பாலைவனத்தில் நெல்.. துபாயில்... விவசாய நிலத்தில் மீத்தேன்... இந்தியாவில்!

பாலைவனத்தில் நெல்.. துபாயில்... விவசாய நிலத்தில் மீத்தேன்...  இந்தியாவில்!

க்கிய அரபு நாடுகளின் வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று பார்த்தால் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் துபாய் என்பது ஒரு சாதாரண பாலைவனப் பகுதி. அவ்வளவாக மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காத, பொருளாதார முக்கியத்துவம் இல்லாத ஓர் இடம். ஆனால், 1960-களின் பின்பாதியில் அங்கே எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. வெறும் பாலைவனங்கள் பொருளாதார மேம்பாட்டால் மாபெரும் கட்டடங்களாக மாறின, செல்வம் தாறுமாறாகக் குவியத் தொடங்கியது. இன்றைக்கு ஐக்கிய அரபு நாடுகளில் மட்டுமன்றி உலகம் முழுவதிலுமே செல்வச் செழிப்பான நகரமாக துபாய் கருதப்படுகிறது.

விவசாயத்துக்கு வாய்ப்பில்லாத நிலம்

பாலைவனம்

துபாய் மட்டுமல்ல ஐக்கிய அரபு நாடுகளின் நிலப்பரப்பு இயல்பான விவசாயத்துக்கு உகந்தது இல்லை. பெரும்பாலான பகுதி பாலைவனம்தான், அந்த நிலமும் அங்கு நிலவும் காலநிலையும் விவசாயத்துக்கு ஏற்றதாக இருக்காது. துபாயில் எண்ணெய் வளம் கண்டறியப்படுவதற்கு முன்னால் வரைக்கும் அங்கே மீன் பிடித்தல்தான் முக்கியமான தொழிலாக இருந்து வந்தது. ஆனால், பொருளாதாரத்தில் முன்னேறத் தொடங்கியவுடன்  விவசாயத்தின் தேவையை உணர்ந்த அரசு அதன் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தது. 1971-ம் ஆண்டில் அதற்கெனத் தனியாக ஒரு துறையை உருவாக்கி விவசாயத்தை ஊக்குவித்தது. துபாயில் விவசாயம் புதிதானது என்பதால் அங்கே பழைமையான நீர்ப்பாசன வசதிகள் எதுவும் கிடையாது. அந்தச் சிக்கலைச் சமாளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

விவசாயப் பண்ணை

அவற்றைப் பயன்படுத்தி விவசாயப் பண்ணைகளில் தக்காளி, மிளகாய், பீட்ரூட் மற்றும் சில கிழங்கு வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய முடிந்தது. விவசாயப் பண்ணைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், உரங்கள், கருவிகள் ஆகியவை மானிய விலையில் அளிக்கப்பட்டன. விவசாயத்தில் அரசு காட்டிய ஈடுபாட்டின் காரணமாக 1971-ம் ஆண்டில் வெறும் 4000 என்ற எண்ணிக்கையில் இருந்த விவசாயப் பண்ணைகளின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டில் 35,704-ஆக அதிகரித்திருந்தது. ஆனால், இவையெல்லாம் ஐக்கிய அரபு நாடுகளின் உணவுத் தேவையில் மிகச் சிறிய அளவில் மட்டுமே பூர்த்தி செய்ய உதவும். இன்றும் தனது உணவுப்பொருள்கள் தேவையில் 85 சதவிகிதம் இறக்குமதியைத்தான் ஐக்கிய அரபு நாடுகள் சார்ந்திருக்கின்றன.

சாதித்துக்காட்டிய சீன விஞ்ஞானிகள்

துபாய் அரசு அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பங்களால் காய்கறிகளையும், வேறு சில விளை பொருள்களையும் பயிர் செய்ய முடிந்ததே தவிர வேறு முக்கியப் பயிர்களை விளைவிக்க முடியவில்லை. முக்கியமாக நெல்லைப் பயிரிடுவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இருக்கவில்லை. ஏனென்றால் நெல் பயிரிடுவதற்கு உவர் நிலம், உவர்ப்பான நீர் உகந்தது இல்லை. அரபு நாடுகளில் நிலவும் காலநிலையும் அதற்கு மிக முக்கியமான காரணம். இந்நிலையில்தான் துபாயின் பாலைவன மண்ணில் நெல்லை விளைவித்து அதை அறுவடை செய்தும் காட்டியிருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள். அரசின் சார்பில் வந்த அழைப்பின்பேரில் சீனாவிலிருந்து விஞ்ஞானிகள் குழுவினர் துபாய்க்குச் சென்று இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.

