Published:Updated:

``ஒரு நாளைக்கு 20 ஆர்டர் அசால்ட்டா பண்ணுவேன்!” - #FoodApps -ம் டெலிவரி பாய்ஸின் பிரச்னைகளும்

``ஒரு நாளைக்கு 20 ஆர்டர் அசால்ட்டா பண்ணுவேன்!” - #FoodApps -ம் டெலிவரி பாய்ஸின் பிரச்னைகளும்
``ஒரு நாளைக்கு 20 ஆர்டர் அசால்ட்டா பண்ணுவேன்!” - #FoodApps -ம் டெலிவரி பாய்ஸின் பிரச்னைகளும்

சென்னை போன்ற நகரங்களில் ’சிக்னல் ஜம்ப்’ என்பது சாதாரணமான ஒன்று. சில நாள்களாக இதைக் கவனித்தபோது ஒன்று தோன்றியது. டெலிவரி பாய்ஸ் தான் சிக்னல் பச்சையானதும் முதலில் முறுக்கிக்கோண்டெ செல்லும் ஆட்களாக இருக்கிறார்கள். எண்ணிகை அடிப்படையில் அவர்கள் அதிகமாகிக் கொண்டிருப்பதும், எல்லோரும் (ஒரு நிறுவனத்தில்) ஒரே நிறச் சீருடை அணிந்திருப்பதும் என் கவனத்தை ஈர்த்ததற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குத்தான் போகுமிடத்துக்கு வேகமாக போய்ச்சேர வேண்டிய அவசியமும் இருப்பதை நாம் மறுக்க முடியாது.

நேற்று இரவு ஒரு டெலிவரி பாயின் பைக் சறுக்கியதைப் பார்த்தபோது அவர்களைப் பற்றிய கவலை இன்னும் அதிகமானது. அந்த பைக் விழுந்த இடத்தில் வேறு யாராவது விழுவார்களா என்பது சந்தேகமே. அப்படி ஓரிடம். ஆளே இல்லாத, அகலமான சாலைதான். ஆனால், அங்கே வேகமாகத் திரும்பி விழுந்திருந்தார். அவருக்குக் கைகொடுத்துத் தூக்கி, ஓரமாக அமர வைத்தேன். உடம்பில் எங்கே அடிப்பட்டது என்பதைக்கூட கவனிக்காமல் ஆர்டரைக் கொடுக்க ஓடினார். 

``ஒரு நாளைக்கு 20 ஆர்டர் அசால்ட்டா பண்ணுவேன்!” - #FoodApps -ம் டெலிவரி பாய்ஸின் பிரச்னைகளும்

டெலிவரி ஆப்ஸ். வளர்ந்து வரும் முக்கியமான துறை இது. 10 ரூபாய் சமோசாவிலிருந்து 10 லட்ச ரூபாய் சூப்பர் கணினி வரை வீட்டுக்கே வந்து தருகிறார்கள். வெளியாட்களுக்கு, அவர்கள் வாகனங்களுக்கு அனுமதியில்லை எனச் சொல்லும் gated community கூட பீட்ஸா கொண்டு வருபவரை எந்தக் கேள்வியும் கேட்காமல் உள்ளே அனுப்பி வைக்கிறது. யாரையும் நம்பி கேட்ட திறக்காதம்மா” என எச்சரித்த குரல்கள் கூட இப்போது கால் செய்து ``மொபைல் ஆர்டர் பண்ணேன். எடுத்துட்டு வந்திருக்கான். வாங்கி வைச்சுடும்மா” என சொல்கின்றன. 

ஒரு பொருளை வாங்குவது இப்போது இணையம் மூலமே என்றானபின், அந்த மொத்த விநியோகச் சங்கிலியில் மனித முகங்களையே காண்பதில்லை. ஸ்டார் ரேட்டிங் கூட மிஷின் மூலம்தான். அந்தச் சங்கிலியில் நாம் பார்க்கும் ஒரே முகம் டெலிவரி பாய்ஸ். அந்தப் பொருள் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தால் டெலிவரி பாய் நமக்கு வரம் தரும் கடவுள். இல்லையேல், சாபம் தரும் சாத்தான். டெலிவரி பாய்ஸ் என்பவர்கள் இனி சாதாரணமான ஆட்கள் இல்லையென்பதை ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். 

நமக்காக இப்படி ‘ஓட்டி ஓட்டி’ உழைக்கும் இவர்கள் எப்படி இருக்கிறார்கள், வேலை செளகர்யமாக இருக்கிறதா, செளகர்யம் அடுத்தது. பாதுகாப்பானதாக இருக்கிறதா? நிச்சயம் இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை என்பதுதான்.

