வெளியிடப்பட்ட நேரம்: 05:50 (20/06/2018)

கடைசி தொடர்பு:10:49 (20/06/2018)

ஈகோ என்ன செய்யும்? - பாடம் சொல்லும் கதை #MotivationStory

ஈகோ என்ன செய்யும்? - பாடம் சொல்லும் கதை #MotivationStory

#MotivationStory

`சொந்த வீட்டிலேயே உரிமை கொண்டாட முடியாததாக இருப்பதுதான் ஈகோ’ - என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்டு (Sigmund Freud). எல்லா மனிதர்களுக்குமே ஆழ்மனதில் `நான்’ என்கிற ஈகோ இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த மமதையை அடக்கிவைத்திருக்கும் மனிதன்தான் எல்லாவற்றையும் கடந்து போகிறான்; எதிலும் வெற்றி பெறுகிறான். எந்தத் துறையில் எத்தனை பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் ஆணவத்துக்கு இடம் கொடுத்துவிட்டால் பின்னடைவு நிச்சயம். இப்போதெல்லாம் `நான் யார் தெரியுமா?’ என்கிற வாசகத்தை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. ரேஷன் கடை க்யூவில் தொடங்கி, ரோட்டில் வாகன ஓட்டிகளின் சச்சரவு வரை கோபத்தில் உதிர்க்கும் வாசகம் இது. கொஞ்சம் வசதி, சமூகத்தில் மரியாதை, உதவிக்கு ஓடி வர நான்கு பேர் இருந்தாலே போதும்... ஈகோ அந்த மனிதனிடம் `பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டுவிடுகிறது. இந்த அகம்பாவம் பல நேரங்களில் நமக்கே வினையாகிவிடும் என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை. அந்த உண்மையை எடுத்துச் சொல்லும் கதை இது. 

ஃபார்முலா

அவர் ஒரு விஞ்ஞானி. முக்கியமான ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார். ஒரு மனிதனைப்போலவே இன்னொரு மனிதனை உருவாக்கும் ஆராய்ச்சி. மயிரிழை முதற்கொண்டு விரல் நகம் வரை அச்சு அசலாக ஒரு மனிதனைப்போல் இன்னோர் உருவத்தை உருவாக்க முயன்றுகொண்டிருந்தார். பல ஆண்டுகள் போராடினார்; தன் திறமை, அறிவு அத்தனையும் பயன்படுத்தி எப்படியோ அதற்கான ஃபார்முலாவையும் உருவாக்கிவிட்டார். இப்போது அந்தக் கலை அவருக்குக் கைவந்துவிட்டது... தன்னைப்போலவே ஒரு மனிதனை உருவாக்கும் கலை. அதாவது, இப்போது அவரால் அவரைப்போலவே தோற்றமுடைய இன்னோர் உருவத்தை உருவாக்க முடியும். அதையும் மிகத் துல்லியமாகச் செய்தார். எது போலி, எது ஒரிஜினல் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அற்புதமாக இருந்தது அவர் படைத்த உருவம். 

ஒரு நாள் அவர் தன் ஆய்வுக்கூடத்தில் இருந்தார். கதவு மூடித்தான் இருந்தது. ஆனால், அவருடைய உள்ளுணர்வு யாரோ உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்று சொன்னது. அவர் தன் வேலையில் கவனமாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டு சுற்றிலும் நோட்டம்விட்டார். அவருக்கு உடம்பு சிலிர்த்தது. அவரை அழைத்துப்போக மரண தேவதை வந்திருக்கிறது என்பதை அறிந்துகொண்டார். ஒரு கணம் யோசித்தார். சட்டென்று அந்த யோசனை தோன்றியது. தான் கண்டுபிடித்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி அவரைப்போலவே ஒரு டஜன் உருவங்களை உருவாக்கினார். 

ஒரு டஜன் உருவங்கள்

இப்போது ஆய்வுக்கூடத்தில் அவரைப்போலவே அச்சு அசலாக 12 பேர் அங்குமிங்கும் உலாத்திக்கொண்டிருந்தார்கள்; ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள்; புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்கள்; மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார்கள்... ஒரு கணத்தில் நடந்தது இந்த மாற்றம். இப்போது மரண தேவதைக்கு முன்னால் ஒரே மாதிரியான 13 உருவங்கள். தேவதையால் அவர்களில் யார் உண்மையான விஞ்ஞானி என்று அடையாளம் காண முடியவில்லை. தவறான ஒரு நபரை அழைத்துக்கொண்டும் போக முடியாது. குழப்பமடைந்த தேவதை, ஒன்றும் செய்யாமல் ஆய்வுக்கூடத்தைவிட்டு வெளியேறியது. 

ஆனால், மரண தேவதை அதற்குப் பிறகு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் நம்பிக்கைக்குரிய இன்னொரு தேவதையிடம் போய் ஆலோசனை கேட்டது. அந்த தேவதை, மரண தேவதைக்கு ஒரு ரகசியத்தைச் சொன்னது... அது, மனிதர்களிடம் இயற்கையாக இருக்கும் ஒரு சுபாவம். அந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்ட மரண தேவதை, திரும்பவும் அந்த விஞ்ஞானியின் ஆய்வுக்கூடத்துக்குப் போனது. 

விஞ்ஞானி உஷாராக அவரைப் போன்ற மற்ற உருவங்களை அப்படியே உலவவிட்டிருந்தார். ஆய்வுக்கூடத்துக்குள் நுழைந்த மரண தேவதை, ``ஐயா... நீங்கள் மிகவும் புத்திசாலி. உங்களைப்போலவே இன்னும் 12 பேரை உருவாக்கிவிட்டீர்களே’’ என்றது. 

ஆனால், விஞ்ஞானி உள்பட யாரும் மரண தேவதையைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. 

ஈகோ

``ஐயா... நீங்கள் பெரிய மேதையாக இருக்கலாம். உங்களைப்போலவே மற்ற உருவங்களையும் துல்லியமாக உருவாக்கியிருக்கலாம். ஆனால், உங்கள் வேலையில் ஒரு பிழை இருக்கிறது. அதை நான் கண்டுபிடித்துவிட்டேன். பெரியதாக ஒன்றுமில்லை... சின்னப் பிழைதான்’’ என்றது மரண தேவதை. 

அவ்வளவுதான்... உண்மையான விஞ்ஞானிக்கு `சுர்...’ என்று கோபம் வந்துவிட்டது. கோபம், அவருடைய ஈகோவை உரசிப் பார்த்தது. அவர் சட்டென்று மரண தேவதையின் முன்னால் வந்து கோபம் கொப்பளிக்கும் முகத்தோடு நின்றார். 

``சான்ஸே இல்லை. என்ன தப்பு... எங்கே தப்பு? சொல்லுங்க!’’ என்றார் விஞ்ஞானி. 

``இங்கேதான்..’’ என்று அவரைத் தொட்டுக்காட்டிய மரண தேவதை, அவரை அழைத்துக்கொண்டு விண்ணுக்குத் தாவியது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்