அமெரிக்காவின் புதிய ஹீரோ... 23 மாடிக் கட்டடத்தில் அசால்ட்டாக ஏறிய ரக்கூன்!

மின்னஸோடா நகரில் 2 மைல்களுக்குள் குறைந்தது 12 ரக்கூன்களைப் பார்க்கலாம். அந்த நகரில் இவற்றைப் பார்ப்பது வெகுசாதாரணமான ஒன்றே. ஆனால், இந்த ரக்கூன் மட்டும் இன்று மின்னஸோடா முழுவதும் பேசுபொருளாகப் புகழ்பெறுவதற்குக் காரணம்

``காலை 8.30 மணியிருக்கும். நாங்கள் கட்டட வாசலைச் சுத்தம் செய்துகொண்டிருந்தோம். கட்டடத்தின் தரைதளச் சுவர் இடைவெளியில் ஏதோ பழுப்புநிறக் குவியலாகத் தெரிந்தது. என்னவாக இருக்குமென்று நாங்கள் சில நொடிகள் கவனித்தோம். சில அசைவுகள் தெரிந்தவுடன் ஏதோ பூனைதான் படுத்திருக்கிறதென்று நினைத்தோம். அது நன்றாக எழுந்த பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. அது ஒரு ரக்கூன்."

கண்களில் தெரிந்த மகிழ்ச்சி உதடுகளுக்குத் தொற்றிக் கொள்ளாமல் முடிந்தவரை முயன்றவாறு அந்த 23 மாடிக் கட்டடத்தில் தொற்றியேறிய ரக்கூனைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார் அந்தக் கட்டடத்தின் துப்புரவுப் பணியாளர்.

ராக்கெட்

``கார்டியன்ஸ் ஆஃப் தி காலக்ஸி" என்ற படத்தைப் பார்த்தவர்களுக்கு ரக்கூனைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்கள் தவிர விலங்குகள்மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு அதைப் பற்றித் தெரிந்திருக்கும். அந்தப் படத்தில் ராக்கெட் என்ற பெயரில் சேட்டைகள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளோடு ஹீரோவாக ஒரு ரக்கூன் வலம்வரும். நேற்று மின்னஸோடா நகரிலிருக்கும் ஒரு 23 மாடி வணிகக் கட்டடத்தில் ஏறிய இந்த ரக்கூனையும் அதைப்போலவே ட்விட்டரில் மக்கள் மின்னஸோடாவின் ஹீரோவாகச் சித்திரித்து டிரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


மின்னஸோடா நகரில் 2 மைல்களுக்குள் குறைந்தது 12 ரக்கூன்களைப் பார்க்கலாம். அந்த நகரில் இவற்றைப் பார்ப்பது வெகுசாதாரணமான ஒன்றே. ஆனால், இந்த ரக்கூன் மட்டும் இன்று மின்னஸோடா முழுவதும் பேசுபொருளாகப் புகழ்பெறுவதற்குக் காரணம் சற்று வித்தியாசமானது. காலை 8.30 மணிக்குத் தரைதளச் சுவரின் சந்துகளில் காணப்பட்டதைக் கீழே இறக்கிவிட அது அமர்ந்திருந்த பகுதிக்கு நேராகக் குச்சியொன்றைச் சாய்த்து வைத்தனர். அது எப்படி அந்த இடத்துக்கு ஏறியதென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் எப்படியாவது அதைக் கீழே இறக்கிவிட்டாக வேண்டுமென்று அவர்கள் முனைந்தனர். நல்ல நோக்கத்தோடு செய்த முயற்சியென்று அதற்குத் தெரியுமா! அதுவே அதற்கு பயத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏணிபோல் சாய்த்து வைக்கப்பட்ட நீண்ட தடிக்கு எதிர்புறமாகச் சுவர் சந்துக்குள் ஓடத்தொடங்கியது. வேறு திசையில் கீழே இறங்க முயன்றபோது வேடிக்கை பார்க்க மக்கள் கூடிவிட்டார்கள். அதைக் கண்டு மேலும் மிரண்டுபோன ரக்கூன் பயத்தில் கட்டடத்தின் மேல்நோக்கி ஏறத்தொடங்கியது. ஒவ்வொரு மாடியாக வளைந்து தூண்களாக நீண்டிருந்த சுவரில் மரமேறுவதைப் போல் ஏறிக் கடந்துள்ளது. ஒவ்வொரு தளத்திலும் ஜன்னல் ஓரங்களில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டே தொற்றிச் சென்றுகொண்டிருந்தது. நேரம் செல்ல செல்ல அதன் சாகசத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடத் தொடங்கிவிட்டது.


