வருங்காலத்தில் ஒருநாளுக்கு 25 மணி நேரம் ஆகிவிடுமாம்..! - காரணம் சொல்லும் ஆய்வு

``தலைக்கு மேல வேலை.. ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் இல்லை?" - இப்படி சீன் போடுபவர்கள் பலர். இந்த அங்கலாய்ப்பு நிஜமாவதற்கு வருங்காலத்தில் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் புவியியல் விஞ்ஞானிகள். அதாவது பூமியில் நாள்கள் நீள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்கிறது புதிய ஆய்வு.

பூமி ஆய்வு

பல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் நிலவும் நேர மாறுபாட்டிற்கும் நாள்கள் நீள்வதற்கும் காரணமாக நிலவு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். அதாவது நிலவுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு அதிகரிக்க அதிகரிக்கப் பூமியின் சுழற்சி வேகம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்போது உள்ள தொலைவில் நிலவு இருக்கவில்லை என்றும், அப்போது ஒரு நாள் என்பது 18 மணி 41 நிமிடங்களைக் கொண்டிருந்ததாகவும் ஆனால் தற்போது 24 மணி நேரம் கொண்டிருப்பதாகவும் வருங்காலத்தில் இது அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

(தற்போது நாம் பயன்படுத்துகின்ற இந்த 24 மணிநேரமானது, பண்டைய எகிப்தியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. சிக்கலான, அதே வேளையில் சுவாரஸ்யமான கணிதமுறைகளால் இது உருவாக்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் எகிப்தியர்கள் நாளொன்றினை மூன்று பகுதிகளாகப் பிரித்தனர். காலை 10 மணிநேரம் கொண்டும், இரவு 12 மணிநேரம் கொண்டும், அந்திவேளை 2 மணிநேரம் கொண்டும் பிரித்தனர்.)

அமெரிக்காவின், விஸ்கான்சின்- மேடிசன் பல்கலைக்கழகத்தினைச் (University of Wisconsin-Madison) சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் (Stephen Meyers) மற்றும் அவரது குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வினைக் குறித்த தகவல்கள் Proceedings of the National Academy of Sciences  என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. அதில் சுழன்று ஸ்கேட்டிங் செய்யும் நபருக்கும் (Spinning figure skater) அவருடைய கைகளின் அசைவுகளுக்கும் இடையேயுள்ள தொடர்பினை விளக்குவதன் மூலம், பூமியின் சுழற்சிக்கும் மற்றும் நிலவின் இருப்பிடத்திற்கும் இடையேயுள்ள தொடர்பினை எளிமையாக விளக்கியிருக்கிறார் பேராசிரியர் மேயர்ஸ். 

சுழன்று ஸ்கேட்டிங் செய்யும் ஒருவர், சுழற்சியின் வேகத்தினைக் குறைப்பதற்கு தன்னுடைய கைகள் இரண்டையும் உடலிலிருந்து வெளிப்புறமாக நீட்டுவார். (பதினொன்றாம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் கோண உந்தம் (angular momentum) பற்றி படித்தது ஞாபகம் வருகிறதா... அதே கான்செப்ட் தான்) அதே போலதான் பூமியின் சுழற்சி வேகமும். நிலவானது அதிலிருந்து தொலைவில் செல்ல செல்ல குறைகிறது என்கிறார் பேராசிரியர்.

angular momentum

பொதுவாக பூமியின் சுழற்சியானது, விண்வெளியிலுள்ள பல்வேறு பொருள்களின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்படுகிறது. இதில் நிலவினைத் தவிர பிற கோள்களும் (planets) அடங்கும். இந்த அனைத்துப் பொருள்களும்தாம் பூமியின் சுழற்சி மாறுபாட்டினை நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன. சூரியக் குடும்பத்தில் காணப்படும் பல்வேறு பொருள்களின் இயக்கங்களால்தாம் கடந்த பல கோடி ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் நாளொன்றின் நேர நிர்ணயமானது பல்வேறு மாறுதலுக்குள்ளாகி இருக்கிறது. இந்த விண்வெளி பொருள்களின் இயக்கங்களில் ஏற்படும் எந்தவொரு சிறிய மாற்றமும் பூமியின் காலநேர நிர்ணயத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கும். தற்போது நிலவு பூமியிலிருந்து வருடத்துக்கு 3.82 சென்டி மீட்டர் என்ற அளவில் விலகிச் செல்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேற்சொன்ன இந்தப் புவியின் காலநிலை சுழற்சியினைப் (Climate cycles) பற்றிய கருத்தாக்கங்களானது, 90 மில்லியன் ஆண்டுகள் பழைமையான பாறை ஒன்றின் படிவுகளில் (sediments) நடத்தப்பட்ட ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது. அதிலிருந்து பேராசிரியர் மேயர்ஸ் மற்றும் அவரது குழுவினர், சிக்கலான இந்தச் சூரியக் குடும்பத்தினைப் பற்றிய பல புதிய தகவல்களைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் மேயர்ஸ் கூறுகையில், ஆரம்பத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், அந்தப் பாறையின் படிமங்களின் முற்காலப் பதிவுகளைப் பற்றிய தேடல் தொடர தொடர முடிவுகளின் நம்பகத்தன்மை குறைவது போல உணர்ந்ததாகவும், பின்பு பூமி சுழற்சியின் அச்சு (axis of rotation) மற்றும் அதன் சுற்றுவட்டப்பாதை வடிவத்தின் திசையிலுள்ள புவியியல் ரீதியிலான மாறுபாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாறையின் படிமங்களை ஆய்வு செய்த போதே, நம்பத்தகுந்த மதிப்பீடுகளைப் பெற முடிந்ததாகவும் தெரிவித்தார். 
மேலும் இந்த ஆய்வின் நோக்கம், ``நாளொன்றின் நேரமாற்றத்தினைப் பற்றியது மட்டுமல்ல., நிலவுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தூரத்தினை பற்றியும்தான். இந்த ஆராய்ச்சியின் முடிவு புவியியல் துறையில் மற்றுமொரு மகத்தான சாதனையாக அமையும்” என்கிறார் பேராசிரியர் மேயர்ஸ்.

ஒரு மணி நேரம் கூடுதலாக உங்களுக்குக் கிடைத்தால் அந்த நேரத்தை எதற்கு செலவழிப்பீர்கள்? தூங்கவா, வேலை செய்யவா, பொழுதுபோக்கவா?

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!