வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (20/06/2018)

கடைசி தொடர்பு:14:48 (20/06/2018)

``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்!" கலங்கும் கடலூர் ஜானகி

உள்ளேயிருந்து கேட்ட அழுகுரலால் பதறியடித்துச் சென்றால், சமீபத்தில் பெய்த மழையை நீர் குடிசையின் உள்ளே தேங்கியதால் ஏற்பட்ட நாற்றம் மூச்சைடைக்க வைக்கிறது.

டலூர் மாவட்டம் அருகிலுள்ளது கீழப்பாலையூர் கிராமம். அந்தக் கிராமத்தில் இடிந்த நிலையில் உயிரற்ற ஒரு குடிசை வீடு இருக்கின்றது. கரையான் புற்றுகள் குடிசையைச் செல்லரித்துப் போகச் செய்திருக்க, எப்போது விழுமோ என்கிற பயத்தை தருகிறது அந்தக் குடிசை. உள்ளேயிருந்து கேட்ட அழுகுரலால் பதறியடித்துச் சென்றால், சமீபத்தில் பெய்த மழையை நீர் குடிசையின் உள்ளே தேங்கியதால் ஏற்பட்ட நாற்றம் மூச்சைடைக்க வைக்கிறது.

குடிசை ஜானகி பாட்டி

கீழப்பாலையூர் கிராமத்தில் இருப்பவர்களுக்கு இந்த அழுகுரல் பழக்கப்பட்ட ஒன்றுதான் என்பதால் நிதானமாகக் கடந்து செல்கிறார்கள் அவ்வூர் மக்கள். உள்ளே அழுதுகொண்டிருந்த பாட்டியின் பெயர் ஜானகி. 65 வயதில் கவனிப்பாரின்றி ஊர் மக்கள் உதவியால் அன்றாட வாழ்க்கையைக் கழித்து வருகிறார்.  

``என்னோட சொந்த ஊர், திருநெல்வேலி. கல்யாணமாகி வீட்டுக்காரரோடு இங்கே வந்தேன். இந்தக் கிராமத்துலதான் எங்க வாழ்க்கை ஆரம்பிச்சது. அவர் சின்னதா பொட்டிக் கடை நடத்தினாரும்மா. அதுல கிடைக்கிற வருமானத்துலதான் குடும்பம் நடக்கும். எங்களுக்கு ஒரு பொண்ணு, ரெண்டு பசங்க. அவங்க வளர்ந்து கல்யாணம் ஆனதும் அவங்க பொழப்பை பார்க்கப் போயிட்டாங்க. நானும் அவரும் இருந்தப்ப என்னை நல்லாப் பார்த்துக்கிட்டார். இப்ப அவரும் போனதும் அநாதையாகிட்டேன்'' என்றபடி வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார்.

குடிசை

சிறிய இடைவேளைக்குப் பிறகு குரல் உயர்த்திச் சொல்கிறார் ஜானகி பாட்டி. ``ஆமா... எனக்குப் பசங்களே இல்லை. நான் அநாதைதான். என்னை விட்டுட்டுப் போனவங்களை நினைச்சு கவலைப்படலை. என் வயித்துல எதுவும் பொறக்கலைன்னு நினைச்சுக்கிறேன். அவர் செத்து 7 வருஷம் ஆயிடுச்சு. அரசாங்கம் பொறம்போக்கு நிலத்துல பட்டா போட்டு இதோ இந்தக் குடிசையைக் கட்டிக்கொடுத்தாங்க. இதுவும் மண்ணெல்லாம் சரிஞ்சு, என்னை மாதியே நிலைகுலைஞ்சு கிடக்கு. இங்கே பக்கத்துல மகளிர் சுய உதவிக்குழுவின் திண்ணை இருக்கு. அவங்ககிட்ட கேட்டுட்டு அந்தத் திண்ணையில்தான் ராத்திரியில் படுத்துப்பேன். மழைக் காலத்துல ரொம்பவே கஷ்டப்படுவேன். சில சமயம் மழை ரொம்ப கொட்டி எடுக்கும். விடிய விடிய தூங்காமல் நிற்பேனே தவிர, என் பிள்ளைகளைத் தேடிப்போகணும் அவங்களோடு வாழணும்னு ஆசைப்பட்டதில்லே. `உன் பசங்க எங்கே இருக்காங்க?'னு யார் கேட்டாலும், `நான் அநாதைங்க. யாரும் இல்லை'னு சொல்வேன். என்னால் அவங்களுக்கு எந்தத் தொந்தரவும் வேணாம். போற உசுரு இந்தக் குடிசையிலேயே போகட்டும்'' என்கிறார் ஆதங்கத்துடன்.

``ஏதாச்சும் வேலை பண்ணி பொழப்பு நடத்தலாம்னு பார்த்தா உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குதும்மா. இல்லைன்னா, யார் கை காலில் விழுந்தாச்சும் வேலைக்குப் போயிருப்பேன். மத்தவங்ககிட்ட கை நீட்டி உதவி கேட்கிற நிலைமையில் ஆண்டவன் என்னை வெச்சிருக்கான். சாப்பாடுக்கு யாராச்சும் உதவி பண்ணுவாங்க. அரசாங்கம் கொடுத்த இலவச சிலிண்டர் வெச்சிருக்கேன்மா. ரேஷன் அரிசி வாங்கி, சோத்தை வடிச்சு வெறும் தண்ணியை ஊற்றியே பல நாள் சாப்பாட்டை முடிச்சிருவேன். நாக்குக்கு ருசி எல்லாம் அவர் இருந்தவரைக்கும்தான். ஊர்க்காரங்க கருணையிலதான் உசுரு ஒட்டிட்டு இருக்கு. இல்லைன்னா எப்போவோ போயிருக்கும். இதையெல்லாம்கூட இதுவரை யார்கிட்டேயும் முழுசா சொன்னதில்லே. என்னமோ நீ கேட்டதும் மனசுல அடக்கிவெச்சிருந்த துக்கங்களை உன்கிட்ட கொட்டித் தீர்த்துட்டேன்மா. யாரும் என்கிட்ட இவ்வளவு நேரம் பேசுனதுகூட இல்லே. நன்றி கண்ணு'' என்ற அந்தக் கடைசி வாக்கியத்தில் உடைந்துபோனது உள்ளம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்