனுஷங்க இருக்காங்க. ஆரம்பத்துல யார் எப்படின்னு கணிக்க முடியாது. அனுபவம் நிறைய கத்துக்கொடுத்திருக்கு. ஆக்ஸிடெண்ட் ஆனவங்களுக்கு உதவி பண்ணும்போது, 'உனக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலை'னு அட்வைஸ் பண்ணுவாங்க. நல்லதோ, கெட்டதோ இந்த உசுரு மத்தவங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவணும். இல்லைன்னா மனுஷனா பொறந்ததுக்கு என்ன அர்த்தம் இருக்கு'' என்கிற ராஜீயின் நல்ல ஆன்மாவின் வெளிச்சம், அந்த ஆகாயத்தை மிஞ்சியதை உணர்ந்தேன்.