வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (16/06/2018)

கடைசி தொடர்பு:10:26 (16/06/2018)

எல்லோரும் ரசித்த கால்பந்து போட்டியை இவர்கள் மட்டும் ரசிக்க முடியாமல் போனது ஏன்? #RUSKSA

உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் ரசித்த, ரஷ்யா - சவூதி அரேபியா போட்டியை சிலரால் மட்டும் முழுமையாக ரசிக்க முடியவில்லை. ஏன்?

எல்லோரும் ரசித்த கால்பந்து போட்டியை இவர்கள் மட்டும் ரசிக்க முடியாமல் போனது ஏன்? #RUSKSA

ஷ்யாவா? சவூதி அரேபியாவா? 

அன்றைய போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த கோடானகோடி ரசிகர்களின் மனதில் இருந்த ஒரே கேள்வி இதுதான். 2018 கால்பந்து உலகக்கோப்பையின் முதல் போட்டி. எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்? இறுதியில் சவூதி அரேபியாவை 5 கோல்களுடன் வீழ்த்தி, தன் நாட்டு ரசிகர்களுக்குவெற்றியைப் பதிலாகத் தந்தது ரஷ்யா. 

இந்தப் போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ட்விட்டர் முழுக்க #RUSKSA-தான் ட்ரெண்ட். விழாவின் தொடக்கவிழா, புடினின் உரை, போட்டியின் முதல் கோல், சவூதியின் சொதப்பல் என அத்தனையையும் ட்விட்டர் டைம்லைனில் கொட்டித்தீர்த்தனர் ரசிகர்கள். இவையனைத்தும் கொண்டாட்ட மனநிலையில் வந்துவிழுந்த ட்வீட்கள். இதே நேரத்தில் வேறுவிதமான சில ட்வீட்களும் டைம்லைனில் வந்தன. அவையும் இதே கால்பந்துப் போட்டியைப் பற்றிதான்; ஆனால், அவற்றில் உற்சாகம் இல்லை. வருத்தமே இருந்தது. இதே ரஷ்யா - சவூதி அரேபியா வீரர்கள் பற்றிதான். ஆனால், அவர்களின் ஆட்டத்திறன் பற்றியல்ல; அவர்களின் ஆடை பற்றியது. அந்த ட்வீட்களுக்கு காரணம், Colour Blind. அதாவது, நிறக்குருடு.

உலகக்கோப்பை கால்பந்து போட்டி

என்ன சிக்கல்?

முதல் போட்டியில் களமாடிய ரஷ்யா மற்றும் சவூதி அரேபிய அணிகளின் சீருடைதான் அந்த ட்வீட்களுக்கு காரணம். அந்தப் போட்டியில் ரஷ்ய அணியின் ஜெர்சி வண்ணம், சிவப்பு. சவூதி அரேபியாவின் வண்ணம் பச்சை. இந்த இரண்டு நிறங்களுமே Red/Green நிறக்குருடு பிரச்னை உள்ளவர்கள் பிரித்தறிவது கடினம். அவர்களுக்கு இந்த நிறங்களில் வேறுபாடுகளே தெரியாது. எனவே, டி.வி-யில் போட்டியைக் காண்பவர்களுக்கு எது ரஷ்ய அணி, எது சவூதி என்றே தெரியாது. சில நிமிடங்கள் மிகவும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே அணிகளைப் பிரித்தறிய முடியும்.

இதுதான் அந்தப் போட்டியில் இருந்த சிக்கல். இதனால் போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே, இந்தப் பிரச்னை குறித்து நிறக்குருடு பாதிப்பு இருப்பவர்கள் ட்வீட் செய்யத் தொடங்கிவிட்டனர். இந்தச் சீருடையைத் தாண்டி, இன்னும் சில சிக்கல்களும் அவர்களுக்கு இருந்தன. போட்டி நடந்த மைதானத்தின் புல்தரை, பச்சை நிறமுடையது. இதேபோல சவூதி அணியின் சீருடையும் பச்சை நிறமுடையது. எனவே, வீரர்களைக் கண்டறிவது மிகவும் சிக்கலானது. 

