வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (27/06/2018)

கடைசி தொடர்பு:11:22 (27/06/2018)

நட்சத்திரங்களை வலை போட்டுப் பிடிக்க வேண்டும் என்கிறார் இந்த விஞ்ஞானி... ஏன் எப்படி?

ஒருவேளை நாம் அந்த அளவுக்கு நமது தொழில்நுட்பத்தை வளர்த்துகொள்ளும் முன்னரே ஏலியன்கள் அதைச் செய்துவிட்டால்?

நட்சத்திரங்களை வலை போட்டுப் பிடிக்க வேண்டும் என்கிறார் இந்த விஞ்ஞானி... ஏன் எப்படி?

``பூமிவாசிகளே...! நீங்கள் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் ஆட்சி செய்யவேண்டுமா? மூன்று முக்கியப் பணிகளை நீங்கள் செய்யவேண்டும்.

1. இந்தக் கிரகத்தின் அனைத்து ஆற்றலையும் சேமியுங்கள்.
2. கிரகத்துக்கு அருகே உள்ள நட்சத்திரங்களின் ஆற்றல் அனைத்தையும் சேமித்துக்கொள்ளுங்கள்.
3. உங்கள் கேலக்ஸியின் அனைத்து நட்சத்திரங்களின் மொத்த ஆற்றலையும் உறிஞ்சியெடுங்கள்.

இவை மூன்றையும் முழுமையாகச் செய்தபிறகு அந்த ஆற்றலைப் பயன்படுத்தி அடுத்த கேலக்ஸியை நோக்கிய உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள்." என்று 1962-ம் ஆண்டு ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் நிக்கோலாய் கர்தாஷேவ் கூறினார்.

ஒருவேளை நாம் அந்த அளவுக்கு நமது தொழில்நுட்பத்தை வளர்த்துகொள்ளும் முன்னரே ஏலியன்கள் அதைச் செய்துவிட்டால்?
ஒருவேளை நமக்கும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ஏலியன்களின் தொழில்நுட்பம் நம்மைவிட முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தால்?

ஒருவேளை என்பது அனைத்துமே ஊகம்தான். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர் டான் ஹூப்பர் (Dan Hooper) கூறுகிறார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியரான அவர் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டார். கண்டங்கள் தாண்டி மட்டுமே பரந்திருக்கும் தற்போதைய மனித நாகரிகத்தைக் காலக்ஸிகள் தாண்டியும் விஸ்தரிக்க வைப்பதற்கான வழிகளைத் தேடியது அவரது ஆய்வு. 1962-ம் ஆண்டில் கர்தாஷேவ் கூறிய ``நட்சத்திரங்களின் ஆற்றலைச் சேமியுங்கள்" என்ற கோட்பாட்டையே இவரும் முன்வைக்கிறார்.

 நட்சத்திரங்கள் விண்வெளி

நட்சத்திரங்களின் ஆற்றலை அறுவடை செய்வதே பிரபஞ்சத்தின் சிறந்த நாகரிகமாக நாம் முன்னேறுவதற்கான ஒரே வழி என்கிறார் இவர். விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தை மேலும் விரிவடையாமல் தடுப்பதற்கும் இதுவே சரியான வழியென்றும் அவர் முன்வைக்கிறார். ஒருவேளை பிரபஞ்சம் மேலும் விரிவடைந்தால் விண்வெளியின் பரந்த இருளில் நாம் மட்டுமே தனியாக நிற்கவேண்டிய சூழல்கூட ஏற்படலாம்.

