வெளியிடப்பட்ட நேரம்: 09:04 (22/06/2018)

கடைசி தொடர்பு:09:04 (22/06/2018)

எவற்றையெல்லாம் மனிதன் இழக்கக் கூடாது? - பாடம் சொல்லும் கதை #MotivationStory

தைரியத்தோடு எதிர்கொள்பவர்களைத்தான் இயற்கையும் வாழ்த்துகிறது. இந்த நியதியை சுட்டிக்காட்டும் கதை ஒன்று

எவற்றையெல்லாம் மனிதன் இழக்கக் கூடாது? - பாடம் சொல்லும் கதை #MotivationStory

தன்னம்பிக்கை கதை

`அன்புக்கு மிகச் சிறந்த ஆதாரம் நம்பிக்கை’ - அழுத்தமாகச் சொல்கிறார் அமெரிக்க உளவியல் நிபுணரும் கட்டுரையாளருமான ஜாய்ஸ் பிரதர்ஸ் (Joyce Brothers). அன்புக்கு மட்டுமல்ல... ஆபத்தான தருணங்களில்கூட அது கைகொடுக்கும். `நம்பினார் கெடுவதில்லை’ என்பது நம் முன்னோர் வாக்கு. இயற்கை, எப்போதுமே தன்னை நம்பியவர்களைக் கைவிடுவதில்லை. நம் எல்லோருக்குமே நம்பிக்கைதான் ஆதாரம். `எப்போது இந்த உலகம் சுழல்வதை நிறுத்துமோ!’ என்று நாம் யோசிக்க ஆரம்பித்தால் நிம்மதி பறிபோய்விடும். `நல்ல காலம் பிறக்காமலா போகும்?’, `மகளுக்கு நல்ல வரன் அமையத்தான் போகுது’, `அடுத்த வருஷம் `நீட்’ல பையன் பாஸாகிடுவான்’... இப்படியான நேர்மறை எண்ணங்களும், அவை தொடர்பான நம்பிக்கையும்தான் நம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றன; வாழவைத்துக்கொண்டிருக்கின்றன. எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் இவற்றை இழக்காமல், தைரியத்தோடு எதிர்கொள்பவர்களைத்தான் இயற்கையும் வாழ்த்துகிறது; அரவணைத்துக்கொள்கிறது. இந்த நியதியைச் சுட்டிக்காட்டும் கதை ஒன்று...   

படகு

அவர்களுக்கு அண்மையில்தான் திருமணமாகியிருந்தது. தேனிலவுப் பயணமாக எங்கெங்கோ சுற்றிவிட்டு, ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு ஏரியைக் கடக்கவேண்டியிருந்தது. ஒரு படகை வாடகைக்கு எடுத்தார்கள். வாடகைக்கு எடுத்த படகை மறு கரையில் விட்டுவிட வேண்டும் அல்லது ஒரு படகோட்டியை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். படகோட்டி வந்தால், கூடுதலாக கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்... இது படகுக்காரர்கள் சொன்ன முக்கியமான விதிமுறை. கணவனுக்கு நன்றாகப் படகு ஓட்டத் தெரியும். அவன் ஒரு ராணுவ வீரனும்கூட. எனவே, அவனே படகைச் செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டான். 

அது மாலை நேரம். ஏரியின் பாதி தூரத்தை அவர்கள் கடந்திருந்தார்கள். திடீரென்று காற்று பலமாக வீசியது. புயல் கிளம்பியதுபோல இருந்தது. காற்றில் படகு வேகமாக அசைய ஆரம்பித்தது. கணவன் அந்தச் சூழலிலும் கலங்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். மனைவிதான் மிகவும் பயந்துபோயிருந்தாள். கொஞ்ச நேரத்திலேயே, `அவ்வளவுதான் நாம இன்னிக்கி காலி’ என்கிற அளவுக்கு அவள் நம்பிக்கையை இழந்திருந்தாள். உண்மையில், அந்தப் பலமான காற்றைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் சென்ற படகு வலுவானதில்லை. எந்த நேரத்திலும் அது, காற்றால் அடித்து, சுருட்டப்பட்டு ஏரியில் மூழ்கிப் போகலாம். 

அந்தப் பெண் பயந்து அலறிக்கொண்டிருந்தாள். அவனோ, அமைதியாக காற்றுக்கு ஏற்ப துடுப்பைப் போடுவது, சற்று நேரம் சும்மா இருப்பதுமாக இருந்தான். அவன் முகம் ஒரு சஞ்சலமுமில்லாமல், அமைதியாகயிருந்தது. அவள் கணவனைப் பார்த்துச் சொன்னாள்... ``ஏங்க... உங்களுக்குக் கொஞ்சம்கூட நடுக்கமே வரலையா? ஒருவேளை இதுவே நம்ம கடைசி நிமிஷமாக இருக்கலாம். அடிக்கிற காத்தைப் பார்த்தா, நாம கரைக்குப் போய்ச் சேருவோம்னே எனக்குத் தோணலை. இந்த நேரத்துல ஏதாவது அதிசயம் நடந்து நாம தப்பிச்சாத்தான் உண்டு. இல்லைன்னா, இந்த ஏரியிலேயே மூழ்கிப் போயிட வேண்டியதுதான்.’’ 

அவன் பதில் பேசாமல் அமைதியாக இருந்தான். 

கைத்துப்பாக்கி

``இவ்வளவு பேசுறேனே... உங்க காதுல விழலை... உங்களுக்கு என்ன பைத்தியம் புடிச்சிடுச்சா... உங்களுக்குப் பயமாவே இல்லியா?’’ 

இப்போது அவன் அவளைப் பார்த்துச் சிரித்தான். சட்டென்று தன் பாக்கெட்டிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்தான். அதன் ட்ரிக்கரில் விரலை வைத்தான். மனைவி, அவன் என்ன செய்யப் போகிறான் என்று விநோதமாகப் பார்த்தாள். அவன் துப்பாக்கியை எடுத்து அவளுடைய நெற்றிப்பொட்டில் வைத்தான். இப்போது ட்ரிக்கரை ஓர் அழுத்து அழுத்தினால் போதும். அவள் உயிர் போய்விடும். 

அவன் கேட்டான்... ``இப்போ உனக்கு பயமாயில்லையா?’’ 

அவள் மென்மையாகச் சிரித்தபடி சொன்னாள்... ``நான் ஏன் பயப்படணும்? நீங்க என் கணவர். உங்க கையிலதானே துப்பாக்கி இருக்கு? நீங்க என்னைக் காயப்படுத்த மாட்டீங்க, எந்த அளவுக்கு என்னை விரும்புறீங்கனு எனக்குத் தெரியும்...’’

அமைதியான படகு 

``அதே பதில்தான் என்கிட்டயும் இருக்கு டார்லிங். இயற்கை என்னை விரும்புதுனு எனக்கு நல்லாத் தெரியும். அது கையிலதான் இந்தப் புயல் காத்து இருக்கு. அதுனால எது நடந்தாலும் அது நல்லதுக்குத்தான். நாம பிழைச்சோம்னா நல்லது; பிழைக்கலைன்னாலும் அதுவும் ஏதோ ஒருவகையில நம்ம நல்லதுக்காகத்தான் இருக்கும்னு நினைச்சுக்கணும். ஏன்னா, எல்லாமே இயற்கையோட கையிலதான் இருக்கு. அது நமக்கு எதிராக எதையும் செய்யாது...’’ 

அவன் சொல்லி முடித்தான். அதுவரை அந்தப் படகை அலைக்கழித்துக்கொண்டிருந்த பயங்கரக் காற்று, அவர்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்