வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (20/06/2018)

கடைசி தொடர்பு:15:23 (27/06/2018)

``உக்காந்து வேலை பார்த்தது போதும்... இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க!" - ஆப்பிள் ஐடியா என்ன?

``உக்காந்து வேலை பார்த்தது போதும்... இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க!

ஆப்பிள் நிறுவனம் புதுமை என்ற பெயரில் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டிருப்பது வழக்கம்தான். ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்த வரைக்கும் அது உண்மையாகவே அப்படித்தான் இருந்தது. அவர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு தயாரிப்பையும் உலகம் உற்றுப் பார்க்கும். ஆனால், அவருக்குப் பின்னால் ஆப்பிள் அறிமுகப்படுத்தும் தயாரிப்புகளில் அப்படி ஒன்றையுமே எதிர்பார்க்க முடியவில்லை. சரி இருக்கும் இடத்திலாவது புதுமையைக் காட்டுவோம் என்று முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒரு தகவல் சற்று வித்தியாசமானது. தனது பணியாளர்கள் அமரும் இடத்தில் கூட புதுமை செய்து பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது ஆப்பிள்.

இருக்கையில் இருக்கும் சிக்கல்

இருக்கை

 

இருக்கையில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பது எல்லா அலுவலகத்திலும் இருக்கக்கூடிய வழக்கமான ஒரு விஷயம். அதிலும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் கணினிகள்தாம் பிரதானமாக இருக்கும். அதற்கு முன்பாகப் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இதுபோல ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பதனால் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் உடல் பருமன் முதல் இதய நோய் வரை பல பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எப்பொழுதுமே புதுமையை விரும்பும் ஆப்பிள் தனது புதிய அலுவலகத்தில் நின்றுகொண்டே வேலை பார்க்கும் வகையில் `ஸ்டேன்டிங் டெஸ்க்'குகள் அமைக்கப்படும் என்ற தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

ஆப்பிளின் புதிய தலைமையிடம்

கலிபோர்னியாவில் தனது புதிய தலைமை அலுவலகத்தைக் கட்டி வருகிறது ஆப்பிள். `ஆப்பிள் பார்க்' என்று பெயரிடப்பட்ட இந்த வட்ட வடிவிலான கட்டடம் கடந்த 2014-ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டுக் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. கட்டடம் திறக்கப்பட்டு விட்டாலும் அதன் கட்டுமானப்பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இன்னும் வேலை நடந்துகொண்டிருக்கிறது.

ஆப்பிள் பார்க்

 

இதன் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றிய தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது ஆப்பிள். ஸ்டீவ் ஜாப்ஸ் என்னென்ன வசதிகளை எதிர்பார்த்தாரோ அதற்குத் தகுந்தவாறு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அளித்த ஒரு பேட்டியில்தான் அலுவலகத்தின் இருக்கை பற்றிய தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.  தனது பணியாளர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஆப்பிள் இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார் குக்.

`ஸ்டேண்டிங் டெஸ்க்'-களால் என்ன பயன்?

ஸ்டேன்டிங் டெஸ்க்

ஒருவர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும்போது உண்டாகும் பாதிப்பை ஸ்டேண்டிங் டெஸ்க்-குகளால் குறைக்க முடியும். ஸ்டேண்டிங் டெஸ்க்குகள் இருந்தால் நின்று கொண்டே கணினியை இயக்க முடியும். வேலைகளை நின்று கொண்டே பார்க்கும் வகையில் டேபிளின் உயரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். அதற்காக எப்பொழுதுமே நிற்க வேண்டியிருக்குமா என்றால் இல்லை. எப்படி அதிக நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பது பாதிப்பை ஏற்படுத்துமோ அதேபோல அதிக நேரம் நின்றுகொண்டிருப்பதும் பிரச்னைதான். எனவே, இந்த அமைப்பில் இருக்கைகளும் இருக்கும் தேவைப்பட்டால் அமர்ந்து கொள்ளலாம். இந்த ஸ்டேண்டிங் டெஸ்க்-கள் பல வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.

ஸ்டேன்டிங் டெஸ்க்

ஸ்டேண்டிங் டெஸ்க்குகள் உலகம் முழுவதும் பல அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவ்வளவு பெரிய அளவில் பயன்படுத்தப்படுவது இதுதான் முதல் முறையாக இருக்கும். ஆப்பிள் பார்க்கில் பணிபுரியும் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம். " நாங்கள் எங்கள் அலுவலகத்தில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் 100% ஸ்டேண்டிங் டெஸ்க்குகளை வழங்கி விடுவோம், உங்களால் நிற்க முடிந்த அளவு நேரம் நிற்கலாம் அல்லது உட்கார்ந்து கொள்ளலாம் இது உடல் நலனுக்கு மிகவும் நல்லது" எனத் தெரிவித்திருக்கிறார் டிம் குக். 


டிரெண்டிங் @ விகடன்