வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (19/06/2018)

கடைசி தொடர்பு:14:55 (19/06/2018)

8 ரூபாய் விலை வித்தியாசம்... உண்மையிலேயே டீசல் கார்களை வாங்குவது லாபமா?!

8 ரூபாய் விலை வித்தியாசம்... உண்மையிலேயே டீசல் கார்களை வாங்குவது லாபமா?!

பெட்ரோல், டீசல் கார்களின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. கூடவே பெட்ரோல் கார் வாங்குவதா, டீசல் கார் வாங்குவதா என்கிற குழப்பமும் நீடித்துக்கொண்டே போகிறது. டீசல் வாகனங்களின் எண்ணிக்கையும் டீசலின் விற்பனையும் கடந்த ஆண்டைவிட இந்தியாவில் இந்த ஆண்டு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. டீசல் கார்களை வாங்குவது உண்மையிலேயே லாபமா?

கார்

ஜூன் 12 நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 79.33 ரூபாய்; ஒரு லிட்டர் டீசலின் விலை 71.62 ரூபாய். பெட்ரோலுக்கும் டீசலுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட 20 ரூபாய் விலை வித்தியாசம் இருந்தது. 2014-ம் ஆண்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி அமைத்தபோது, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 74.71 ரூபாய்; டீசலின் விலை 61.12. கிட்டத்தட்ட 14 ரூபாய் விலை வித்தியாசம். ஆனால், இப்போது பெட்ரோலுக்கும் டீசலுக்கும் இடையிலான விலை வித்தியாசம் வெறும் 7.71 ரூபாய் மட்டுமே. இந்த விலை வித்தியாசம் இன்னும் குறையும் என்றே எதிர்பார்க்கலாம். கிட்டத்தட்ட பெட்ரோல், டீசல் இரண்டுமே ஒரே விலைக்கு விற்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்த நிலையில் பெட்ரோல் கார்களைவிட கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் அதிகமான டீசல் கார்களை வாங்குவது லாபமா?

பெட்ரோல்... டீசல் கணக்கு!

இப்போது நீங்கள் மாருதி ஸ்விஃப்ட் கார் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சென்னையில் மாருதி ஸ்விஃப்ட் பெட்ரோல் மாடலின் எல்லா வசதிகளும்கொண்ட விலை உயர்ந்த வேரியன்ட்டான ZXI ப்ளஸ்ஸின் விலை 8,56,702 ரூபாய். இதே டீசல் இன்ஜின்கொண்ட விலை உயர்ந்த ZDI ப்ளஸ் மாடலின் விலை 9,74,487 ரூபாய். பெட்ரோல் இன்ஜினுக்கும் டீசல் இன்ஜினுக்குமான விலை வித்தியாசம் 1,17,785 ரூபாய். 

கார்

வருடத்துக்கு எவ்வளவு கிலோமீட்டர்?

சராசரியாக மாதத்துக்கு 1,000 கிலோமீட்டர், வருடத்துக்கு 12,000 கிலோமீட்டர் கார் ஓட்டுவோம் என வைத்துக்கொள்வோம். மாருதி ஸ்விஃப்ட் பெட்ரோல் பொதுவாக லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. இப்போது வருடத்துக்கான சாராசரி மைலேஜைத் தெரிந்துகொள்ள 12,000 கிலோமீட்டரோடு மைலேஜை வகுக்க வேண்டும். வருடத்துக்கு ஸ்விஃப்ட்டில் 12,000 கிலோமீட்டர் பயணிக்க 750 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும். சென்னையில் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 79.33 ரூபாய். இன்றைய பெட்ரோல் நிலவரப்படி நீங்கள் ஒரு வருடத்துக்கு 12,000 கிலோமீட்டர் கார் ஓட்ட  59,497 ரூபாய் பெட்ரோலுக்காகச் செலவிடுவீர்கள். 

இப்போது டீசலுக்கு வருவோம். இதேபோல் மாதத்துக்கு 1,000 கிலோமீட்டர், வருடத்துக்கு 12,000 கிலோமீட்டர் கார் ஓட்டம் இருக்கும் என்றே வைத்துக்கொள்வோம். 1 லிட்டர் டீசலின் விலை சென்னையில் 71.62 ரூபாய். ஸ்விஃப்ட் டீசல் நகரம், நெடுஞ்சாலைப் பயணம் இரண்டையும் சேர்த்து லிட்டருக்குப் பொதுவாக 19 கிலோமீட்டர் மைலேஜ் தரும். இப்போது 12,000 கிலோமீட்டரையும் மைலேஜையும் வகுக்க வேண்டும். 632 லிட்டர் டீசல் ஒரு வருடத்துக்கு உங்களுக்குத் தேவைப்படும். அப்படியானால் ஒரு வருடத்துக்கு நீங்கள் டீசலுக்காக 45,264 ரூபாய் செலவிடுவீர்கள்.

கார்

பெட்ரோல் ஸ்விஃப்ட்டுக்குப் பதிலாக நீங்கள் டீசல் ஸ்விஃப்ட் வாங்குவதால் எரிபொருள் பட்ஜெட்டில் வருடத்துக்கு மிச்சம்பிடிப்பது வெறும் 14,233 ரூபாய் மட்டுமே. தொடர்ந்து 8 ஆண்டுகள் இதே காரைப் பயன்படுத்தினால் மட்டுமே கார் வாங்கும்போது நாம் கொடுத்த எக்ஸ்ட்ரா 1.17 லட்சம் ரூபாயை சரிகட்ட முடியும். அதனால் மாதத்துக்கு 1000 கிலோமீட்டர் தூரம்தான் பயணம் இருக்கும் என்பவர்கள் டீசல் வாங்காமல் பெட்ரோல் காரை வாங்குவதே நல்லது.

மாதத்துக்கு 2,500 கிலோமீட்டர் தூரத்துக்குமேல் பயணிப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே டீசல் கார் பயனுள்ளதாக இருக்கும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்