உங்களை பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமா? - உண்மை உணர்த்தும் கதை! #MotivationStory

உங்களை பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமா? - உண்மை உணர்த்தும் கதை! #MotivationStory

தன்னம்பிக்கை கதை

`நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அப்படி, பிறரையும் நடத்துங்கள்!’ - அமெரிக்கப் பாடகர் கார்த் புரூக்ஸின் (Garth Brooks) பொன்மொழி இது. யாராக இருந்தாலும் சமமாக பாவிக்க வேண்டும் என்பது அடிப்படை. சில நேரங்களில் ஒருவர் நம்மிடம் நடந்துகொள்ளும் முறைக்கு ஏதாவது காரணமும் இருக்கலாம். அதைப் புரிந்துகொள்ளாமல் அவரையே நாம் தவறாகப் புரிந்துகொண்டிருப்போம்; சந்தேகப்பட்டிருப்போம். இந்த மனநிலை குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குத் தொற்றிக்கொண்டுவிடுகிறது. `அவனுக்கு மட்டும் என்ன நூடுல்ஸ்?’ என்று ஒரு குழந்தை கேட்கும்போதே, தான் எதில் குறைந்துவிட்டோம்... மற்றவர்களுக்குக் கிடைத்தது தனக்கு ஏன் கிடைக்கவில்லை... தானும் அவனும் சமம்தானே... அவன் மட்டும் என்ன ஸ்பெஷல்... என என்னென்னவோ கேள்விகள் சேர்ந்துகொள்கின்றன. வேறொருவருக்குக் கிடைத்தது, நமக்குக் கிடைக்காமல் போவது அவமானமில்லை; அவமரியாதை இல்லை. அதன் பின்னணியை ஆராய்ந்தால் அதற்கான காரணம் புரியலாம். ஆனால், அதை மட்டும் யாரும் செய்வதேயில்லை. புரிந்துகொள்ளலில் ஏற்படும் சிக்கல், பல பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். பிறரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது எவ்வளவு தவறு என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை

சொம்பு

சாங் ஹு (Chang Hu) சீனாவைச் சேர்ந்தவர். புத்தபிட்சுக்களில் முக்கியமான குருமார்களாகக் கருத்தப்படுபவர்களில் ஒருவர். அவருக்கு எண்ணற்ற சீடர்கள் இருந்தார்கள். ஒருநாள் வெகு தூரத்திலிருந்து இரண்டு பேர் அவர் வீட்டுக்கு வந்தார்கள். இருவரும் அவரின் முன்னாள் சீடர்கள். பல வருடங்கள் அவரோடு இருந்து, பல விஷயங்களைக் கற்றுக்கொண்டவர்கள். சாங் ஹு அவர்களை வரவேற்றார். ஒரு மேசைக்கு முன்னால் உட்காரச் சொன்னார். இருவரும் அமர்ந்ததும், உள்ளே போய்விட்டு வந்தார். அவர் திரும்பியபோது அவருடைய வலது கையில் தங்கக் கோப்பை ஒன்று இருந்தது. இடது கையில் ஒரு பழைய இற்றுப்போன சொம்பு ஒன்று இருந்தது. 

சாங் ஹு தங்கக்கோப்பையை ஒரு மாணவனின் முன்னால் வைத்தார். பழைய சொம்பை இன்னொரு மாணவனுக்கு முன்னால் வைத்தார். இரண்டிலும் நீர் நிரப்பினார். ``தண்ணி குடிங்கப்பா!’’ என்று சொன்னார்.  

தங்கக்கோப்பை

தங்கக்கோப்பை கிடைத்த மாணவன் மகிழ்ச்சியோடு தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு, சீனர்களின் வழக்கப்படி குனிந்து சான் ஹு-வுக்கு நன்றி சொன்னான். பழைய சொம்பு கிடைத்த மாணவன், தண்ணீரை அருந்தாமல் கொஞ்ச நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு அவரிடம் கேட்டான்... `` மரியாதைக்குரிய குருவே... ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?!’’ 

``நினைக்க மாட்டேன். எதுவாயிருந்தாலும் கேளு.’’ 

``எவ்வளவு பெரிய குரு..! நீங்களே உங்க மாணவர்களை பாரபட்சமா நடத்தலாமா? அவனுக்கு தங்கக்கோப்பையில தண்ணி ஊத்திக் கொடுக்குறீங்க... எனக்கு பழைய சொம்புல ஊத்திக் கொடுக்கிறீங்க... இது என்ன நியாயம்? எத்தனை வருஷம் உங்களோட இருந்து பாடங்களைப் படிச்சேன்... ஆனாலும் நீங்க யாருக்கு முன்னுரிமை தர்றீங்கங்கிறது இன்னும் எனக்குப் புரியலை.’’ 

குரு

குரு அவனைப் பார்த்துச் சிரித்தார். பிறகு சொன்னார்... ``அன்பான சீடர்களே... இந்தத் தங்கக்கோப்பை இருக்கே... இது பல வருஷமா என்கிட்ட இருக்கு. இங்கே மிக முக்கியமான, மரியாதைக்குரிய விருந்தினர்கள் யாராவது வந்தாங்கன்னா இந்தத் தங்கக்கோப்பையிலதான் அவங்களுக்கு குடிக்கறதுக்குத் தருவேன். ஆனா, எல்லோரையும் இதுல குடிக்கிறதுக்கு நான் அனுமதிச்சதில்லை. ஏன்னா, இது மதிப்பு மிகுந்த பொருள். ஆனா, நானே இந்தத் தங்கக் கோப்பையை ஒருபோதும் பயன்படுத்தினதில்லை. தினமும் இந்தப் பழைய சொம்புலதான் நான் தண்ணி குடிக்கிறேன். இந்தப் பழைய சொம்பும் பல வருஷமா எனக்கு விசுவாசமா உழைச்சுக்கிட்டு இருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த பழைய சொம்பு விலை மதிப்பில்லாதது. இதுல இருக்குற ஒவ்வொரு கீறலும், சொட்டையும் எனக்கு நல்லாத் தெரியும். அதனால, என் அன்பான சீடர்களே, உங்க ரெண்டு பேரையும் என்னால சமமாகத்தான் நடத்த முடியும். இன்னொன்றையும் ஞாபகத்துலவெச்சுக்கோங்க... இந்த வீட்ல இந்தப் பழைய சொம்பையும் தங்கக்கோப்பையையும் தவிர வேற எந்தப் பாத்திரமும் இல்லை. இந்த ரெண்டையும்வெச்சுதான் உங்களுக்கு என்னால தண்ணி குடுக்க முடிஞ்சுது...’’ 

கேள்வி கேட்ட மாணவன், குருவுக்கு பதில் சொல்ல முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!