மரங்களில் ஆங்காங்கே சில விரிசல்கள் ஏற்பட்டிருக்கும். மேலும், மரத்தின் பரப்பு மிகவும் சொரசொரப்பாகவே இருக்கும். அதனால் எவ்வளவு பெரிய மரமாகவே இருந்தாலும் அவற்றில் ஏறுவது ரக்கூன்களுக்குச் சர்வசாதாரணமான விஷயம். ஆனால், எந்தப் பிடிப்புமே இல்லாத சுவரில் மரமேறுவதைப் போல் அதுவும் 23 மாடிகள் ஏறிய இந்த ரக்கூன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதன் (13-6-2018) காலை 8.30 மணிக்குத் தொடங்கிய அதன் போராட்டம் மறுநாள் அதிகாலை 3.00 மணிக்குத்தான் முடிவடைந்துள்ளது.
சுவர் சந்துக்குள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்ததைக் காப்பாற்றுகிறேன் என்று சிலபேர் முயல, அதற்கு பயந்து அது கீழேயிறங்க வேறு முயற்சிகளில் ஈடுபடவே அதற்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் தடையாக இருந்துள்ளார்கள். வேறு என்னதான் செய்வதென்று சிந்தித்த ரக்கூன் இயற்கை தனக்குத் தந்துள்ள திறனான மரமேறுவதையே பின்பற்ற முடிவுசெய்தது. இந்தக் கட்டடத்தையே மரமாக நினைத்து ஏறிவிடுவோமே என்று நினைத்திருக்கலாம். நின்று நிதானித்து மிகப் பொறுமையாக அது ஏறியதிலிருந்தே மிகவும் கடினமான பணியில் அது தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

-ரக்கூன்-)

Photo Courtesy: Calvin Booker/ Twitter

நாள் முழுவதும் உணவில்லாமல் இத்தகைய கடினமான பணியைச் செய்துகாட்டியது தனது திறனை மக்களிடம் நிரூபிப்பதற்காகவல்ல, ``உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமே" என்ற பயத்தால். ஆங்காங்கே சில இடங்களில் வழுக்கினாலும் அந்த ரக்கூன் பாதங்களை உறுதியாகப் பதித்துத் தொற்றியேற வேண்டுமென்றும், அதன் உயிருக்கு ஆபத்தேதும் விளைந்துவிடக் கூடாதென்றும் பல பேர் ட்விட்டரில் தங்கள் ஆதரவுகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொண்டேயிருந்தார்கள். மொத்த மின்னஸோடாவும் ரக்கூனைக் கவனித்துக் கொண்டிருந்துள்ளது. அதுவோ தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மிகுந்த பிரயாசையுடன் கட்டடத்தைத் தொற்றிக்கொண்டிருந்தது.

கூண்டுக்குள் ரக்கூன்

Photo Courtesy: UBS Plazar/ Twitter

அதிகாலை 3.00 மணிக்கு 23 வது மாடியை அடைந்தது. அது முடிக்கப்போகும் தருவாய்க்காக 20 மணிநேரங்களாக வனத்துறை அதிகாரிகள் ஒரு கூண்டுக்குள் பூனை உணவு வைத்துவிட்டுக் காத்துக்கொண்டிருந்தார்கள். ஏறி முடித்துக் களைத்துப்போய் கால்களைப் பரப்பிப் படுத்திவிட்ட ரக்கூன் உணவு இருப்பதைக் கண்டவுடன் நாள் முழுக்கவிருந்த பசியில் கூண்டுக்குள் சென்று சிக்கிவிட்டது. கூண்டுக்குள் அடைபட்டதைக்கூடக் கவனிக்கவியலாத அளவுக்கு அயர்ந்துபோயிருந்தது. தன் உணவு முழுவதையும் உண்டுமுடித்துச் சுற்றி நடப்பதைச் சிறிது தெம்போடு கவனிக்கும்போதே தான் கூண்டுக்குள் அடைபட்டிருப்பதை அதனால் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்குள் அதை நகர்ப்புறத்திலிருந்து வெளியே கொண்டு சென்றுவிட்டார்கள். நகர்ப்புறத்துக்கு வெளியே கூண்டைத் திறந்து சுதந்திரமாக விடப்பட்ட ரக்கூன், தான் தற்போது மின்னஸோடாவின் ஹீரோ என்பதைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் சுதந்திரமாகக் காட்டுக்குள் ஓடியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!