வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (26/06/2018)

கடைசி தொடர்பு:10:55 (26/06/2018)

திருநங்கைகளின் காதலைச் சமூகம் புரிந்துகொள்ளும் காலம் வருவது எப்போது?

நெஞ்சங்கள் வாசம் செய்யும் இரு உடல்கள், குறிப்பிட்ட இருபாலைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற விதைப்புதான், காதல் கொண்டாட்டங்களில் நேர்ந்த கொடுமையான கலப்படம்.

இரு கை விரல்கள் தொட்டுக்கொள்ளும்போது மழையின் இரண்டாம் துளி, முதல் துளி பற்றிக்கொண்ட தூசிகளையும் அழுக்குகளையும் இனி திரும்பிவர இயலாத் தூரத்துக்குத் தள்ளுவதைப் போன்று இருவரிடமிருந்தும் சில விஷயங்கள் தூரப் பறந்திருக்கும். இரு கைகளும் இணைந்துகொள்ளும்போது பல காலமாகச் சேர்த்துவைத்திருந்த அன்பின் அழுத்தம், அந்தச் சிறு பிணைப்பில் சேர்ந்திருக்கும். 

திருநங்கை

இதழ்கள் வழி வரும் முத்த எச்சிலில் அத்தனை காலமாகத் தெரிவிக்காத, கற்பனையில் நடக்கும் நேசப் பரிமாற்றங்கள், ஈரம் பரப்பியிருக்கும். அருகில் பகிரல்களைத் தொடங்கும் சில உரசல்கள், யுகங்களாகக் கனக்கும் ஏக்கங்களைப் பரிமாற்றிக் கடந்திருக்கும். கன்னத்தைத் தாங்கும் கரங்கள், சின்னஞ்சிறு இதயம் அத்தனை நாள்களாய்த் தானே விரும்பித் தாங்கிய பேரன்பின் சுமையைப் புரியவைத்திருக்கும்.

தலைகோதும் விரல்கள், அனுபவித்தறியாச் சிறு மழைச் சாரலின் குளிர்ச்சியைத் தூவியிருக்கும். தலை தாங்கும் மடி, கடந்த காலத்தில் தனிமை நிரப்பிப்போயிருந்த தருணங்களை ஒளியால் நிறைத்திருக்கும். இரு உடல்கள் அணைப்பில் இருக்கும்போது, அத்தனை காலமாகப் பதுக்கிவைத்திருந்த உணர்வுக்குவியல்களை வெள்ளமெனப் பாய்ச்சி அமிழ்த்தியிருக்கும். 

தோளும் தலையும் பேசிக்கொள்ளும் மொழியில், மற்றொருவராக வாழும் ரகசியம் பரிமாறப்பட்டிருக்கும். கண்களில் குடிகொள்ளும் மகிழ்வு கொடுக்கப்பட்ட அன்பினைச் சுமக்க இயலாமல் தடுமாறிக்கொண்டிருக்கும்.

காதல்... நம்மால் எவ்வளவு நேசிக்க முடியும், நம்மிடம் அன்பு செலுத்த எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை நமக்குக் காட்டிக்கொடுத்துச் செல்லும். அருவியை யாருக்குத்தான் பிடிக்காது? நம்மால் ஓர் அருவியை உருவாக்க முடிந்து, நாம் நனைந்துகொண்டே கொஞ்சம் கொஞ்சமாக அந்த அருவியின் சுற்றளவை அதிகரித்து அதிகரித்து, நம்மைத் தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்கூட நம் அருவியில் நனையும் அளவுக்கு அது பெரிதாகிவிட்டால்... அந்த மேஜிக் தானே காதல்? 

அன்புக்கு எண்ணற்ற வடிவங்கள் இருக்கலாம். அத்தனை வடிவங்களின் மொத்த சக்தியையும் காதல் தூண்டிவிடுவதால்தானே அது இத்தனை அழகு? காதலின் அற்புதமே இதுதான். அது நாம் எந்தளவுக்கு அன்பு செய்யமுடியும் என்பதைக் காட்டிக்கொடுக்கிறது. அதன்பின் நம் அன்பின் பெரும் சக்தியின் முன்பு நாமே செயலிழந்துவிடுகிறோம். அந்தப் பிரமிப்பினால் வெறுப்பு, கோபதாபங்கள் பொசுக்கென்று காணாமல் போய்விடுகின்றன. மனிதனின் குட்டி குட்டி மென்மைகளும் இணைந்துகொள்கின்றன. நம் அருவி கையில் பிடிக்கமுடியாத அளவிலிருந்து, பிரமாண்ட அளவுக்குப் பெரிதாகிறது. அடடடா! இந்த அழகைத்தானே கொண்டாடித் தீர்க்கமுடியாமல் மனித சமுதாயம் நூற்றாண்டுகளைச் சாப்பிட்டுவிட்டது.