Food delivery apps- ல் பணிபுரியும் பலரும் இளைஞர்கள். 25 வயதுக்குட்பட்டவர்கள். நிறைய பேர் படிப்பவர்கள். அவர்களுக்குத் தேவை பார்ட் டைம் வேலை. நல்ல சம்பளம். அதிகாரம் செய்யாத முதலாளி. இளரத்தம் என்பதால் எந்த வேகமும் அவர்களுக்கு பொருட்டில்லை.  அடுத்த முறை உங்களுக்கு ஆப்பிள் ஜூஸையோ பிரியாணியையோ  கொண்டு வருபவர்களிடம் கேட்டுப்பாருங்கள். நான் அப்படி ஒருவரிடம் கேட்டேன். அவர் பெயர் ராஜ். ஒரு ஃபுட் டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

``ஒரு பிரச்னையும் இல்லை சார். ஒரு டெலிவரிக்கு 25-ல இருந்து 40 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். நிறைய ஆர்டர் பண்ணா இன்சென்டிவ் உண்டு. மறக்காம ரேட்டிங் கொடுத்துடுங்க சார். உங்களுக்காக சூடு ஆறாம பறந்து கொண்டு வந்திருக்கேன்” என்றபடி உண்மையிலே பறக்கப் பார்த்தார். அவரிடம் நான் நிருபர் என்பதைச் சொன்னதும் நின்று, பல தகவல்களைப் பகிர்ந்தார்.

``ஒரு நாளைக்கு 20 ஆர்டர் அசால்ட்டா பண்ணுவேன்!” - #FoodApps -ம் டெலிவரி பாய்ஸின் பிரச்னைகளும்

தினமும் 10 முதல் 12 மணி நேரம் வாகனம் ஓட்டுகிறார்கள். 20 டெலிவரிக்கு மேல் செய்தால் ஊக்கத்தொகை உண்டு என்பதால் முடிந்தவரை வேகமாக செல்கிறார்கள். பல சமயம் உணவு விடுதிகளில் தாமதமாக்கி விடுகிறார்களாம். அதனால், அந்த நேரத்தையும் சரிசெய்ய கூடுதல் வேகமாக வண்டி ஓட்டுகிறார்கள். மைலேஜ் வர வேண்டுமென்பதற்காக எடை குறைவான பைக்குகளையே தேர்வு செய்கிறார்கள். இதனால் முதுகுவலி வருவது அதிகம். தினமும் இவர்கள் நண்பர்கள் வட்டத்திலே யாராவது ஒருவர் கீழே விழுந்துவிடுவது நடக்கிறது. ஆனால், பெரிய காயங்கள் ஏதுமில்லை என்பதால் அதை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இவர்கள் யாருக்கும் இன்ஷூரன்ஸ் கூட தரப்படுவதில்லை. 

டெலிவரி பாய் வேலையில் பெரிய எதிர்காலம் எல்லாம் இல்லை. படிக்கும்போதோ அல்லது படிப்பு முடிந்து நல்ல வேலை கிடைக்கும் வரையோதான் அதிகமானோர் இந்த வேலைக்கு வருகிறார்கள். நிரந்தரமாக இதையே செய்ய வேண்டுமென பெரும்பாலானோர் நினைப்பதில்லை. அதனாலே, இந்தத் துறையிலிருப்பவர்களுக்குத் தேவைப்படும் பயிற்சிகளைத் தரக்கூட யாரும் யோசிப்பதில்லை. 

நிறைய ஃபுட் டெலிவரி நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் முன்னணியில் இருக்கும் ஸ்விகியின் கணக்குப்படி ஒரு நாளைக்கு 1,80,000 ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. ஒருவர் சராசரியாக 15 டெலிவரி செய்தால் கூட 12000 பேர் தேவை. இது 2017 கணக்கு. இப்போது இந்த எண்ணிக்கை நிச்சயம் இரட்டிப்பு ஆகியிருக்கும். இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு என்பதும் முக்கியமான ஒன்று. அதே சமயம் அவர்கள் பாதுகாப்பும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இவர்கள் 100% வேலை நேரத்தையும் வண்டி ஓட்டியே கழிப்பவர்கள். வயதில் சிறியவர்கள். வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள். அவர்களுக்கு பாதுகாப்பின் அவசியத்தை அந்தந்த நிறுவனங்கள் அறிவுறுத்துவது அவசியம்.

நான் அதைத்தான் ராஜிடம் சொல்லி வழியனுப்பினேன்.