நெல் நாற்றுகள்

கடந்த ஜனவரியில் 12-க்கும் மேற்பட்ட கலப்பின அரிசி வகைகளின் நாற்றுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு துபாயின் புறநகர் பகுதியில் சிறு சிறு பாகங்களாக நடப்பட்டன. பரிசோதனை முயற்சியாகப் பயிரிடப்பட்ட அந்த நெற்பயிர்கள் ஐந்து மாதத்துக்குப் பிறகு அறுவடைக்குத் தயாராக இருந்தன. இவை உப்பு நீரிலும் நன்றாக வளரும் திறன் படைத்தவை. இந்தியா உட்பட சில நாடுகளின் வல்லுநர்கள் இந்தப் பரிசோதனை திட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயிரிடப்பட்ட நெல் வகைகளிலிருந்து ஹெக்டேருக்கு ஆறு டன்னுக்கு மேல் விளைச்சலைத் தரக்கூடிய மூன்று வகைகளைத் தேர்ந்தெடுத்தனர். அதில் ஒரு ரகம் ஹெக்டேருக்கு 7.5 டன்னுக்கு மேல் விளைச்சலைத் தரக்கூடியது. இது உலக அளவில் சராசரியான 3 டன்/ஹெக்டேர் என்பதை விட அதிகம். இந்த வெற்றியே அவர்களை இந்தத் திட்டத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்வதற்கான ஊக்கத்தை அளித்திருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகள் உப்பு நீரை நன்னீராக மாற்றி நெல்லைப் பயிரிடும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் இருக்க, சீனாவோ வேலையை எளிதாக்கும் வகையில் உப்பு நீரிலும் வளரக்கூடிய நெல் பயிரை உருவாக்கும் ஆராய்ச்சியில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. சீனாவின் ``கலப்பு அரிசியின் தந்தை" என அழைக்கப்படும் யுவான் லாங்பிங் (Yuan Longping) கலப்பு அரிசி வகைகளை உருவாக்குவதில் உலக அளவில் புகழ் பெற்றவர்.

யுவான் லாங்பிங்

இவர் கண்டறிந்த கலப்பு நெற்பயிர் ரகங்கள்தாம் தற்பொழுது ஐக்கிய அரபு நாடுகளிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் நூறு ஹெக்டேர் பரப்பளவில் இந்த நெல் பயிரிடும் பரப்பு அதிகரிக்கப்பட்டுப் பரிசோதிக்கப்படும். அதன் பிறகு படிப்படியாக மற்ற இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். பகலில் வெப்பநிலை அதிகமாகவும், இரவில் வெப்பநிலை மிகக் குறைவாகவும் காணப்படும் இது மட்டுமல்லாமல் அவ்வப்போது புழுதிப்புயலும் வீசும். இது போன்ற சுற்றுப்புறச் சூழ்நிலைகளை எல்லாம் சமாளித்து இந்த நெற்பயிர் வளரும் திறனைக் கொண்டிருக்கிறது. வெப்பமண்டல பாலைவனப் பகுதிகளில் நெற்பயிரைப் பயிரிட எடுக்கப்பட்ட முயற்சிகளில் இது முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.

நெற்பயிர்

நெல் விவசாயம் என்றால் என்னவென்றே அறியாத ஒரு நாடு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் முயற்சியில் வெற்றியும் அடைந்திருக்கிறது. மாறாக தனது முதன்மைத் தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தியாவிலோ ஒவ்வொரு வருடமும் நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்துகொண்டே செல்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா போன்று விவசாயத்தை நம்பியிருக்கும் நாடுகளின் அரசும் ,மக்களும் துபாயிடம் பாடம் கற்க வேண்டிய நேரம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!