வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (15/06/2018)

கடைசி தொடர்பு:10:40 (16/06/2018)

1,000 ஆண்டு பழைய பயோபப் மரங்களின் சாவுக்கு யார் காரணம்?

ஆப்பிரிக்க பயோபப் மரப்பகுதியின் பொந்து போன்ற இடைவெளி சாதாரண மரங்களைப் போன்று கிடையாது. அதற்குள் இரண்டிற்கும் மேற்பட்ட மனிதர்கள் நுழைந்து இளைப்பாறலாம். ஜிம்ப்பாவே வின் ஒரு பழைமையான பயோபப் மரத்தில் 40க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் உள்ளே இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் இன்னொரு மரத்தின் உள்ளே மது விடுதியே செயல்படுகிறது.

1,000 ஆண்டு பழைய பயோபப் மரங்களின் சாவுக்கு யார் காரணம்?

பூமிக்கும் மனிதர்களுக்குமான பந்தத்தைவிட மரங்களுக்கும் பூமிக்குமான பந்தம் அதிகம். உலகில் முதலில் தோன்றிய உயிரி இப்போது இருக்கிறதா என்றால் இல்லைதான். ஆனால், இப்போதும் மிகப்பழைமையான மரங்கள் வானுயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆயிரம், இரண்டாயிரம் என நம் கண்கள் விரியும் அளவுக்கு அவை பழைமையானவை. அழிந்துபோன டைனோசர்களையும் மாமூத்களையும் திரைப்படத்தில் உருவாக்கிப் பார்க்கும் நாம் நிஜத்தில் இருக்கும் பழைமையான உயிரினங்களைப் பற்றிப் பெரிதாக அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் சுழற்சியிலேயே 1000 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் பழைமையான மரங்களை நாம் பாதுகாக்கா விட்டாலும் அவை அழிவதற்கு மறைமுகமாகக் கூட நாம் காரணமாக இருக்கக் கூடாது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழைமையான மரங்கள் மர்மமான முறையில் மரணிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மனிதர்களின் தலையீடோ செயற்கையான பாதிப்போ அன்றி அவை இயற்கையாகவே மரணிக்கின்றன. ஆனால், அதற்கான காரணங்கள்தாம் மர்மமாக இருக்கின்றன. ஆப்பிரிக்காவில் காணப்படும் அந்த மரங்களின் பெயர் பயோபப் ( baobab tree). 

பயோபப் என்றழைக்கப்படும் இந்த மரங்கள் மடகாஸ்கர், ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதிகளின் பெயர்களுடன் இணைத்து பயோபப் மரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக ஆப்பிரிக்க பயோபப் மரங்கள். ஐந்திலிருந்து முப்பது மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. மரத்தின் விட்டம் ஏறக்குறைய 7 மீட்டரிலிருந்து 11 மீட்டர் வரை இருக்கும். இவற்றை வைத்தே பயோபப் மரங்களின் உயரத்தையும் அகலத்தையும் புரிந்துகொள்ள முடியும். வானுயர்ந்து நிற்கும் இந்த மரங்கள் ஆப்பிரிக்காவின் சவான்னா பகுதிகளில் அதிகம் காணலாம். இந்த மரப்பகுதியில் இருக்கும் இடைவெளியானது பயோபப் மரமுடனான அனுபவத்தை இன்னும் சுவாரசியமானதாக மாற்றக்கூடியது. ஏனென்றால், அந்த இடைவெளி சாதாரண மரங்களின் இடைவெளியைப் போன்று கிடையாது. அதற்குள் இரண்டுக்கும் மேற்பட்ட மனிதர்கள் நுழைந்து இளைப்பாறலாம். ஜிம்பாப்வேவின் ஒரு பழைமையான பயோபப் மரத்தில் 40க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் உள்ளே இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் இன்னொரு மரத்தின் உள்ளே மது விடுதியே செயல்படுகிறது. மரத்தில் கிளைகள் கூட மிக உயரத்தில்தான் ஆரம்பிக்கின்றன. அதனால் ஏறக்குறையா ராட்சத உருளையாகக் காட்சி தரக்கூடியவை பயோபப் மரங்கள். 

