Published:Updated:

13 வயது, ஒன்றரை அடி உயரம், எலும்புருக்கி நோய்... போராடி படிக்கும் ஆர்த்தி! #PositiveStory

13 வயது, ஒன்றரை அடி உயரம், எலும்புருக்கி நோய்... போராடி படிக்கும் ஆர்த்தி! #PositiveStory
13 வயது, ஒன்றரை அடி உயரம், எலும்புருக்கி நோய்... போராடி படிக்கும் ஆர்த்தி! #PositiveStory

13 வயது, ஒன்றரை அடி உயரம், எலும்புருக்கி நோய்... போராடி படிக்கும் ஆர்த்தி! #PositiveStory

தானாக எழுந்து நடக்கமுடியாத நிலையிலும், கல்வியின் மீதும் வாழ்க்கையின் மீதும் உள்ள பெரும் ஈர்ப்பினால், மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையின் உதாரணமாக விளங்குகிறார், ஆர்த்தி.

கோவை, குரும்பப்பாளையத்தைச் சேர்ந்த ஆர்த்தி, தற்போது எட்டாம் வகுப்பு படிக்கிறார். பிறந்து ஆறு மாதத்தில் எலும்புருக்கி நோய் ஆர்த்தியை முடக்கியது. இதயம் நொறுங்கி, கண்ணீர் வற்ற அழுது தீர்த்தார்கள் ஆர்த்தியின் பெற்றோர். பெரும் யோசனைக்குப் பிறகே தயக்கத்துடனே பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளார்கள். ஆனால், `முடங்கியது உடல்தான். தன் அறிவு அல்ல' என நிரூபித்தார் ஆர்த்தி.

``என் அப்பா சென்ட்ரிங் வேலை பார்க்கிறார். அம்மா குடும்பத் தலைவி. என் அண்ணன் காலேஜ் போறாங்க. என்னால் படுத்துட்டேதான் இருக்க முடியும். எங்கே போறதா இருந்தாலும் அம்மாதான் தூக்கிட்டுப் போவாங்க. என் உயரமும் ஒன்றரை அடிதான். ஆரம்பத்துல வீட்டிலிருந்தே படிச்சேன். எனக்கு இன்னும் நிறைய படிக்கணும்னு ஆசை. அதனால், ஸ்கூலுக்குப் போறேன்னு சொன்னேன். வீட்டிலேயே இருந்துட்டு, முதல் தடவையா வெளியே வந்து ஸ்கூலுக்குள்ளே நுழைஞ்சப்போ அவ்வளவு ஜாலியா இருந்துச்சுக்கா. ஒரு டீச்சர் மாதிரி என் ஃப்ரண்ட்ஸுக்கு நானே சொல்லிக்கொடுப்பேன் தெரியுமா? வருங்காலத்துல எனக்கு டீச்சர் ஆகணும்னு ஆசைக்கா'' என அழகுப் புன்னகையுடன் கண்களில் கனவுகள் விரியச் சொல்கிறார் ஆர்த்தி. 

ஆர்த்தியின் அம்மா செல்வி, ``ஆர்த்தி ரொம்ப தைரியசாலி பொண்ணு. தனக்கு இப்படி ஒரு குறை இருக்கேன்னு என்னைக்குமே வருத்தப்பட்டதில்லே. இது வேணும் அது வேணும்னு அடம்பிடிக்க மாட்டா. எங்க வசதிக்கு என்ன வாங்கித் தரமுடியுமோ அதைக் கொடுப்போம். சிரிச்சுக்கிட்டே வாங்கிப்பா. எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் இவதான் உசுரு. மத்த பிள்ளைக மாதிரி என் பொண்ணால் ஓடி ஆடி விளையாட முடியலையேன்னு வருத்தம் ஓர் ஓரத்துல இருந்தாலும், அவளோட தைரியம் எங்களுக்கு ஆறுதலா இருக்கு. அவளை எங்கே கூட்டிட்டுப் போறதா இருந்தாலும் கார் ஒண்ணு பிடிச்சுப்போம். வார வாரம் சர்ச்சுக்குப் போவோம். ஆர்த்தி சந்தோஷமா இருந்தாலே போதும், படிக்க அனுப்பி கஷ்டப்படடுத்த வேணாம்னு நினைச்சோம். அதனால், ஸ்கூல் அட்மிஷன் போடும், வீட்டிலிருந்து நானே பாடங்களைச் சொல்லிக்கொடுத்தேன். நாலாம் வகுப்புக்கு அப்புறம்தான் ஸ்பெஷல் டீச்சர் பாடம் எடுத்தாங்க. அவங்க தைரியம் சொல்லித்தான் ஸ்கூலுக்கு அனுப்ப முடிவுசெஞ்சோம். ஆனால், அது ஈஸியா நடக்கலை. `ஆர்த்திக்குத் திடீர்னு உடம்பு முடியாமல் போயிட்டா நாங்க என்னம்மா பண்றது?'னு கேட்டு ஸ்கூலில் தயங்கினாங்க. `அவளுக்கு எல்லோரோடும் சேர்ந்து படிக்க ஆர்வம் இருக்கு'னு பேசி புரியவெச்சோம். இப்போ, ஸ்கூலில் ஆர்த்திதான் செல்லப் பிள்ளை. ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லோரும் ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்க. ஆர்த்தியே கிளாஸில் செமினார் எடுப்பா. ஆர்த்தியின் கையெழுத்து முத்து முத்தா இருக்கும். சூப்பரா பாட்டுப் பாடுவா. அவள் பாடினதை டேப்ரிக்கார்டுல ரெக்கார்டு பண்ணி வெச்சிருக்கோம். வீட்டுல சும்மா இருக்கும்போது கலரிங் பண்ணுவா'' என மகளின் திறமைகளை பூரிப்புடன் சொல்கிறார்.

அதேநேரம், அன்றாட வாழ்க்கையை நடத்துவதில் இருக்கும் சவால்களும் அந்தத் தாயின் குரலில் ஒலிக்கிறது, ``ஆர்த்திக்கு ஹோமியோபதி வைத்தியம் பார்க்கிறோம். என் வீட்டுக்காரரின் குறைஞ்ச சம்பளத்துலதான் குடும்பமும் ஆர்த்திக்கான செலவும் நடக்குது. கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி அவளுக்கு உடம்பு ரொம்ப முடியாம போயிடுச்சு. நுரையீரலில் சளி அடைச்சு, ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். இருபத்தஞ்சாயிரத்துக்கு மேலே செலவாச்சு. திடீர் திடீர்னு உடம்பு முடியாமல் போகும்போதெல்லாம் கடன் வாங்கியே சமாளிக்கிறோம். எப்போ என்ன ஆகும்னு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்கிறோம்'' என்று அடுத்து பேசமுடியாமல் கண் கலங்குகிறார்.

தன்னம்பிக்கையுடன் போராடும் ஆர்த்தியும் அவரின் பெற்றோரும் இவ்வகை பிரச்னைகளுடன் போராடுபவர்களுக்கு மிகச் சிறந்த ரோல் மாடல்கள்!

அடுத்த கட்டுரைக்கு