வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (25/06/2018)

கடைசி தொடர்பு:20:50 (25/06/2018)

என்டார்க், கிராஸியா மாடல் ஸ்கூட்டர்களுக்கு கடும் சவால் - வருகிறது சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட்!

ஹோண்டா கிராஸியா, டிவிஎஸ் என்டார்க், ஏப்ரிலியா SR125, வெஸ்பா LX125 ஆகிய 125சிசி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக வரப்போகும் சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்டில் என்ன ஸ்பெஷல்?

என்டார்க், கிராஸியா மாடல் ஸ்கூட்டர்களுக்கு கடும் சவால் - வருகிறது சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட்!

பர்க்மேன் ஸ்ட்ரீட்... ஆம், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், 3 கலர்களில் சுஸூகி காட்சிப்படுத்திய மேக்ஸி ஸ்கூட்டர்தான் இது!

 

பர்க்மேன் ஸ்ட்ரீட்

 

இந்நிறுவனத்தின் பிரிமியம் ஸ்கூட்டராகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் Burgman Street, ஜூலை மாதத்தில் அறிமுகமாவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன! ஹோண்டா கிராஸியா, டிவிஎஸ் என்டார்க், ஏப்ரிலியா SR125, வெஸ்பா LX125 ஆகிய 125சிசி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக வரப்போகும் இதில் என்ன ஸ்பெஷல்?

 

டிசைன்

Burgman Street


உலகச் சந்தைகளில் பல்வேறு இன்ஜின் திறனில் (125சிசி, 200சிசி, 250சிசி, 400சிசி, 600சிசி) விற்பனை செய்யப்படும் Burgman Street, கைனடிக் ப்ளேஸ் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அறிமுகமாகப் போகும் இரண்டாவது மேக்ஸி ஸ்கூட்டராக இது இருக்கப்போகிறது. அதைப் பறைசாற்றும் விதமாக, முன்பக்கத்தில் பெரிய விண்ட் ஸ்க்ரீன் மற்றும் Apron - நீட்டான ஹெட்லைட் ஆகியவற்றின் தோற்றம் அமைந்திருக்கின்றன. இந்த சீரிஸ் ஸ்கூட்டர்களுக்கே உரித்தான விதத்தில், சொகுசை முன்னிருத்தி நீளமான சீட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இண்டிகேட்டர்கள் பொசிஷன் செய்யப்பட்ட விதமும் செம! குட்டியாக இருக்கும் எக்ஸாஸ்ட்டில், சில்வர் வேலைப்பாடு எட்டிப்பார்ப்பது அழகு. அலாய் புட் பெக்ஸும் அதற்கு நல்ல மேட்ச்.

சிறப்பம்சங்கள்

 

Burgman Street

 

ஹோண்டா கிராஸியாவைத் தொடர்ந்து, பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் LED ஹெட்லைட் இருக்கிறது! ஜிக்ஸரில் இருக்கும் அதே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ரியர் வியூ மிரர்கள், இந்த ஸ்கூட்டரிலும் இடம்பிடித்திருக்கிறது. பலவித அம்சங்களுடன் கூடிய கீ-ஸ்லாட், சீட்டுக்கு அடியே ஸ்டோரேஜ் ஸ்பேஸ், பைகளை மாட்ட Hook, 12V சார்ஜிங் பாயின்ட், LED டெயில் லைட், அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், MF பேட்டரி, கிராஸியா போலவே முன்பக்கத்தில் பாட்டில் - மொபைல் வைக்க இடம் எனப் போதுமான வசதிகளும் இருக்கின்றன. 5.6 லிட்டர் பெட்ரோல் டேங்க்கின் மூடி, வழக்கம்போல சீட்டுக்கு அடியே இருப்பதுதான் மைனஸ். 

இன்ஜின்

 

Burgman Street

 

ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே 124.3சிசி, சிங்கிள் சிலிண்டர், SEP இன்ஜின்தான், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இது வெளிப்படுத்தும் 8.6bhp பவர் மற்றும் 10.2 nm டார்க்கிலும் மாற்றமில்லை; அதேபோல, முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் - CBS டிஸ்க் பிரேக் - 12 இன்ச் வீவில் MRF 90/90 டயர் மற்றும் பின்பக்க மோனோஷாக் - CBS டிரம் பிரேக் - 10 இன்ச் வீலில் MRF 90/100 டயர் என மெக்கானிக்கல் செட்-அப், அப்படியே ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் இருப்பதுதான். இதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஏனெனில் அளவுகள் மற்றும் பாடி பேனல்களில் வித்தியாசம் இருப்பதால், ஆக்ஸஸைவிட 8 கிலோ எடை கூடிவிட்டது பர்க்மேன் ஸ்ட்ரீட் (110 கிலோ). இது பர்ஃபாமென்ஸில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, ஸ்கூட்டரை ஓட்டிப் பார்க்கும்போதுதான் தெரியும். 

 

விலை

 

Burgman Street

 

160மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸுடன், கெத்தாகக் காட்சியளிக்கிறது பர்க்மேன் ஸ்ட்ரீட். இந்த ஸ்கூட்டரின் உற்பத்தியை, சுஸூகி ஏற்கெனவே தொடங்கிவிட்டது; ஆனால், புக்கிங் குறித்து எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லாவிட்டாலும், டெல்லியில் இருக்கும் சில சுஸூகி டீலர்கள், கடந்த வாரத்தில் புக்கிங்கைத் (5,000 ரூபாய் முன்பதிவுத் தொகை) தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஆக்ஸஸ் ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும், அந்த ஸ்கூட்டரைவிட 5,000 முதல் 8,000 ரூபாய் வரை கூடுதல் விலையில், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் விலை இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இது மேக்ஸி ஸ்கூட்டர் எனச் சொல்லப்பட்டாலும், வழக்கமான 125சிசி இன்ஜினே இதில் இருப்பது, சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்