ஆப்பிரிக்க பயோபப் மரங்கள்

ஆப்பிரிக்க பயோபப் மரங்களானது பூக்கக்கூடிய(ஆஞ்சியோஸ்பெர்ம்) மரங்களிலேயே மிகப்பெரியதும் மிக நீண்ட நாள்களும் வாழக்கூடியது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஆப்பிரிக்க பயோபப் மரங்கள் எவ்வாறு நீண்ட காலம் வாழ்கின்றன? தண்ணீரை எப்படிச் சேமிக்கின்றன? மேலும் இராட்சச உருவத்தில் வளர்வதற்கு எது காரணம்? இப்படி பல கேள்விகளுக்கு விடைதேடும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போதுதான் நிறைய மரங்கள் மர்மமான முறையில் மரணித்தது தெரியவந்துள்ளது. ரோமானியாவைச் சேர்ந்த பேபிஸ்-பொல்யாய் பல்கலைக்கழகத்தின் (Babeș-Bolyai University) பேராசிரியர்களும் மாணவர்களும் இணைந்து இந்த ஆய்வைச் செய்துள்ளனர். கடந்த வாரம் தங்களுடைய ஆய்வு முடிவை `நேச்சர் ப்ளான்ட்ஸ்' எனப்படும் இதழில் வெளியிட்ட ஆய்வாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். ``இது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது, வாழ்நாளிலேயே துயரமான அனுபவம் இதுதான். நூற்றாண்டுகளைக் கடந்த ஆயிரம் வயதுடைய மரங்கள் எல்லாம் ஒரேடியாக மரணித்துள்ளன" என வருத்தம் தெரிவிக்கிறார் ஆய்வாளர் அட்ரியன் பட்ருட் (Adrian Patrut). 2005 லிருந்து 2017 வரை இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். இதுவரை 60க்கும் மேற்பட்ட மிகப்பெரிய, மிகப்பழைமையான மரங்களை ஆய்வு செய்துள்ளனர். ஆய்வு செய்துகொண்டிருக்கும்வேலையில்தான் மரங்கள் அழிந்த நிகழ்வும் நடந்துள்ளன. 

ஜிம்பாப்வேயில் பங்கீ மரம் என்றழைக்கப்பட்ட 2500 ஆண்டுகள் பழைமையான மரம் 2010/11 வாக்கில் மெதுவாகச் செயலிழந்து சரிந்தது. தென்னாப்பிரிக்காவில் உள்ள சாப்மேன் என்றழைக்கப்பட்ட 1400 ஆண்டுகள் பழைமையான பயோபப் மரம் கடந்த 2016 ல் மரணித்தது. இவை வெறும் சிறு எடுத்துக்காட்டுகள்தாம். இப்படிக் கடந்த 12 வருடங்களில் மிகப்பழைமையான பயோபப் மரங்களில் பதிமூன்றுக்கு ஒன்பதும் மிகப்பெரிய மரங்களில் ஆறில் ஐந்தும் மரணித்துள்ளன அல்லது மரத்தின் பாகங்கள் செயலிழந்து கவிழ்ந்துள்ளன. அவையெல்லாமே 1100லிருந்து 2500 ஆண்டுகள் வயதுடையவை. இதனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு நிகழ்வு என்று பயத்துடன் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். சரிந்து மரித்துக் கிடக்கும் மரங்களெல்லாம் பார்ப்பதற்கு பேருந்து போன்று இருக்கின்றன. தீடிரென மரங்கள் மரணிப்பதற்கு காரணங்கள் இன்னும் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை. குறுகிய காலத்தில் அதிக மரங்கள் மரணித்திருப்பதற்குக் காலநிலை மாற்றமும் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

ஆப்பிரிக்க பயோபப் மரங்கள்

பயோபப் மரமானது 1,20,000 லிட்டர் தண்ணீர் வரை சேமிக்கக் கூடியது. அதனால் எந்த வறட்சியிலும் தாங்கக் கூடியது. எளிதில் இந்த மரத்தை வெட்டிச் சாய்க்க முடியாது. ஒருவேளை இதன் மரப்பட்டை உதிர்ந்தால் கூட காலப்போக்கில் அதனைப் புதுப்பித்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. ஆனால், மரணித்த ஒரு மரத்தின் உடற்பகுதியை ஆய்வு செய்த போது70-80% இருக்க வேண்டிய தண்ணீர் 40% மட்டுமே இருந்துள்ளது. பேராசிரியர் அட்ரியன் பட்ருட் கூறும்பொழுது,``எல்நினோவின் தாக்கம் ஆப்பிரிக்காவின் வறட்சிக்குக் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் கடந்த 20 வருடங்களாக மெதுமெதுவாக வறட்சி ஆட்கொண்டுள்ளது. முக்கியமாக ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்குப் பகுதியின் நிலை இன்னும் வறட்சியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்கிறார். மேலும் காலநிலை மாற்றத்தால் கார்பன் வெளியீடு அதிகமாவதும் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என்கின்றனர். மேலும், இன்னும் நிறைய ஆய்வுகள் செய்வதன் மூலம் உண்மை நிலையைக் கண்டறிய முடியும் என்கின்றனர். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பொறுத்தவரை நம்மிடையே அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை வீட்டுக்கொரு மரம் வளருங்கள் என்பதுதான். ஆனால், அவை செயல்படுத்தப்படுவதுதாம் இல்லை. போதாதக்குறைக்கு இருக்கின்ற மரங்களையும் காடுகளையும் அழிப்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது. சாமானிய மக்களுடைய நிலங்களையும் பல்வேறு திட்டங்களைச் சொல்லி பிடுங்கி விடுகிறார்கள். தொழில் வளர்ச்சி தேவைதான் என்றாலும் உலக நாடுகள் பலவும் சுற்றுச்சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டுதான் தொழில் வளர்ச்சியைச் செய்ய வேண்டும். ஏனென்றால், உலகம் முழுவதுக்குமான காலநிலை மாற்றத்தை எல்லோரும்தான் எதிர்கொள்ள வேண்டும். 
 


டிரெண்டிங் @ விகடன்