திருநங்கை

கொண்டாட்டங்களில் அவ்வப்போது சில தனி மனித லாபங்கள் கலக்கப்பட்டுவிடும். காதலும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதுதான் மனிதப் பேரன்பின் பெரும் சோகம். இணைந்துகொள்ளும் கைகள், தோள்கள், முத்தங்கள் என அனைத்தும் இந்தக் காதலின் அன்பைக் கடத்த அந்த நெஞ்சங்களில் காதல் இருந்தால் போதுமே? நெஞ்சங்கள் வாசம் செய்யும் இரு உடல்கள் குறிப்பிட்ட இருபாலைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற விதைப்புதான், காதல் கொண்டாட்டங்களில் நேர்ந்த கொடுமையான கலப்படம். விளைவு... ஆணுக்கும் பெண்ணுக்கும் நேர்ந்தால் மட்டுமே காதல் கொண்டாடப்பட வேண்டும் என்ற திணிப்பு; திருநங்கைகள், திருநம்பிகளின் காதலில் வலிந்து தடவப்பட்ட சேறு. 

அவர்களின் காதலைக் கொண்டாடச் சொல்லி அவர்கள் கேட்பதில்லை. ஆனால், வெகு தூரத்திலிருந்தே இப்படிப்பட்டவர்களின் அருவியைப் பார்த்து அருவருப்பு என ஒதுக்கினால், எப்பேர்பட்ட காயத்தை அவர்களுள் விதைக்கிறோம். ஏற்கெனவே தங்கள் அடையாளம் குறித்துத் தாங்க இயலா சோகம் சுமந்திருப்பவர்களிடம், மென்மேலும் குற்றவுணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் வளர்க்கிறோம். நாள்தோறும் நடக்கும் தற்கொலைகளில் சில நமது இந்தப் புறக்கணிப்பால் நடக்கிறது. என்ன கொடூரம் இது? காதல் நமக்கு வாழ்வை நேசிக்கத்தான் சொல்லிக்கொடுக்கும். ஆனால், நாம் வகுத்த விதிகளில் சேராதவர்களுக்கு இந்தப் புறக்கணிப்பே தற்கொலைக்குத் தூண்டிவிடுகிறதென்றால், காதலின் சக்தியையும் விஞ்சிய நம் வெறுப்பின் சக்தியை அச்சத்துடன் அணுகவேண்டியிருக்கிறது.

காதல் அழகுதான், ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் இருந்தால் மட்டுமே என்ற நமது விதி, காதலையே அவமதிப்பது போன்றுதானே? போதும்... இயற்கையே தீர்மானிக்கும் விஷயங்களைச் சரியென்றும் தவறென்றும் பாகுபடுத்த நாம் யார்? அதுசரி, இந்த விஷயம் நமக்குத் தெரியாததால்தானே நம் சூழல் இப்படியிருக்கிறது. காயங்களை ஆற்றுப்படுத்தும் சக்தி காதலுக்கு உண்டு. காதலிப்பவர்கள் உலகின் முகத்தில் பதிந்துள்ள ரணங்களைப் பூக்களால் கலைக்கிறார்கள். அவர்களை அதைச் செய்யவிடுவோமே! ஏற்கெனவே சிலரை நாம் சமூகத்தின் விளிம்பில் தள்ளி மிதித்துக்கொண்டிருக்கிறோம். அவர்களின் காதலையும் அருவருத்து ஒதுக்குதல் என்ன நியாயம்?

இனி, காதலர்களின் சில அற்புதத் தருணங்களைக் கடக்க நேர்ந்தால், அற்பமாக அவர்கள் எந்தெந்தப் பாலினத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நோட்டமிடாமல், காதலின் நேர்முக அதிர்வுகளை வாங்கிக்கொள்வோம். காதல் எங்கிருந்தால் என்ன? அதைக் கொண்டாடுவதற்கே நமக்குக் காலம் போதவில்லை அல்லவா? இதில் இருப்பிட ஆராய்ச்சிகளும் விதிகளும் எதற்கு? கொண்டாடித் தீர்க்கலாமா காதலை?

சமூகத்தின் ஓர் அங்கமான நான் திருநங்கைகளின் காதலை மனப்பூர்வமாகக் கைத்தட்டி வரவேற்கிறேன். நீங்கள்? 


டிரெண்டிங் @ விகடன்