விண்வெளியில் நீக்கமற நிறைந்திருக்கும் இருளாற்றல், பிரபஞ்சம் மேன்மேலும் விரிவடைதற்கான உந்துசக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது விரிவடையும் வேகத்தை வைத்துக் கணக்கிட்டால் அடுத்த 100 பில்லியன் வருடங்களுக்குள் நமக்கு அருகிலிருக்கும் நட்சத்திரங்கள் நமது கண்களுக்குப் புலப்படாத அளவுக்கு வெகுதூரத்துக்குத் தள்ளப்படலாம். இதன்மூலம் பிரபஞ்சத்தில் மீளா தனிமையில் நமது பால்வீதி மண்டலம் தள்ளப்படும். மற்ற கேலக்ஸிகளில் நடக்கும் மாற்றங்களைத் தற்போது போல் கவனிக்க முடியாமல் போகும். அப்போது நட்சத்திரங்கள் நம்மால் கண்டுபிடிக்க முடியாத, அணுகமுடியாத தூரத்துக்குச் சென்றுவிடும்.
அது நடப்பதற்கு முன்பே மற்ற கேலக்ஸிகளையும் அவற்றின் நட்சத்திரங்களையும் தற்போது நாம் கண்காணிக்க முடிந்ததுபோல் அவற்றை அணுகவும் முடிந்தால்? அவற்றின் ஆற்றல் முழுவதையும் நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால்? இன்றில்லையென்றாலும் ஒரு நாள் அது நிச்சயம் நடக்கும் என்கிறார் ஹூப்பர். அதாவது தற்போது தூர தேசங்களுக்குப் பறப்பதுபோல் மனிதர்களால் மற்ற தூர கேலக்ஸிகளுக்கும் பறக்க முடியும். அதன்மூலம் இந்தப் பிரபஞ்சத்தில் மற்ற உயிரினங்களோடும் அதாவது ஏலியன்களோடும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். நாம் அடுத்து முயற்சி செய்ய வேண்டியது அதுவே. 

விண்வெளிக் கப்பல்

ஒருவேளை அதுபோன்ற தொழில்நுட்பங்களையும், விண்வெளிக் கப்பல்களையும் இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் வேறு யாரேனும் உருவாக்கியிருந்தால் அவர்கள் வெறுமனே சோம்பேறிகளாக உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இந்நேரம் அவர்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருப்பார்கள். நட்சத்திரங்களைச் சுரண்டி ஆற்றலைச் சேமிப்பதும், கேலக்ஸிகளுக்குப் பயணிப்பதும் இந்நேரம் நடந்துகொண்டிருக்கலாம்.

இருளின் ஆழத்தில் எங்காவது ஓரிடத்திலிருந்து அவர்கள் கிளம்பியிருந்தால் தங்கள் பார்வையில் இருக்கும் நட்சத்திரங்கள் மறைவதற்கு முன்னரே அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். தங்கள் திறனையும் தரத்தையும் விரிவாக்கிக் கொள்வதற்காக இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பயணிக்கத் தொடங்கியிருப்பார்கள்.

ஆனால், நட்சத்திரத்தை எப்படிப் பிடிப்பது?
விஞ்ஞானிகளும், அறிவியல் புனைகதை எழுத்தாளர்களும் இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்தனர். அந்தக் கேள்விக்குப் பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பதில் நட்சத்திரத்தை மீன் பிடிப்பதைப்போல் ராட்சச வலையைப் போட்டுப் பிடிக்க வேண்டுமாம். ஆனால், இந்த வலை டிவைன் நூலாலும், இரும்பாலும் செய்யப்பட்டதாக இருக்காது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களால் ஆனது. முழுக்க முழுக்க சூரிய வெப்பத்தால் செயல்படும் செயற்கைக் கோள்கள். சூரியனைப் போலவே வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்களின் வெப்பத்தையே ஆற்றலாகப் பயன்படுத்தி இதைச் செய்துவிடலாம். அதன்மூலம் உறிஞ்சப்படும் ஆற்றலை அருகிலிருக்கும் கிரகத்தில் சேமித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது நடைமுறைச் சாத்தியமில்லாததாகத் தோன்றலாம். சாத்தியமற்ற விண்வெளிப் பயணத்தைச் சாத்தியமாக்கிய நம்மால் இதை நிச்சயம் சாதிக்க முடியுமென்கிறார் ஹூப்பர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் தோன்றும் ஒரே கேள்வி.

பிரபஞ்சம்

ஒருவேளை இதே பயணத்தை இந்நேரம் பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூளையிலிருந்து வேறு யாரேனும் தொடங்கியிருந்தால்?
நட்சத்திரங்களைச் சுரண்டிக்கொண்டே வரும் அவர்களின் பாதையில் எப்போதேனும் நமது சூரியன் தென்பட்டால்?


டிரெண்டிங் @ விகடன்