வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (18/06/2018)

கடைசி தொடர்பு:17:30 (18/06/2018)

உலகில் அதிகம் விற்பனையாகும் மின்சாரக் காரை இந்திய சந்தையில் களமிறக்கும் நிஸான்!

சில ஆண்டுகளாக மாடல்கள் இல்லாமல் வெறும் டட்ஸன் கார்களை நம்பியிருந்த நிஸான் கொஞ்சம் அட்வான்ஸாக யோசித்து தனது மின்சார காரான லீஃப்பை இந்தியாவில் களமிறக்கப்போகிறதாம்.

நிஸான் லீஃப்

2018-ம் நிதி ஆண்டின் கடைசியில் (2019 ஆரம்பத்தில்) வரும் என்று எதிர்பார்க்கப்படும் லீஃப், CBU முறையில் வரும் என்று சொல்கிறார்கள். CBU வாகனங்களுக்கு வரி அதிகம் என்பதாலும், மத்திய அரசின் மானியம் வெளிநாட்டு மின்சார வாகனங்களுக்கு இல்லை என்பதாலும், வரவிருக்கும் லீஃப் காரின் விலை ரூ.40 முதல் 50 லட்சம் இருக்க வாய்ப்புள்ளது. விலை தவிர லீஃப் காருக்கு இருக்கும் இன்னொரு சிக்கல் இந்தியாவில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன். தற்போது, இந்தியாவில் 2 சதவிகித மின்சார கார்கள் விற்பனையாகிறது. ஆனால், சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஒரு சதவிகிதம்கூட இல்லை. மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல் பங்க் இருப்பதுபோல பாரத் EV சார்ஜர் எனும் சார்ஜிங் ஸ்டேஷனைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதுவரை, லீஃப் காரை வீட்டில் மட்டுமே சார்ஜ் செய்துகொள்ள வேண்டிய சூழல்தான்.

`மெர்சிடீஸ் விலைக்கு ஒரு நிஸான் காரா, ரொம்பவே விலை அதிகம்' என்று மைன்ட் வாய்ஸ் கமென்ட் அடிக்கும். உண்மையில், நம்ம ஊர் ஸ்விஃப்ட் போல லீஃப் ஒரு மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார். உலகில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் இதுதான். இந்திய சந்தை லீஃப்புக்கு சாதகமாக இல்லை என்றாலும் இப்போது, லீஃப் காரை கொண்டுவருவதற்கான காரணம் நிஸான் தன்னிடம் உள்ள, தொழில்நுட்பத்தைக் காட்ட விரும்புகிறது. 

லீஃப் சார்ஜிங்

வெளிவரவிருக்கும் இந்த இரண்டாம் தலைமுறை லீஃப், சிங்கிள் சார்ஜில் 240 கி.மீ முதல் 400 கி.மீ தூரம் வரை செல்லும். இந்தக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 40 kWh பேட்டரி அமைப்பை, முழுவதுமாக சார்ஜ் செய்ய 8 மணி நேரம் ஆகும். இதுவே ஃபாஸ்ட் சார்ஜர் என்றால், 80 சதவிகித பேட்டரியை வெறும் 40 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிவிட முடியும். 80 சதவிகித சார்ஜில் சுமார் 150 கி.மீ வரை போகும். இப்போது, நம் முன் இருக்கும் கேள்வி என்னவென்றால், நாம் விலை உயர்ந்த மதிப்பைத் தரக்கூடிய சொகுசு கார்களை வாங்கப்போகிறோமா, அல்லது நம் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான மின்சார கார்களை வாங்கப்போகிறோமா என்பதுதான். டெஸ்லா போன்ற முன்னோடிகளே யோசித்து வெளியே நிற்கும்போது நிஸானின் இந்த முடிவு, மின்சார கார் சந்தையில் அதை ஒரு முன்னோடி நிறுவனமாகக்கூட மாற்ற வாய்ப்புள்ளது.