வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (20/06/2018)

கடைசி தொடர்பு:21:03 (20/06/2018)

அன்று ரூ.10,000 முதலீடு... இன்று 2 கோடி! - வெள்ளிவிழா கொண்டாடும் இன்ஃபோசிஸ்

அன்று ரூ.10,000 முதலீடு... இன்று 2 கோடி! - வெள்ளிவிழா கொண்டாடும் இன்ஃபோசிஸ்

ங்குச்சந்தையில் பங்குகளை வெளியிட்ட நிறுவனங்கள், காலப்போக்கில் காணாமல்போனவைதான் அதிகம். ஆனால், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு 25 வருடமானாலும் பங்குச்சந்தையில் இன்றும் முதன்மையான நிறுவனங்களில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது இன்ஃபோசிஸ் நிறுவனம். இதை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாடிவருகிறது. 

இன்ஃபோசிஸ்

ஆரம்பத்திலிருந்தே நிர்வாகத்திலும் நிதி நிலையிலும் விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதால் சர்வதேச அளவிலும் சிறந்த நிறுவனமாக உயர்ந்திருக்கிறது இன்ஃபோசிஸ். இதனால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஏராளமான வளத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. 1981-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இன்ஃபோசிஸ் நிறுவனம், 1993-ம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது ஒரு பங்கின் விலை 95 ரூபாய். 1999-ம் ஆண்டில் ஒரு பங்கின் விலை 8,100 ரூபாய் என்று உயர்ந்தது. தற்போது (19.6.2018) விலை 1,244 ரூபாய் என்று இருக்கிறது. கடந்த 25 வருடத்தில் 11 முறை போனஸும் 2000-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து டிவிடெண்டும் வழங்கிவருகிறது. ``1993-ம் ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கும்" என்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள். 

வெள்ளி விழாவை முன்னிட்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உயர் பதவி வகித்தவர்கள் தனது நிறுவனத்தின் பணியாளர்களுடன் கலந்துரையாடிவருகிறார்கள். முன்னாள் தலைமை நிதி அதிகாரியாக இருந்த பாலகிருஷ்ணன், ``இன்ஃபோசிஸ் இவ்வளவு பெரிய கனவு நிறுவனமாக மாறியதற்கு முக்கியக் காரணம் நாராயணமூர்த்தியின் முயற்சியே" என்று புகழாரம் சூட்டினார்.

இன்போஃசிஸ்``இந்தியாவிலிருந்து இன்னொரு இன்ஃபோசிஸ் உருவாக முடியாது. ஏனெனில், நடுத்தர இளைஞர்களின் முன் முயற்சியால் சர்வதேசச் சிந்தனையோடு பல தலைமுறைகளின் கனவுகள் ஒன்றிணைந்து உருவாகியிருக்கிறது இன்ஃபோசிஸ் நிறுவனம். இனியும் பல தலைமுறைகளின் கனவுகளுக்கு ஊக்கம் கொடுக்கும். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல, நாங்கள் பின்புலத்தில் இணைந்து பணியாற்றினோம். எங்களுக்கு முன்னோடித் தலைவராக இருக்கிறார். அவர் இன்ஃபோசிஸ் கட்டமைப்பில் கவனம் செலுத்தினார். இதன்மூலம் நன்கு திறமையான பணியாளர்கள் கிடைத்தனர்" என்றார்.

25 வருடத்துக்கு முன்பு பங்குச்சந்தை வர்த்தகம் என்பது பெரிய அளவில் ஈர்ப்போ எந்தவிதமான கட்டமைப்போ இல்லாமல் இருந்தது. சிறு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இன்ஃபோசிஸ் நிறுவனம், சர்வதேச அளவிலான விதிமுறைகள் கடைப்பிடிக்க, அதற்கு ஏற்ப பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமும் (செபி) மாற்றங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க ஆரம்பித்தது. இதையே பல நிறுவனங்களும் கடைப்பிடிக்க ஆரம்பித்தன. இதன்மூலம் நிறுவனங்களின் நன்மதிப்பு உயர ஆரம்பித்தது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு முதலீடுகள் வர ஆரம்பித்தன. இந்திய நிறுவனங்கள் சர்வதேச அளவில் பெயர்பெற்றுள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கும் நல்ல வருமானத்தைக் கொடுத்தது.

இன்போஃசிஸ்

நாரயணமூர்த்தியின் முதன்மையான வழிகாட்டுதல்களையும் நிர்வாக விதிமுறைகளையும் கடைப்பிடித்ததால் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதன்மூலம் முதலீட்டாளர்கள் தொடர்ந்து நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது. நல்ல நிர்வாகக் குழுவும் அவர்களின் கனவுகளும் பெரிதாக இருந்தால் சாதனையும் மிகப்பெரியதாகவே இருக்கும். இது தலைமைப் பண்பில் இருப்பவர்கள் அறிந்திருக்க வேண்டும். இதன்மூலம் நல்ல மதிப்பும் நிறுவனத்தின் லாபமும் அதிகரிக்கும் என்பது நாராயண மூர்த்தி கொள்கையில் ஒன்றாக இருந்தது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தற்போது இரண்டு லட்சத்துக்கும் கூடுதலான பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். நிறுவனப் பணியாளர்களில் பங்கு ஒதுக்கீட்டின் மூலம் பலரும் கோடீஸ்வராக மாறியுள்ளனர். 2017-18-ம் ஆண்டு 73,715 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. 16,372 கோடி ரூபாய் லாபம் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்