உலகக்கோப்பை கால்பந்து 2018

இன்னொருபக்கம் ரஷ்ய அணி, சிவப்பு நிற ஜெர்சி அணிந்திருந்தாலும் வெள்ளை நிற ஷாட்ஸ் அணிந்திருந்தது. இதன்மூலம் ரஷ்ய வீரர்களை ஓரளவு அடையாளம் கண்டுகொள்ள முடியும் என நினைத்தனர். ஆனால், அதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. மேலும், மைதானத்தின் பக்கவாட்டு திரையில் வந்த சில விளம்பரங்களும் சிவப்பு நிறத்திலேயே இருந்தன. இது இன்னும் அவர்களுக்கு சிரமத்தை உண்டாக்கியது. இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடப்பவைதாம். ஆனால், உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் முதல் போட்டியே இப்படியாகிவிட்டது என்பதுதான் அந்த ரசிகர்களின் சோகம். இவர்களுக்கு ஏற்ப கால்பந்துப் போட்டிகளை வடிவமைக்க முடியாதா என்ன? அதுகுறித்து பார்ப்பதற்கு முன்னர் நிறக்குருடு குறித்து தெரிந்துகொள்வோம்.

நிறக்குருடு என்றால் என்ன?

நிறங்களைப் பிரித்தறியும் தன்மையை கண்கள் இழப்பதுதான் நிறக்குருடு எனப்படும். கண்களின் ரெட்டினா பகுதியில் இருக்கும் கூம்பு செல்கள்தான் நாம் நிறத்தைப் பிரித்தறிய காரணமாக இருப்பவை. சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களையும் இந்தக் கூம்பு செல்கள் பிரித்தறிந்து, நம் மூளைக்கு கட்டளைகளை அனுப்பும். இவற்றில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் நிறங்களைப் பிரித்தறிவதில் பிரச்னைகள் ஏற்படும். நிறக்குருடு என்பது நோய் கிடையாது. ஒரு குறைபாடு. பெரும்பாலும் பெற்றோர்களின் மரபுவழியாகவே குழந்தைகளுக்கு வந்தடைகிறது. இந்த நிறக்குருடு பிரச்னையானது பெரும்பாலும் X குரோமோசோம் மூலமாகத்தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும். ஒரு மனிதனின் DNA-வில் மொத்தம் 23 குரோமோசோம்கள் இருக்கும். இதில் 23-வது குரோமோசோம்தான் மனிதனின் பாலினத்தை முடிவுசெய்யும். DNA-வில் XY குரோமோசோம்கள் இருந்தால், அது ஆண். XX குரோமோசோம்கள் இருந்தால் அது பெண்.

colour blindness test

ஆண் செல்லைப் பொறுத்தவரைக்கும் XY என இரண்டே இரண்டு வகை குரோமோசோம்கள்தான் இருக்கும். இதில் X குரோமோசோம்கள் மூலம்தான் நிறக்குருடு பிரச்னையின் ஜீன் ஆனது, பெற்றோரிடம் இருந்து குழந்தைக்குக் கடத்தப்படும். எனவே, XY ஆகிய இரண்டில் ஒன்று பிரச்னை என்பதால் அந்த ஆண் குழந்தை நிறக்குருடு பிரச்னையால் பாதிக்கப்படும். ஆனால், பெண்களில் XX என இரண்டு X குரோமோசோம்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு X குரோமோசோம், நிறக்குருடு பிரச்னையைக் கொண்டது என்றாலும், இன்னொரு X குரோமோசோம் அந்தப் பிரச்னையை சமன்செய்துவிடும். எனவே, அந்தப் பெண் குழந்தைக்கு நிறக்குருடு பிரச்னை வராது. இதிலிருந்தே ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்திருக்கும். பெண்களோடு ஒப்பிடும்போது, ஆண்களுக்குத்தான் நிறக்குருடு பிரச்னை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதற்கு மேலே நாம் பார்த்த உயிரியல்தான் காரணம். கூம்பு செல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப்பொறுத்து நிறக்குருடுவின் பாதிப்பும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பொதுவாக இந்தப் பிரச்னையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 

1. Protanomaly - சிவப்பு நிறத்தை அறிவதில் சிக்கல் ஏற்படும்.

2. Deuteranomaly - பச்சை நிறத்தை அறிவதில் சிக்கல் ஏற்படும்.

3. Tritanomaly - நீல நிறத்தைப் பிரித்தறிவதில் சிக்கல் ஏற்படும். ஆனால், முந்தைய இரண்டோடு ஒப்பிடுகையில், இது அரிதாகத்தான் ஏற்படும்.

