வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (18/06/2018)

கடைசி தொடர்பு:19:42 (18/06/2018)

தன் பிணத்தைக்கூட பிரிட்டிஷ்காரர்களை தொடவிடாமல் செய்த ’ஜான்சி கி ராணி’! #RaniLaxmibai

தன் தத்து குழந்தையை முதுகில் சுமந்தப்படி, குதிரையேற்றம் செய்தபடி, கூரிய வாள் வீசி, ஜான்சி ராணி போர் செய்யும் அந்தக் காட்சி, இன்றும்  ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் துணிச்சலையும் வீரத்தையும் விதைக்கும்!

தன் பிணத்தைக்கூட பிரிட்டிஷ்காரர்களை தொடவிடாமல் செய்த ’ஜான்சி கி ராணி’! #RaniLaxmibai

ணிகர்ணிகா .. பாலிவுட் நடிகை கங்கனா  ராணவத் நடித்து இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் திரைப்படம்; ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு! கங்கனாவின் ரசிகர்களும் ஜான்சி ராணியின் பற்றாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம். அதேநேரம், ’சர்வ மகாராஷ்ட்ரிய பிராமின்’ என்ற அமைப்பு, இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. "ஜான்சி ராணியை இது அவமதிக்கும் செயல்" என்பது அவர்களின் வாதம். கிட்டதட்ட, 'பத்மாவத்' திரைப்படத்திற்கு நேர்ந்த கதைத்தான் இங்கும்  நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இங்கு நாம் பேசப்போவது அந்தத் திரைப்படத்தைப் பற்றியல்ல! மணிகர்ணிகாவாக பிறந்தவள் எப்படி ஜான்சி ராணியாக மாறினாள் என்பதைப் பற்றித்தான்!

ஜான்சி

வாரணாசியில் மெளரியபந்தர்-பகீரதிபாய் என்ற தம்பதியருக்கு பிறந்தவர்  ராணி லக்‌ஷ்மி பாய்;  அவருக்கு மணிகர்ணிகா  என்று பெயர் சூட்டி, மனு என்று செல்லமாக அழைத்தனர். மனுவுக்கு நான்கு வயதாகும்போது, அவரின் அம்மா எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். அதன்பின்னர், அப்பாவின் அரவணைப்பில்  வளரும் மனு,  படிப்புடன், வாள் வீச்சு, குதிரை ஏற்றம் என சாகச பயிற்சிகளையும் கற்றுக்கொள்கிறார். அக்காலத்தில், ஓர் ஆண்மகனுக்கு நிகரான வீரத்தில் திகழ்க்கிறார்.

ஜான்சி

PC: awaaznation.com

1842ஆம் ஆண்டு, ஜான்சி என்ற பகுதியை ஆண்ட ராஜா கங்காதர ராவுடன் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு, ராணி லட்சுமி  பாய் என்று பெயர் மாறுகிறது; ‘ஜான்சி கி ராணி’ என்றும் அழைப்படுகிறார். அவர்களுக்கு 1851-ம் ஆண்டு பிறந்த தாமோதர் ராவ் என்ற ஆண் குழந்தை, நான்கு மாதங்களிலேயே உடல்நிலை சரியில்லாமல் இறந்துப்போகிறது. தன் மகன்  இறந்த சோகத்திலிருந்து மீள, ஆனந்த ராவ் என்ற உறவினர் குழந்தையை தத்தெடுத்து வளர்ந்துகொண்டிருந்தார். அதற்குப் பின்னர், இரண்டு ஆண்டுகள் கழித்து, ராணி லட்சுமி பாய்க்கு 18 வயதாகும்போது, கணவரும்  இறந்துவிடுகிறார். ஆனால், கணவர் இறந்தபின், அந்தத் தத்துக் குழந்தையை அரசு வாரிசாகக் கருதமுடியாது என்பதால், ராணி லட்சுமி பாய், அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கிறார். அதுதான், பிரிட்டிஷ் ஆட்சியும், ஆக்கிரமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகப்  பரவிக்கொண்டிருந்த காலம். அவர்களின்  பார்வை ஜான்சியின் பக்கம்  திரும்பியது. ராணி லட்சுமி பாயிடம், “நாங்கள் உனக்கு மாத ஓய்வூதியத்  தொகையாக 60,000 ரூபாய் கொடுக்கிறோம்; உன் ‘ஜான்சி’யை விட்டுக்கொடுத்துவிடு” என்று கூறுகின்றனர்; முதலில் அதற்கு ஒப்புக்கொண்ட ராணி லட்சுமி பாய், அதன்பிறகு இதனால் தனக்கும் தன் மண்ணிற்கும் ஏற்படக்கூட விளைவுகள் தெரியவர, அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

