வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (25/06/2018)

கடைசி தொடர்பு:16:10 (25/06/2018)

பில்கேட்ஸ் நம்பும் காற்றிலிருக்கும் CO2வை எரிபொருளாக்கும் தொழில்நுட்பம்... எப்படிச் செயல்படும்?

பில்கேட்ஸ் நம்பும் காற்றிலிருக்கும் CO2வை எரிபொருளாக்கும் தொழில்நுட்பம்... எப்படிச் செயல்படும்?

ந்த உலகம் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டேயிருக்க ஏதாவது ஆற்றல் தேவைப்படுகிறது. திடீரென ஒரு நொடி நாம் பயன்படுத்தும் எரிபொருள்கள் காணாமல் போனால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். அடுத்த நொடியில் உலகம் அப்படியே நின்று விடும். வாகனங்கள் நகராமல் போகும், மின்சாரம் தடைப்படும், தொழிற்சாலைகள் இயங்காமல் போகும்.

சாலையில் செல்லும் வாகனங்கள்

இப்படிப் பல வருடங்களாகப் புதைபடிம எரிபொருள்கள்தாம் உலகுக்கு ஆற்றலை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றால் நமக்குப் பயன்கள் இருந்தாலும் அதை விடத் தீமைகளும் கொஞ்சம் அதிகம்தான். வளிமண்டலத்தில் கார்பன்-டை ஆக்சைடின் அளவு அதிகரித்ததில் நாம் பல வருடங்களாகப் பயன்படுத்தி வரும் புதைபடிம எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோல் மற்றும் இதரப் பொருள்களின் பங்கு அதிகம். கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் மனிதர்களால் 36.8 பில்லியன் மெட்ரிக் டன்கள் அளவுக்கு வளிமண்டலத்தில் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மாற்றுத் தீர்வுகள் குறைவு:

புகையை வெளியிடும் ஒரு தொழிற்சாலை

காலம் காலமாகப் பல மில்லியன் டன் நிலக்கரியும், பல மில்லியன் கேலன்கள் கச்சா எண்ணையும் நமக்கு எந்த அளவுக்கு ஆற்றலைக் கொடுத்ததோ அதை விட பல மடங்கு கார்பன்-டை ஆக்சைடை வளிமண்டலத்தில் கலக்கச் செய்திருக்கின்றன. காற்றில் கார்பன்-டை ஆக்சைடின் அளவு அதிகமாகிறது என்பதைக் கூறும் அறிக்கைகள் மாதத்துக்கு இரண்டாவது வெளியாகிவிடும். அதன் விளைவாக உண்டாகும் கால நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றியும் அனைவருக்கும் விழிப்புஉணர்வு இருக்கிறது. இருந்தாலும் நம்மால் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. காற்றில் அதிகரிக்கும் கார்பன்-டை ஆக்சைடின் அளவை நம்மால் குறைக்க முடியாது; இயற்கை மனது வைத்தால்தான் உண்டு. காற்றில் இருக்கும் கார்பன்-டை ஆக்சைடின் அளவைக் குறைப்பதற்கான மாற்றுத் தீர்வுகள் இங்கே அவ்வளவாக கிடையாது. 

எளிமையான " air-to-fuel" தொழில்நுட்பம்

கார்பன் இன்ஜினியரிங் அமைப்பு

இப்படிச் சுற்றுச்சூழல் பாதிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் கார்பன்-டை ஆக்சைடை எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை மிக விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறது  கனடாவைச் சேர்ந்த ``கார்பன் இன்ஜினீயரிங் " ( Carbon Engineering ) நிறுவனம். 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அடுத்த சில வருடங்களுக்குள்ளாகவே இந்தத் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து விட்டது. அதன் பிறகு கடந்த 2015-ம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் ஸ்குவாமிஷ் ( Squamish) என்ற இடத்தில் அதற்கான பரிசோதனை அமைப்பை நிறுவியது. பில் கேட்ஸ் மற்றும் இன்னும் சிலர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட இதைப் போலவே மற்றொரு நிறுவனம் காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை பிரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருந்தது அதனைச் செயல்படுத்துவதற்கும் இயக்கவும் செலவு அதிகம் ஆனது. ஆனால் ``கார்பன் இன்ஜினீயரிங் " உருவாக்கியிருக்கும் தொழில்நுட்பம் மிக எளிமையானது, செலவும் மிகக் குறைவு.

இயந்திரம்

இந்தத் தொழில்நுட்பம் செயல்படும் விதம் மிக எளிமையானது. காற்றானது பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் வடிகட்டும் அமைப்பினுள்ளே செல்லும், அதனுள்ளே காற்று செல்லும் போது அதிலிருந்து  co2 மட்டும் தனியாகப் பிரிக்கப்படும். பிறகு அது சிறு சிறு கால்சியம் கார்பனேட் உருண்டைகளாக மாற்றப்படும். அதன் பின்னர் அந்த உருண்டைகளை வெப்பப்படுத்துவதன் மூலமாகத் தனியாகச் சுத்தமான கார்பன்-டை ஆக்சைடை வாயு கிடைக்கும். அதைத் தண்ணீரிலிருந்து  பிரிக்கப்படும் ஹைட்ரஜன் வாயுவுடன் இணைத்தால் மீண்டும் ஹைட்ரோகார்பன் எரிபொருளாக மாற்ற முடியும். இதை வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்த முடியும்.

கார்பன் இன்ஜினியரிங் தொழில்நுட்பம்

இந்த மொத்தச் செயல்பாட்டுக்குத் தேவைப்படும் மின்சாரம் முற்றிலும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலங்களிலிருந்தே பெறப்படுகிறது. இதன் மூலமாக வளிமண்டலத்தில் அதிக அளவில் காணப்படும் கார்பன்-டை ஆக்சைடை குறைத்து சமநிலையில் இருக்கச் செய்ய முடியும் என நம்புகிறது கார்பன் இன்ஜினீயரிங் நிறுவனம். 

எதிர்காலத்தில் இருக்கும் மிகப்பெரிய சவால்

எப்படியும் உலகில் இருக்கும் புதைபடிம எரிபொருள்கள் பயன்படுத்தப்படும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் நூறு வருடங்களுக்குள்ளாகப் பற்றாக்குறை உருவாகலாம். அதற்கடுத்த சில நூறு வருடங்களில் கடும் பற்றாக்குறை நிலவலாம் என்று கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாற்று ஆற்றல் மூலங்களைக் கண்டுபிடிப்பது மனிதர்களின் முன்னால் இருக்கக் கூடிய மிகப்பெரிய சவால். மாற்று ஆற்றல் மூலங்களைக் கண்டறிவதற்கான முயற்சிகள் பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன. அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது. சமீபகாலமாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மேலும், இது போல பயன்படுத்தியது போக மீதமாகும் கழிவுகளையும் மீண்டும் ஆற்றல் தரும் பொருள்களாக மாற்றுவது எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும்.


டிரெண்டிங் @ விகடன்