உலகில் சுமார் 8 சதவிகிதம் மக்கள் நிறக்குருடு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், இவர்களில் பெரும்பாலானோர்க்கு தங்களுக்கு நிறக்குருடு பிரச்னை இருப்பதே முழுவதுமாக தெரியாது. 

FIFA 2018

இவர்களுக்கான உலகம்!

இந்தக் குறைபாட்டை முழுமையாக குணப்படுத்த முடியாது என்பதால், வாழ்நாள் முழுவதும் இதை ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான் அவர்களுக்கு ஒரேவழி. ஆனால், இந்த உலகம் அதற்கு முழுமையாக ஒத்துழைப்பதில்லை. இதனால் அன்றாடப் பணிச்சூழலில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். நாம் தினசரி கடந்துவரும் டிராஃபிக் சிக்னலே இதற்கு சிறந்த உதாரணம். அதிலிருந்தும் சிவப்பு, பச்சை நிறங்களையே பெரும்பாலானோரால் பிரித்தறிய முடியாது (பிசாசு படம் ஞாபகம் வருதா?). நேற்றைக்கு முந்தையதினம் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியும் அப்படித்தான். பல இடங்களில் இவர்கள் சிரமங்களை எதிர்கொண்டாலும், பல்வேறு அரசாங்கங்களும், நிறுவனங்களும் இவர்களுக்கேற்ற சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகின்றன. உலகளவில் பிரபலமடைந்த நிறுவனங்கள் தங்கள் லோகோக்களை வடிவமைக்கும்போது, நிறக்குருடு பிரச்னை இருப்பவர்களும் பிரித்தறியும்படியே வடிவமைப்பார்கள். யாரேனும் ஒருவர், ஒரு இணையதளத்தை வடிவமைத்தால்கூட, அதன் UI-யும் நிறக்குருடு பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதுதான் அனைவருக்கும் ஏற்ற டிசைன் எனப்படும்.

அரசாங்கத்தின் அறிக்கைகள், டேட்டா போன்றவை வரைபடங்களின் மூலம் விளக்கப்படும்போது அவையும் நிறக்குருடு பிரச்னை இருப்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தாத நிறங்களைக் கொண்டதாகவே இருக்க வேண்டும். இப்படி நிறைய வழக்கங்கள் இவர்களுக்காகப் பின்பற்றப்படுகின்றன. இதற்கு சரியான உதாரணம் ஃபேஸ்புக். ஃபேஸ்புக்கின் லோகோவில் இருந்து, செட்டிங்க்ஸ் வரைக்கும் எல்லா ஆப்ஷன்களுமே நிறக்குருடு இருப்பவர்களுக்கும் ஏற்றதாகவே இருக்கும். கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்.

நிறக்குருடு பிரச்னை இருப்பவர்களுக்கு ஃபேஸ்புக்கின் வசதி

ஏதேனும் ஒரு பாக்ஸை நிரப்பாமல் போனால், சிவப்பு நிறத்தால் ஹைலைட் செய்து காட்டப்படுவது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை நிறக்குருடு பிரச்னை இருப்பவர்களால் தெரிந்துகொள்ள முடியுமா? எனவேதான், அருகிலேயே ஒரு ஆச்சர்யக்குறி! இதன்மூலம் அவர்களும் ஃபேஸ்புக் சொல்லவரும் விஷயத்தை உணர்ந்துகொள்ள முடியும். இது ஒரு சின்ன உதாரணம்தான். இதேபோல எத்தனையோ டெக்னிக்கல் உதாரணங்களை காட்டமுடியும். ஒருவேளை மார்க்கும் நிறக்குருடு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் என்பதாலோ என்னவோ ஃபேஸ்புக் முழுமையும் நிறக்குருடு குறைபாடுடையவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. 

ரஷ்யா VS சவூதி அரேபியா

இதேபோல FIFA-வும் உலகக்கோப்பையின் முதல் போட்டியின்போது நிறக்குருடு பிரச்னை இருப்பவர்களைப் பற்றி கொஞ்சம் யோசித்திருந்தால், இந்தப் பிரச்னையே வந்திருக்காது. ரஷ்யாவின் அதிரடியை அவர்களும் முழுவதுமாக ரசித்திருப்பார்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்