ராணி லட்சுமி பாய்

PC: Avinashmaurya

பிரிட்டிஷ்காரர்களுக்கும், ஜான்சி ராணிக்கும் இடையே பகைமை உருவாகுகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, 1857ஆம் ஆண்டு, ஜான்சியின் படைக்கும்  பிரிட்டிஷ்காரர்களுக்கும் மிகப்பெரிய போராக வெடிக்கிறது. சுதந்திரத்தின் முதல் போராட்டமாக கருதப்படும், இந்தப் போர் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது. தன் தத்துக் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு, குதிரையேற்றம் செய்தபடி, கூரிய வாளில் வீசி ஜான்சி ராணி போர் செய்யும் அந்தக்  காட்சி, இன்றும்  ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் துணிச்சலையும் வீரத்தையும் விதைக்கும்! தான் பிறந்து வளர்ந்த மண்ணை, பகைவர்களிடமிருந்து காக்க துடிக்கும், ஒவ்வொருவரிடமும் அந்தக் காட்சியிலிருந்து ஓர் உந்துசக்தியை உணரமுடியும்! இனிவரும் தலைமுறைகளுக்கு நாம் அறத்தையும் வீரத்தையும் கற்றுக்கொடுக்கும் கதைகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஜான்சி ராணியின் கதை விளக்கும்!

சமீபத்தில், ஜான்சி ராணி, லார்ட் டால்ஹவுஸூக்கு (Lord Dalhousie) எழுதிய கடிதம் ஒன்று, லண்டனிலுள்ள ஒரு நூலகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், தன் கணவர் இறப்பதற்குமுன் எப்படியெல்லாம் அவதிப்பட்டார் என்பது பற்றி ஜான்சி ராணி எழுதியிருந்தாராம். ஜான்சி ராணியை, தன் இடத்தைவிட்டுத்தர சொல்லி வற்புறுத்தியது, லார்ட் டால்ஹவுஸிதான் என்பது குறிப்பிடத்தக்கது!

இன்று அவரின் நினைவு நாள்! அவர் மண்ணில் புதைந்த நாள்! ஆனால், அவர் மண்ணில் புதைக்கப்பட்ட கதையிலும் ஒரு வீரம் இருக்கிறது; தான் இறந்தபின், தன் பிணம் பிரிட்டிஷ்காரர்கள் தொடக்கூடாது என்றும், தன் மக்களே தன்னை புதைக்கவேண்டும் என்று முன்னரே கூறியிருந்தார் லட்சுமி பாய். அப்படியே அவரின் இறுதிச் சடங்குகளும் நடந்தன! அவர் இறந்த மூன்று நாள்களில், பிரிட்டிஷ்காரர்கள் அவரின் இடத்தைக் கைப்பற்றினர்.  ஆனால், அவர்கள் அதைக் கைப்பற்றியதற்கு காரணம், ஜான்சியின்  தோல்வியால் அல்ல; இறப்பினால் மட்டுமே!

தன் பிணத்தைக்கூட பிரிட்டிஷ்காரர்களை தொடவிடாமல் செய்த ஜான்சி கி ராணிக்கு மீண்டும் ஒரு வீரவணக்கம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்